Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘தொலை’ பேசி

அந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். இந்தத் தொலைபேசி எண் அவளுக்கு எப்படி கிடைத்தது?

கல்லூரியின் கடைசி ஆண்டின் கடைசி நாள். நீங்க எல்லாரும் என்ன செஞ்சீங்கன்னு கேட்டா எல்லார் மனசுமே பாரமாத்தான் இருக்கும். இன்றைக்கு அது ரொம்பவே பாரமா இருக்கு.

காலேஜ் படிக்கிற வரைக்கும் எந்த அவளுக்கும் இடம் கொடுக்காமல் லைஃப ரொம்பவே ஜாலியா அது வர போக்குல எடுத்துகிட்டு எவ்வளவு நல்ல பையனா இருந்தேன். அதனால தானே ஃபர்ஸ்ட் இயர் படிச்சிகிட்டு இருந்த அவ வந்து என்னோட கடைசி நாள் அன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணப்ப – ” உனக்கு இப்போ என்ன வயசு.. ஒரு 18 இருக்குமா மனித உடல் காந்தமா செயல் படுற வயசு.. உன்னோட உலகம்…மிஞ்சிப்போனா இந்த காலேஜ், உன் ஃப்ரெண்ட்ஸ், நாலஞ்சு பழைய புக்ஸ் அவ்வளவு தானே.. இன்னும் உலக்த்துல நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. நீ ஒன்னு பண்ணு காலேஜ் முடி அப்புறம் ஒரு வருஷம் எங்கையாவது வேலை பண்ணு. அதுக்கு அப்புறமும் என் மேல லவ்வு இருந்தா சொல்லு நான் ஏத்துக்குறேன்” என்று வெறித்தனமா அட்வைஸ் கொடுத்திட்டு வந்தேன்.

அப்படி இருந்த நான் போன வருஷம் அவ ஃபோன் பண்ணி “வணக்கம் சீனியரே… அஞ்சு வருஷம் எனக்கு பஞ்சா பறந்திடுச்சு. ஆனா இன்னும் என் மனசுல பத்திகிட்ட நெருப்பு அனையல… நான் இன்னும் உங்களை மறக்கல….நீங்க எப்படி? இப்பவாவது நினைப்பீங்களா… இல்லை திரும்பியும் நீ பார்க்கவேண்டிய உலகம் நிறையா இருக்குன்னு கதை சொல்லுவீங்களா? சீனியர்… உலகம் எவ்வளவு பெரிசா வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனா என் உலகம் முழுவதும் நீங்க மட்டும் தான் நிறைஞ்சு இருக்கீங்க.” என்று எதிர் பாராத நேரத்தில் சொல்லும்போது எனக்கென்று ஒரு அவள் கிடைத்து விட்டாள் என்று நினைச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டோம். என் மேல அவ வச்சிருந்த தீராத காதலை யார் மறுக்க முடியும். அந்த காதல் எனக்கு தெரியாமலேயே நான் எங்கையோ போய் செட்டில் ஆயிருக்கக் கூடாதா…

இப்போ அதே காதலைக் காரணம் காட்டியே “உன் மேல இருக்கிற அளவுக்கு என் வீட்டுக்காரங்களையும் நேசிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடு”ன்னு ஃபோன்லையே கேட்டா. சரி அதைத்தான் ஒத்துகிட்டேன். திரும்பி போன் வாரம்  ஃபோன் பண்ணி “என்னை மறந்திடு”னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு வச்சா இந்தக் காதல் அவ்வளவு சுலபமான விஷ்யமா ஆயிடுச்சா என்ன? ஒரு வருஷம் கொஞ்சம் பயமா இருந்தாலும் அங்க இங்கன்னு சுத்தினோம். ஆனா அதிக நேரம் அளவளாவினது, சண்டை போட்டது எல்லாமே இந்த ஃபோன்ல தான். அவ நினைச்ச நேரத்துக்கு ஃபோன் எடுக்கலைன்னா அதுக்குன்னு ஸ்பெஷல் சண்டை. ஒவ்வொரு சண்டையிலும் தான் எங்கள் உறவு ரொம்பவே பலுப்பட்டது. இப்போ மறந்திடுன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டாளே. மறந்தே தீர்க்க வேண்டிய கட்டாயத்துல கொண்டு வந்து விட்டு விட்டாளே.

ஒரு வாரமா அவகிட்ட இருந்து தகவல் இல்லையேன்னு அவளோட காதலை எவ்வளவு கரிச்சு கொட்டினேன்.  அவ மறந்திடுன்னு சொன்னா அதுதான் கடைசி வார்த்தையா.

ஆனா இவளுக்கு எப்படி என் நம்பர் தெரியும். அவள் கூட வேலை பார்க்கிறவள். ஆம் அவள் தான் இன்று காலை ஃபோன் பண்ணி அந்தச் செய்தியைச் சொன்னாள். ஏதோ…  உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பித்திரியில அட்மிட் ஆயிருந்த அம்மாவை பார்க்கப் போய்கிட்டு இருந்த அவளுக்கு போன வாரம் ஆக்ஸிடெண்டாம். ஸ்பாட்லையே….. .

இந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை……………:(

புதிராய்ப் போன கனவுகளோடு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை என்ற சிறுகதை (சிறுகதைன்னா என்னன்னே தெரியாத வயசுலன்னு வச்சுக்கூங்களேன்.. இன்னும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்:(  ) மூலம் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த வலைப்பூவைத் துவங்கினேன்.  இதற்கு இப்பொழுது மத்திய அரசுப் பணியில் இருக்கும் தியாகராஜனுக்கு தான் பல கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.. அவர்தான் என்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தினார்.

புதிய அனுபவங்கள்,  இனிய நட்புகள்..:)  என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் நலம் விரும்பிகளின் எண்ணிக்கைகளும் அதிகரிக்கத் துவங்கியது…  மீண்டும் மீண்டும் தோல்விகள் என்னும் பாடங்களின் சாம்பல்களுக்குள் புழுவாய் படிக்க நேர்ந்ததால் இவர்களோடும் தொடர்புகள் விடப்பட்டன… மிகச்சிலராய் சென்ஷி, முத்தக்கா என்று இரு பதிவர்களோடு மட்டுமே எனது வட்டம் சுருங்கியது… இவர்களே வலையுலகோடு எனது உறவு இன்றும் நீடிக்க பாலமாய் அமைந்தவர்கள்

எனது மூன்றாவது நேர்முகத் தேர்வின்போது எனது பார்வையில் பாலபாரதி ஏற்படுத்திய பரிமாணங்களை மறைக்க முடியாது… ஆறாவது முயற்சியில் தோல்வி பெற்றபின் அவருடைய ஊக்குவிக்கும் வார்த்தைகளை இன்னும் மறக்க மாட்டேன்.

ஏழாவது.. என்னுடைய கடைசி படையெடுப்பின் போது வாழ்ந்து வந்த அஞ்ஞாத வாச காலங்களிலும் தமிழ் இலக்கிய பாடங்களுக்கு சென்ஷி திரட்டித்தந்த குறிப்புகளும், பதிவுகளும் நிச்சயம் என்னை நெகிழ வைத்தது. ஒரே ஒரு முறைதான் அவரை பார்த்து இருக்கிறேன்.  சோர்வான பொழுதுகளில்  சேட் செய்யும் நேரங்களிலும் அவருடைய வார்த்தைகளின் கதகதப்பும் என் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து உள்ளது.

எல்லாம் முடித்து வெற்றியின் கனியை பறித்து வரும்பொழுது அதன் சுவையைப் பகிர வலையுலகில் எனக்கென்று யாருள்ளார் என்று நினைக்கையிலும்… என்னையும் ஒரு மனுசனா மதிச்சு எனக்காக பதிவு போட்ட சென்ஷிக்கும், என்னை வாழ்த்தி எனக்கென்று தேன்கிண்ணத்தில் பாடல் வழங்கிய முத்தக்காவுக்கும்,  அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து கொடுத்த ஆதவனுக்கும் (உன்னை இன்னும் மறக்கவில்லை தல).. அதை படித்துவிட்டு என்னை கைபேசியிலும், என் வலைப்பூவிலும் என்னை வந்து வாழ்த்திய விருந்தினர்களுக்கும்… என் அண்ணன் பாலபாரதிக்கும்.. எனது போலீஸ்  சல்யூட்…

இனி இருக்கும் வேலைப்பளுவினூடேயும் நான் சந்திக்க இருக்கும் பல சவால்களையும், சந்தேகங்களையும் உங்களோடு (இனியாவது) பகிர முடியும் என்று நம்புகிறேன்…. நன்றி நண்பர்களே…

பி.கு:)  அந்த ஃபோட்டோவுல இருக்கிறது நான் தானாம் அம்மா சொன்னாங்க..:)))

மைனி நல்லா இருக்கீகளா?  பார்த்து எம்புட்டு நாளாச்சு பிள்ளைள் எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கோ..  என்னத்த சொல்ல வாக்கப்பட்டு போன இடத்துல கண்ணைக் கசக்கிகிட்டு வரக்கூடாதுன்னு எவ்வளவு தான் பார்த்து பார்த்து கண்ணாலம் முடிச்சாலும்.. வெங்காயம் நறுக்கும் போதாவது கண்ணு கலங்கத்தேன் செய்யுது.. என் வூட்ல அவுக பாடத்தான் சொல்லுதேன்.. தவசுப்புள்ளைய கண்ணாலம் பண்ணா கண்ணு கலங்காம இருக்க முடியுமா..? வருஷம் பத்தாவது அவுகளும் இன்னும் வீடு வீடா போயி சமச்சு கொட்டிகிட்டுதேன இருக்காக. இப்பொகூட முக்குவீட்டு சரசு இல்லை அவுக ரெண்டாவது மகனுக்கு நிச்சியதார்த்தமா அதுக்குதேன் வந்தோம்.  வீட்டுக்கு அஞ்சு புள்ளைக இருந்தா எங்க பொழப்பு ஏதோ ஓடிகிட்டு கிடக்குது.. அவ மவ சடங்கானதுல ஆரம்பிச்சுது, பொறகு மூத்தவன் கிட்டினன் கண்ணாலம், அவ மவ கண்ணாலம், அப்புறம் அவுக தல பேத்தி காது குத்து, மொட்ட போடறதுன்னு வருசத்துக்கு ஒரு விசேஷமாவது வந்துடுதுல்ல..

 

அது சரி உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா அவ மூத்த மருமவ முத்தம்மா இல்ல போன தடவ பிள்ளை காது குத்துக்காக வந்திருதாவல்ல அப்பதேன் மருந்த குடிச்சுப்புட்டாளாம்… யாருக்கும் இத சொல்லவே இல்ல மைனி சொன்னா மானம் போகிடுமில்ல.. மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம்.  நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இப்படின்னு சொன்னாக..வூட்ல அத்தனை பேரு இருந்தும் எல்லாரும் துணியெடுக்க கடைக்கு போயிருந்த நேரம் பார்த்து இப்படி பண்ணிபுடுச்சாம்.  அவ மாமனாரு உடம்பு சரியில்லன்னு வூட்லயே இருந்திருக்காரு.. தண்ணி குடிக்க அடுப்படிக்கு போனா மயங்கி கிடந்திருக்கா… உடனே ஃபோனப் போட்டு அம்புட்டு பேரையும் வரவச்சு காப்பாத்திட்டாக..

ம்ம்..  என்னத்தன்னு சொல்ல.. செவத்த பொண்ணா வேணும்னு நகை நட்டு இல்லாட்டிலும் பரவாயில்லன்னு தேடித் தேடி முடிச்சாக.  சும்மா சொல்லக்கூடாது மருமவன்னா அப்படி வேணும்னு தான் ரெண்டாவது மயனுக்கும் தேடு தேடுன்னு தேடுனாவ.. முகஞ்சுளிக்காம வேல பாப்பாத்தா.. என்னதேன் முகஞ்சுளிக்கலனாலும் இப்படியா வசக்கி எடுப்பாவ.. அதுலயும் அவ மவா இருக்கா பாரு ராட்ச்சசி.. அங்க ராஜ்ஜியமே பிள்ளைகளுதுதான… ஒரு வார்த்த யாராவது சொல்லிட்டா வீலு வீலுன்னு வருவா பாக்கணும்.. அப்பாவும் அம்மாவும் அதுகளுக்கு பயந்துதேன் கெடப்பாக.  இப்படித்தான் சரசு நாத்தானா இருக்கால்ல சுப்பு அவ மவகிட்ட அண்ணாச்சி அதான் கிட்டினன் அப்பா தப்பா நடந்துக்க  முயற்சி செஞ்சு இருக்காரு.  வெளில தெரிஞ்சா நம்ம அண்ணன் மானமில்ல போகும்னு நல்ல விதமா பிள்ளைள் கிட்ட சொல்லி புத்தி சொல்லச் சொல்லலாம்னு வந்திருக்கா அப்பவும் அவ மகா தான் யாரப்பாத்து என்ன் பேச்சு பேசுதன்னு ஒரே கூப்பாடு போட்டு விரட்டி அடிச்சிருக்கா அதுக்கப்புறம் அப்பனை என்னச்சத்தம் போட்டுதுகளோ தெரியல இப்போ ஒழுங்கா இருக்காராம். இத்தனை வயசுக்கு மேலயும் அவருக்கு அப்படி ஒரு புத்தி…

 

முத்தம்மா ஆத்தாதான் கூப்பாடு போட்டு அழுகுதா.. பெரிய குடும்பமா இருந்தாலும் இவுக கிட்டயா மாரடிக்கப்  போறா… மாப்புள்ளைக்கு சேலத்துல மில்லுல வேலையாச்சேன்னு கட்டிக்கொடுத்தேன் ஆனா இங்க வரும்போதெல்லாம் அம்மா வீட்டுக்குகூட அனுப்பாம வசக்கி எடுக்காகன்னு அழுகுதா… நகை பணம்னு எதிர்பார்க்காம இருந்தாவளேன்னு கட்டிக்கொடுத்தேன்.. இப்போ கொளுந்தமாருக எங்க தங்கச்சிக்கு அப்படி செஞ்சோம் இப்படி செஞ்சோம்னு குத்திக் குத்தி பேசுறானுகளாம்.. அப்படி ஏதோ சொல்லிப்புட்டாகன்னுதான் சாகப்பாத்திருக்கான்னு ஒரே அழுக.. அப்படியும் கண்ணாலத்தப்போ இல்லாத பேச்சு இப்பவா மூணு வருசம் கழிச்சு புள்ளப் பெத்தப் பொறகா வரும்… எனக்கு ஒன்னும் புரியல.. அவளும் என்னத்தன்னு செய்வா என்னதான் இவளை நல்லா பாத்துகிட்டாலும் தம்பி தங்கச்சிய பகைக்கக் கூடாதுன்னு இவா அவுகளப்பத்தி என்னத்த சொன்னாலும் ஒன்னும் கண்டுக்கிட மாட்டானாம். இப்படியா பொண்டாட்டி கொறைய கேக்காத ஆம்பளையா வந்து வாய்ப்பான்.  ஆனாலும் கைப்புள்ளைய வுட்டுட்டுப் போவணும்னு நினைக்குற அளவுக்கு அவளுக்கு சோதன வந்திருக்கு பாரு..

இப்பொ என்ன நடந்துச்சோ என்னவோன்னு தெரியல இப்பல்லாம் அவ கூடவேதான் அலையுதானாம்.  போன ஒரு வருஷமா தான் அப்பா அம்மா வூட்டுக்குக்கூட தனியா விடறது இல்லயாம் வந்தா கையோடவே கூட்டிகிட்டு போறானாம்.  எப்படியோத்தா நல்லா இருந்தாகன்னா சரி.  என்னதேன் காலம் மாறினாலும் பொம்பளப்பிள்ளைகளுக்கு வர சோதன மட்டும் மாறவா போகுது… இதுகளா சோதனயதாண்ட பழக்கப் படுத்திகிட்டாத்தான் உண்டு.  சரித்தா நேரமாவுது விசேஷ வூட்ல எல்லாருக்கும் காபி கலக்கணும் தேடுவாக.  அண்ணன் வந்தா கேட்டேன்னு சொல்லு.

ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம் புரிஞ்சிருக்கும்…

அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள விருந்தாளிகள் புத்தகத்துல “கடவுள் இப்பள்ளிக்கூடத்திற்கு மேலும் மேலும் அபிவிருக்தியைக் கொடுக்கட்டும்”னு எழுதி கையெழுத்து போட்டு இருக்காராம்.  இதை அவரது இயக்கித்தின் காரணமாக அந்தப் பள்ளிக்கூடத்து நிர்வாகிகள் (அவர்களும் நாயக்கர் என்ற பின் குறிப்பு வேற அந்த செய்திக்கு) மறைமுகமா வைத்து இருந்ததா அந்த செய்தித் தாள்ல போட்டு இருக்கு.

நான் பெரியாரை அவ்வளவா படிச்சு இல்லைனாலும் நான் புரிஞ்சு வச்சுகிட்டது அவரோட எதிர்ப்பு மூட நம்பிக்கைகள்க்கு மட்டும் தான்னுதான்.  ஆனால் அவர் கடவுளுக்கும் எதிரின்னு பேசிகிட்டு இருக்குறவங்க இதுக்கு என்ன பதில் சொல்றாங்கன்னு தெரியல. !!!

அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான்.  அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு.  ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு.  குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்

காதல காதல் அறியாமை உய்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை அந்த அரசன் அந்த விருப்பத்துக்குக்கூட தெரியாம நுகர வல்லவன் ஆனால் அவனை பகைவர்கள் அழிக்க வழியே இல்லைன்னு சொல்றாரு.

அவரு குற்றம்னு இந்த அதிகாரத்துல சொல்றது 6 அவை செருக்கு, சினம், காமம், கஞ்சத்தனம், மானம், உவகை…  இதுல கஞ்சத்தனம், மானம், செருக்கு இவற்றோட தீமைகளைப் பற்றி 8வது 9வது குறள்ல விளக்கினவரு கடைசி குறளை இப்படி அமச்சிருக்காரு.  அதாவது கோபம், காமம், உவகை மூன்றும் முற்றிலும் அழிக்க முடியாததால அந்த மூன்றையும் அந்த மூன்றுக்கும் அறியாம நுகர வேண்டுமாம்.  இதை நான் சொல்லல நம்ம  பரிமேல் அழ்கர் சொல்றாரு.  நல்லா இருக்கு இல்லை.

அப்போ சாமியாரா போகனும்னு நினைக்குற ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சா அவ மானம் அவளோட கொள்கை அழியாமல் காக்கப்படணும்னா இப்படித்தான அந்த காதலுக்கே அறியாமல் நுகர வேண்டியதா இருக்கும்.  வைரன் சரியான முறையில வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கிதானே எழுதி இருக்கான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.  இப்போ அந்த பாட்டைக்கேட்கும்போது அந்த பெண்ணுக்குள்ளேயே நம்மால போய்வர முடியும் இல்லையா?

இதோ ஆஸ்கார் விருது பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கு எனது நண்பன் அவரது சாதனைகளை வைத்து எழுதிய ஒரு சிறு கவிதை.  உங்கள் பார்வைக்காக. ஆங்கிலத்தில் முன்னுரை இருந்தாலும் கவிதை தமிழில்தான் குழம்பிவிட வேண்டாம்.

எனது மனங்கவர்ந்த தொலைக்காட்சி விளபரங்களைப் பார்க்க

இங்கே க்ளிக்குங்கள்

ரொமப நாள் கழிச்சு ஒரு படத்தை அது வெளியிடற அன்றைக்கே பார்த்தாச்சு… அதுதான் முதல் ஆளா அதைப் பற்றி எழுதனும்னு எழுதுறேன்… ஆனா படத்தோட கதைய நான் சொல்ல போறது இல்லை.

சரி படத்தைப் பற்றி..

விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா (சேது- தேவதாசிகள் மற்றும் மனநோய் குன்றியவர்கள், நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள், பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்)  இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம் பிச்சைக் காரங்க… ஆமாம் நல்லா இருக்கிறவங்களை முடமாக்கி பிச்சை எடுக்க வச்சு சம்பாதிக்கிறவங்க. படத்தோட பெரிய பலம் என்னன்னா  வர்த்தக ரீதியான பாட்டு, கூத்து, காமத்தைக் கிளறி விடுகிற காட்சிகள் அழகான அரை குறை ஆடை போட்ட நாயகி, காதல் அப்படின்னு எதுவுமே இல்லாமல், எல்லோரும் பேசவே கஷ்டப் படுகிறவங்களோட வாழ்க்கைய அதிகமா முகம் சுளிக்க வைக்காம ஜனரஞ்சகமா எடுத்திருக்கிற விதம் ரொம்ப அருமை.  அதைவிட அகோரிகளின் (கபாலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு இந்து மத வகுப்பினர்) வாழ்க்கையையும் அதில் இருக்கிற எந்த முரண்பாடுகளையும் தொடாமல் அழகாகக் கையாண்டிருக்கிற விதம் அருமை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை கருவாக வைத்து தலைப்பும் வைத்ததாலோ என்னவோ வழக்கம்போல் பாலா படத்தின் முடிவை யூகிக்க முடிகிறது. ‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’ என்ற படத்தின் உயிர் நாடியான வசனம் அருமை. ( இந்த தத்துவத்தில் இரெண்டிற்குமே மரணம் தானான்னு கேள்வி எனக்குள்ளயும் எழும்பியது) ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமும் நிறையவே இருக்கு. மொத்தத்தில் பாலாவின் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியும், பல வருடங்கள் பட்ட கஷ்டமும் நன்றாகவே தெரிகிறது.

நடிப்புன்னு பார்த்தீங்கன்னா ஆர்யாவுக்கு எதிர்பார்த்ததைவிட நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். ஏன் வசனமும் கம்மிதான். அதுதான் பிதாமகன்லேயே பார்த்தோமே. ஆனா என்னை ஆச்சர்ய படவச்ச விஷயம் ஆர்ய போடுகிற பத்ம சிரசானம். ரொம்ப பயிற்சி எடுத்ததாக ஏற்கனவே பத்திரிக்கைல படிச்சேன். அதுக்காகவே நெஞ்சில பதியிற அளவுக்கு அந்த ஆசனத்துல நின்றிருக்கார்.

ஆனா மிகப் பெரிய ஆச்சர்யம் இன்னும் ஒன்னு இருக்கு அதுதான் கதாநாயகி பூஜா. இது வரைக்கும் அதிகம் பேசப்படலை. மேலும் ஆர்யாவைவிட பூஜாவுக்கு வாய்ப்பு அதிகம். ஒரு காட்சியில திருவருட்செல்வர் படத்துல திருநாவுக்கரசரா வந்து கடைசியில சிவனிடம் கெஞ்சுகிற சிவாஜிய ஞாபகப் படுத்தினார்னா பார்த்துக்குங்க. ஆனா இவருகிட்டயும் இவ்வளவு வேலை வாங்க முடியும்னு பாலா நிரூபிச்சிட்டார். என்ன.. ஆணாதிக்கம் கொண்ட திரைஉலகுல பூஜாமாதிரி நடிகைகளுக்கு வாய்ப்பும் வரவேற்பும் எப்படி இருக்கும்னுதான் தெரியல. பேசாமலேயே மொழிபடத்துல கலக்கின ஜோவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான்.  பூஜாவுக்கு பெரிய ஜே… ( பி. கு. : எனக்கு இதுவரைக்கும் அவர்மேல பெரிசா நாட்டம் இருந்ததில்லை)

அடுத்து பாலா தேடிக்கொண்ட முக்கியமான பலம் இளையராஜா. அவரைப் பற்றியோ அவருடைய இசையை பற்றியோ கருத்து சொல்லுகிற அளவுக்கு எனக்கு இசை அனுபவம் குறைவுன்னாலும் படத்தோட உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்னு சொல்கிற அளவுக்கு உரிமை இருக்கு.

ரொம்ப பெரிசா பேசப்பட்ட காசி காட்சிகள். நானும் நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா முதல் அரைமணிநேரத்திற்குள்ள காசி காட்சிகளே முடிஞ்சிடுது. ஆனா அந்த அரைமணி நேரமும் என்னை சீட்டு முனையில உட்கார வச்சு பார்க்க வச்சிட்டாரு பாலா. கதைக்கு தேவையான அளவு காசி வாழ்க்கையின் பரிமானங்களை ஒரு பாட்டிலும் சில காட்சிகளிலும் காட்டிவிட்டார். எரிகிற பிணங்களுக்கு நடுவுல இருந்து தவம் செய்கிற அகோரிகளை காட்டும் இடம் உடம்பெல்லாம் புல்லறித்துவிட்டது.

இயலாமையோடு இருக்கிற சிலர் இந்த படத்துல நிறைய நேரம் வரும்போதும் அவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்களுக்கு ஜெயமோகனுக்கு ஜே.  அவர்கள் கவலைகளையும் மறந்து சிரித்து வாழ்கிற விதங்களையும் பார்த்து நாம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நிறையவே எடுக்க வேண்டியுள்ளது.

பாலா கதை இப்படித்தான்னு தெரிஞ்சும் அவரது காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து திரையரங்குல எல்லாருமே கைதட்டினாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. எல்லாராலும் இதை ரசிக்க முடியுமான்னு எழும்பின கேள்விக்கு முடியும்னு பதில் சொல்லிட்டாங்க.

ஒரு கனமான கதையை எதிர்பார்த்து போனதாலோ என்னமோ தெரியல ஆனா படம் பார்த்துட்டு மனசெல்லாம் ஃப்ரெஷாவும், ஒரு புது வேகமும் வந்திருக்கு சோகம் குறைஞ்சு இருக்கு.

கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு வெளிவந்திருக்கிற படம் எடுக்கப் பட்ட முயற்சி வீண் போகல. இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத சிலருக்கு அவர்களது முடிவு ஏமாற்றம் தான்.

நம்பி பார்க்கலாம்… மீண்டும் கூட இன்னும் ஒன்றி பார்க்க உதவியா இருக்கும்.  ‘நான் கடவுள்’ குழுவுக்கு என் வாழ்த்துகள்.

சொல்ல மறந்த சொற்கள்..

முத்தக்காவின் வற்புறுத்தலின் பேரிலும், ரொம்ப நாளா பதிவு எழுதனும்னு நினைச்ச தலைப்பாகவும் இருக்கவே நாம எல்லாம் சொல்ல மறந்த சில சொற்களை நினைவூட்டி எழுத ஒத்துக்கிட்டேன்.

ஆனா எழுத உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது சொல்லிலக்கணம் அவ்வளவு சுலபம் இல்லை ராசான்னு.  எங்களோட முந்தைய தலைமுறையினர் அவ்வளவு பேரும் மதுரை தாண்டி கோவில்பட்டி. அதுனால அவங்க பயன்படுத்திய பல சொற்கள் தெற்கு வட்டார கிளைமொழிக்கு உட்பட்ட சொற்களாகப் போனதால இப்போ பல சொற்கள் நாங்கள் பயன்படுத்துவதே இல்லை.

ஆனா எங்க ஆச்சி (எங்க ஊருபக்கம் அப்பாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான் அம்மாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான், இப்போ மனோரமா தவிர அங்க எல்லாரும் பாட்டி ஆயிகிட்டு வாராக என்ன செய்ய அதுலயும் நிறைய கிரானீஸ் உருவாகிகிட்டு வாராக.. ம்ம்) பேசினதையெல்லாம் நினைச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

பரண்ல இருக்க அந்த வாளியை எடுத்துதான்னு” எங்க ஆச்சி எங்க மாமாவை நச்சரிச்சது ஞாபகத்துக்கு வந்தது. இப்போ சென்னைல மட்டுமில்ல அங்கயும் அதிகமா லாஃப்ட்டும், பக்கெட்டும் தான் வளர்ந்து வருகுது.

இப்போ எல்லாம் ‘முத்தம் (முற்றம்)‘ வச்சு வீடு கட்ட இட வசதியே பற்றாம போயிடுச்சு அதுல எங்க வார்த்தைய ஞாபகம் வச்சுக்கிறது. சின்னதா ஒரு வாசல் வச்சு ரோட்டுமேல கோலம் போடுகிற கலாச்சாரம் தான பெருகி வருகுது.

எங்க ஆச்சி வீட்டுல ஒரு அழகான கிளி வளர்த்தோம். அது யாரு என்ன பேசினாலும் அப்படியே பேசும். முதல் தடவையா கிளியால அவ்வளவு பேச முடியும்னு தெரிஞ்சிகிட்டேன்.  ஊருக்குப் போகும்போதெல்லாம் எங்க ஆச்சி சொல்லுவாங்க ‘சுவத்துல கெவுளி/கவுளி (பல்லி) கத்துனாகூட இந்த கள்ளபயபுள்ள அது மாதிரியே கத்தும்’ . அதை ஏன் கள்ளப்பயபுள்ளன்னு சொன்னோம்னா அது நாங்க அதுகூட விளையாடலைன்னா எங்க சின்ன சின்ன பென்சிலை களவாண்டுட்டு (திருடிகிட்டு)  போயிடும்.  அப்போயெல்லாம் அந்தக்கிளியை ‘பவுசு(பவிசு-செருக்கு) கொழிச்சு ஆடாத கிளியேன்னு’ எங்க ஆச்சி எவ்வளவு வையும்(வைதல் – திட்டுதல்)எவ்வளவு அறிவு இல்லை ஆனா அது கூண்டுக்குள்ள போகவே போகாது. ஒரு தடவை ஊருக்குப் போனபோது அது இல்லை. ஆச்சியை கேட்டதுக்கு ‘களவானி கிளி… கூண்டுக்குள்ள போக மாட்டேன்னிடுச்சு. ஒருநா ராவுல(இரவுல) ஒரு வெரு (வெருகு – ஆண்பூனை; காட்டுப்பூனை) கவ்விகிட்டுப் போயிடுச்சு’.  அப்போதான் என் வாழ்க்கையிலேயே முதல் தடவையா ஆண்பூனைக்குன்னு தனியா வெருகுன்னு ஒரு வார்த்தை இருக்கிறதையே தெரிஞ்சிகிட்டேன்.

இதையெல்லாம் விட எங்க சித்தப்பாவுக்கு நாகர்கோயிலை சேர்ந்தைவங்களைத்தான் முடித்திருந்தோம். அந்த சித்தியோட மொழியில நாஞ்சில் தமிழ் நடனமாடும். எல்லாரும் அதுல மலையாள வாடை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் தொல் திராவிட மொழியில இருந்த பல தமிழ் சொற்களை நாஞ்சில் தமிழ் பாதுகாத்து வச்சிருக்கு. இப்போ எல்லாம் எங்க சித்தப்பா பிள்ளைங்களே யாரையும் ‘விளி‘க்கிறது இல்லை. கூப்பிடத்தான் செய்றாங்க.  அப்போதான் அவங்க பயன்படுத்துற வசவு(வசை- திட்டுதல்) ஏதாவுது இருக்கான்னு யோசிச்சு பார்த்தப்போ அடிக்கடி சொல்லுகிற ‘பட்டி‘ நினைவுக்கு வந்தது.  அதைப் பற்றி சொற்களஞ்சியத்துல போட்டிருக்கான்னு திருப்பி பார்த்தப்போ பட்டிக்கு பழந்தமிழ்ல இவ்வளவு அர்த்தங்கள் இருந்தது தெரிந்தது. சுவாரஸ்யமா இருக்கவே உங்கள் பார்வைக்கு. பட்டின்னா நமக்கெல்லாம் மன்னிக்கணும் எனக்கெல்லாம் தெரிந்தது நாய், சிற்றூர் மட்டும் தான். களவு, தெப்பம், மகன், விபசாரி, அட்டவணை, தெப்பம், ஆட்டுக்கிடை,பசுக்கொட்டில், விக்கிரமாதித்தனுடைய மந்திரி, பாக்குவெற்றிலைசுருள், பூச்செடிவகை, காவலில்லாதவர், சீலை, இடம் இப்படி இத்தனை அர்த்தத்தை மறந்ததைப் புரிஞ்சுகிட்டேன்.

இந்த காலத்துப் பெண்கள் சீலையையும் மறந்துட்டாங்க, இரவிக்கையையும் மறந்துட்டாங்க. மன்னிக்கணும் அந்த சொற்களைத்தான் சொல்கிறேன். எப்படி ஞாபகம் வச்சுப்பாங்க ஆம்பளைங்க சேரியும் ப்ளவுசும் தான வாங்கி தாராங்க.

அடுப்படிங்கிற வார்த்தையயே நாம எல்லாம் மறந்து தான போயிருக்கோம். மடப்பள்ளி என்கிற வார்த்தையெல்லாம் எங்க ஆச்சி காலத்துலயும் பயன்படுத்தினாங்க. இப்போ எல்லாம் கிச்சன் தானே. அதுக்கு மேல எங்க ஊர் பக்கம் உள்ளி (வெங்காயம்) என்கிற சொல்லின் வழக்கும் குறைந்தே வருகுது.

உள்ளின்னு சொன்னவுடனே எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வருகுது.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

ஊக்கமுடைமைல வரும். நாம் நினைக்க வேண்டியவை எல்லாம் உயர்வானதாக இருக்கணும்னு சொல்லும்போது இப்படி சொல்லுவாரு. உள்ளுதல் அப்படின்னா நினைத்தல், ஆராய்தல் போன்ற பொருள்ல பல இலக்கியத்துல பயன்படுத்தி இருக்காங்க. நினைத்தலுக்கு  இவ்வளவு அழகான ஒரு வார்த்தை தமிழில் இருந்து நாம அதை பயன்படுத்துறது இல்லையேன்னு நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்  போதே ‘திங்க்’ பண்ணதுண்டு.

இந்த இடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொமொரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருக்குறள்ல கல்லாமை அதிகாரத்துல

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்

அப்படின்னு ஒரு குறள் வரும். அதாவுது படிக்காதவன் சொல்லுகிற செய்தி நல்லது மாதிரி தெரிஞ்சாலும் படிச்சவங்க அவங்கள படிச்சவங்க கூட்டத்துல ஏத்துக்க மாட்டாங்களாம். இங்க படிக்காதவங்கன்னு சொல்வது அனுபவத்துலயும் கேள்விலயும் கல்விலயும் அறிவை சேத்துக்காதவங்கன்னு வச்சிகிட்டா நல்லா இருக்கும். நம்ம தலைவரோ தனுஷோ இல்லை.  இதை பரிமேலழகர் சொல்லும்போது அது எதுனாலன்னா அவங்க சொல்வது ‘ஏரல் எழுத்து போல்வதோர் விழுக்காடாம்’. அப்படின்னு சொல்லுவார். அதாவது நத்தை ஊர்ந்து போகும்போது மணல்ல எப்பவாவது அதுங்க போன தடம் எழுத்து மாதிரி தெரியலாம் அதுக்காக அது படிச்சிட்டு எழுதுச்சுன்னு ஏத்துக்கவா முடியும்.  ஏரல் நத்தைக்கான அழகான சொல் இல்லை. மேலும் இப்போ எல்லாமே பர்செண்டேஜ் தான் விழுக்காடு எங்க?

எங்க பக்கத்து வீட்ல…

திருமகனே திருமகனே நீயொரு நாழிகை நில்லாய்

வெண்ணிற புரவியில் வந்தவனே…ன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கு. புரவிங்கிறது கூட குதிரைக்கு அழகான வார்த்தை தான். அந்த வார்த்தையை மறக்காம இருக்க உதவி புரிஞ்ச வைரமுத்துவுக்கும் ஒரு சலாம்.

ஏதோ கடலோரத்தல நத்தை ஊர்ந்து போகிறமாதிரி என் நினைவலைகள்ல ஊர்ந்து போகியிருக்கேன். ஏரல் எழுத்து மாதிரி ஏதாவுது சில சொற்கள் உங்கள் பேச்சு வழக்கிற்கு இல்லைனாலும் எழுத்து வழக்கிலாவது மறக்காம இருக்க  உபயோகப்படும்னு நினைக்கிறேன். ஏதாவுது தப்பு இருந்தா ஏரல் எழுத்து தான்னு மறந்திடாதீங்க. ரைட்டா?

என் நினைவுகளைத் தொடர்ந்து இன்னும் மறந்து போன சொற்களை நினைவு படுத்த நான் அழைப்பது

சென்ஷி

என் பதிவுகளில் பல அறிய உண்மைகளைச் சொன்ன நாக இளங்கோவன்

மேலும் முன்னாள் அயன் ஆண்ட புர வாசி பாலபாரதி

அம்மாவோட மஞ்சள் புடவை

இன்றைக்கு என் பிறந்த நாள். கண்டிப்பா அம்மா அந்த மஞ்சள் புடவையைத்தான் கட்டுவாங்க. அந்த புடவைதான் எவ்வளவு அழகு. அம்மாவுக்கும் அதைக் கட்டுறதுன்னா ரொம்ப பிடிக்கும். மஞ்சள் கலருல அங்கங்கே சின்னசின்னதா ரோஜாப்பூ போட்டு…. மனசெல்லாம் புதுசா மாறிடும். அதுல இருந்து எனக்கு மஞ்சள்னா ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வெள்ளிக்கிழமைகள்ல காலைல மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு அந்தப் புடவையை அம்மா கட்டிகிட்டு வந்து சோறு ஊட்டுவாங்களே. அதை சாப்பிட்டுட்டு அப்படியே அவங்க மடியில அந்த மஞ்சள் கலருக்கு நடுவுல தூங்கி எழுந்தா எப்படி இருக்கும். நேற்று தினேஷ் வீட்டுல விளையாடப் போகும்போது கூட அவங்க வீட்டுல இருக்கிற ஸ்க்ரீன் மாதிரி நம்ம வீட்டிலையும் போடனும்னு எவ்வளவு அடம் பண்ணோம். அப்போகூட அந்த மஞ்சள் புடவைமாதிரிதான துணி வாங்கனும்னு ஆசைப் பட்டோம்.

ரெண்டு வருஷம் முன்னாடி அப்பா ஏதோ ஒரு பண்டிகைக்கு வாங்கிட்டு வந்தாங்க. அதுல இருந்து அம்மாவுக்கு அந்தப் புடவைன்னா ரொம்ப பிரியம். அதுக்கு அப்புறம் அப்பா அம்மாவுக்கு புடவை வாங்கி வரவே இல்லை. ஏன் எனக்கு விவரம் தெரிஞ்சு அப்பா வீட்டுக்கு வரவே இல்லை. அப்பா ரொம்ப நாள் வரலைன்னு சொன்னதும் அம்மா தாத்தாவீட்டுக்குப் போனாங்க. அப்போ அவங்க வீட்டு வாசல்ல மஞ்சள் பழமா வந்து இறங்கிச்சு.  நிறைய பசங்க அவங்க வீட்டு வாசல்ல விளையாடிகிட்டு இருந்தாங்க.  என்னையும் விளையாட்டுல சேத்துப்பீங்களான்னு கேட்டேன்.  அப்போதான் அப்பா வந்து சேர்ந்தாரு.  புது சொக்காவெல்லாம் போட்டு இருந்தாரு.  எல்லாரும் பக்கத்துல இருக்கிற மாதா கோயிலுக்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க.  அம்மா உடனே அப்பா கிட்ட ஏதோ சொல்லி அழுதாங்க.  தாத்தா என் பிள்ளைய குறைசொல்றியா நீயின்னு அம்மாவை போட்டு ரோட்டுல நிற்கவச்சு அடிச்சிட்டாரு. அப்புறம் அம்மா எனக்கு தாத்தா பாட்டின்னு சொந்தம் யாருமே இல்லைன்னு நினைச்சிக்க சொன்னாங்க. அன்றைக்கே அம்மா தினேஷோட வீட்டுக்கு அழுதுகிட்டே போனாங்க. அங்க தினேஷோட அம்மாதான் ஆறுதல் சொன்னாங்க. அப்போ தினேஷ் வீட்டுலயே படுக்க வச்சுகிட்டாங்க. அந்த தலகாணி உரைகூட மஞ்சள் கலருல அம்மாவோட புடவை மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் தினேஷோட அப்பா தையல் மிஷின் வாங்கி வந்து கொடுத்தாரு. அதுல அம்மா தைக்கும்போது டக டகா டக டகான்னு ரயில்ல போற மாதிரி சப்தம் கேட்கும்.

நான் ரயில்ல ஒரே ஒரு தடவை போயிருக்கேன். அப்பா எங்களை ஊருக்கு கூட்டிகிட்டு போனாரு. அங்கதான் எங்க தாத்தா வீடு. அப்போ அங்க நானு சுரேஷ் அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ரயில் மாதிரி சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு விளையாடிகிட்டு இருந்தோம். அப்பல்லாம் சுரேஷ் வீட்டுலதான் தங்கினோம். அவங்க அம்மாவை நான் பெரியம்மான்னு கூப்பிடனும்னு சொன்னாங்க. எங்க பெரியம்மா அம்மா அப்பா சுரேஷ் நாங்க எல்லாரும் எங்க தாத்தாவீட்டுக்குப் போனோம். அங்க யாருமே உட்கார்ந்து பேசலை. நின்றுகிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல நாங்க எங்க ரயில விட்டு விளையாடிகிட்டு இருந்தோம். சந்து பொந்துல எல்லாம் ரயிலை விடறது எவ்வளவு நல்லா இருந்தது. திடீர்னு எங்க தாத்தானு சொன்னவரு சுரேஷை பிடிச்சு அடிச்சிட்டாரு. அப்போ நாங்க ஊருக்கு வரவரைக்கும் சுரேஷ் என்கூட விளையாட வரலை. அம்மா தான் என்னை அரவனைச்சு வச்சுகிட்டாங்க. .  அந்த பெரியம்மாவை அப்புறம் நான் பார்த்ததே இல்லை.

அம்மாகிட்ட ஏன் அப்பா வரலைன்னு கேட்டேன். அப்பா ஏதோ வேலை விஷய்மா வெளியூரு போயிருக்காருன்னு சொன்னாங்க. அந்த வருஷம் பேரண்ட்ஸ் டேக்கு கூட அப்பா வரலை.  ஆனா அவரமாதிரியே ஒருத்தரை ஒருநாள் தெருவுல பார்த்தேன்.  அவருகூட பச்சை கலரு புடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு போய்கிட்டு இருந்தாங்க.  அவங்க எல்லாம் ஞாயித்து கிழமை மாதா கோயில் பூஜை முடிச்சிட்டு வந்து கிட்டு இருந்தாங்க.  அம்மாகிட்ட சொன்னப்போ நம்ம அப்பான்னா கண்டிப்பா நம்மளை தேடி வருவாரு. அவரு வேற யாரோன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு ஸ்கூல்ல கலர் பென்ஸில் வாங்கி வர சொன்னாங்க. அம்மா தினேஷ் வீட்டுல விளையாடிட்டு அவனோட கலர் பென்சில் எதாவது இருந்தா வாங்கி வரலாம்னு சொன்னாங்க. தினேஷோட பழைய பென்சிலை எல்லாம் வாயில வச்சு மென்னு துப்பி இருந்தான். தினேஷ் அம்மா அவரு வந்த உடனே வேணும்னா வாங்கி கொடுத்து விடறேன்னு சொன்னாங்க. அப்போதான் அவங்க வீட்டு ஸ்க்ரீன் துணியை பார்த்தேன். மஞ்சள் கலருலயே இருந்தது. அம்மாகிட்ட அதுதான் அந்த புடவைய ஸ்க்ரீனா பண்ணிப்போடுங்கன்னு அடம் பிடிச்சேன். அம்மா எதுவுமே சொல்லல்ல . என்னைத் தூங்க வச்சிட்டாங்க.

காலைல புது ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க. பென்சில் வாங்கி தரவே இல்லை. நான் போக மாட்டேன்னு சொன்னப்ப இன்னிக்கு பொறந்த நாளு யாரும் என்னைத் திட்ட மாட்டாங்கன்னு சொன்னாங்க. டீச்சரும் என்னை திட்டல. ஆனா ஸ்கூலுக்கு ஒரு கலர் பென்சில் டப்பா வந்தது. தினேஷோட அப்பாதான் லேட் ஆயிடுச்சுன்னு கொண்டு வந்து கொடுத்தாராம். அந்த கலர் பென்சில்ல மொதல்ல அம்மாவோட முகம்தான் வரைஞ்சு இருந்தேன். அந்த மஞ்சள் கலர் புடவையோட அம்மாவை நல்ல வரைஞ்சிருந்தேன். டீச்சர் நல்லா இருக்கேன்னு பாராட்டுனாங்க.

சாயங்காலம் அதை அப்படியே அம்மாகிட்ட காட்ட வேகமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிகிடந்தது. அம்மா அம்மான்னு தட்டினேன். வாசலிலே தினேஷோட அப்பாவோட செருப்பு இருந்தது. கதவு இடுக்குல அம்மாவோட புடவை மாதிரி ஒரு துணி மாட்டிகிட்டு இருந்தது. அம்மா நான் கேட்ட மாதிரி ஸ்க்ரீன் தச்சு போட்டாங்க போல இருக்கு. உள்ளே டக டகா டக டகான்னு சத்தம் கேட்குது.  இது தையல் மிஷின் சத்தம் இல்லை. டி.வி.ல ஏதோ சண்டை படம் போல இருக்கு.  யாரோ ஒரு பொண்ணு வேற முனங்கிகிட்டு இருக்கா. ‘அம்மா சீக்கிரம் கதவைத் திறம்மா. நான் வரைஞ்சபடத்தை காட்டனும்.

ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகின்றேன்….

ஒரு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு இரெண்டு வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் வார்த்தைகளைத்தேட முடியவில்லை.

TRAVELLER, TOURIST இதுதான் அந்த இரெண்டு வார்த்தை.   பயணி, சுற்றுலா பயணி என்று சுலபமாகசொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அதன் முழு ஆன்மாவையும் கொடுக்கின்றதா என்பதுதான் சந்தேகம். Traveller என்பவன் தனது பயணத்தை வழக்கத்துக்கு மாறாக அமைத்து அவன் செல்லும் இடங்களின் கலாச்சார புவியியல் கூறுகளை பதிவு செய்பவன். ஹுவான் சுவான் ஒரு Traveller.  Tourist  என்பவன் தனது இன்பத்திற்காக வெறும் இன்பத்திற்காக மட்டும் சுற்றுபவன்.

இதை எப்படி தமிழில் ஒரே வார்த்தையில் சொல்லுவது ஏதேனும் வழி இருக்கா…

ரவிசங்கர் போன்றோர் தயவு செய்து உதவினால் நன்றாக இருக்கும்.

பழைய பதிவுகள் »

Follow

Get every new post delivered to your Inbox.