சென்ற வருடம் சாகித்திய அகாதமி விருது பெற்ற “கல்மரம்” புதினம் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கவிப்பேரரசுவின் நாவலுக்கு விருது கொடுத்து சிறப்பித்தது சாகித்திய அகாதமி…. உண்மையில் சொல்லப்போனால் இலக்கிய உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே விருது கொடுப்பது இந்த அகாடமி என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவது அடிக்கடி காதில் விழுகின்ற விஷயம் தான். இருந்தாலும் திலகவதியின் எழுத்துக்களை நான் படித்தது இல்லை என்பது உண்மை என்பதாலும் இந்திய அளவில் புகழ்தரும் விருது இது என்பதாலும் இதைப் படிக்க முடிவெடுத்தேன்.
கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்த கதைத் துவங்குகின்றது. கதைச் சூழல், கதைமாந்தர் பேசும் வசனங்கள் அவை அனைத்தும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் பேட்டைக்குள்ளே நுழைந்துவிட்ட உணர்வை நமக்குக் கொடுக்க முயல்கின்றன. ஆனால் நிச்சயம் நடையில், போக்கில் ஒரு நாவலுக்கு உண்டான பல பண்புகளை இது காட்டத் தவறிவிட்டது. “கள்ளிக் காட்டு இதிகாச”த்தோடு ஒப்பிடுகையில் இது இன்னும் பிறவா நாவல் என்றே சொல்ல வேண்டும். வாசகர்களின் உள்ளே புகுந்து உலுக்க வைக்க வேண்டிய இடங்களில் கூட ஏனோ எடுத்ததை முடிக்க வேண்டுமே என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது. இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயம் ரெண்டு.
ஒரு நாவல் எழுதும் போது காட்சிகளை வரிசையாகக் கோர்த்து உடன் தர வேண்டும் என்ற எழுச்சி ஏற்படும். அப்படிப்பட்ட எழுச்சியால் மட்டும் ஒரு நாவலை நான் எழுதினால் வாசகரை நாம் சென்று அடைய முடியாது. அதற்கான நேர்த்தியான உத்திகளையும் நாம் கையாள வேண்டும். அந்த இடத்தில் கல்மரம் வெறும் கல்லாக மாறிவிடுகின்றது. காட்சிமாற்றம் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விடுகின்றது. வெறும் சினிமாவின், டி.வி. நாடகங்களின் உந்துதலால் எழுதப்பட்டது போன்று தோன்றியது. இதை ஒரு நாடகமாகப் படைத்திருந்தால் வேண்டுமானால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாமோ…
ஆனால் என் கவலையெல்லாம் இதைவிட இன்னும் பல உயர்வான எழுத்துக்கள் தமிழில் இருக்கும் போது இந்திய அரங்கில் அதிகாரம்தான் தமிழை அலங்கரிக்குமோ. இப்படி அடிகாரம் தமிழ் எழுத்தை அளவிடுவதால் தான், தொன்மை இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழுக்கு இரெண்டே ஞானபீட விருது கிடைத்துள்ளதோ….
எழுத்துலகிற்கு நான் புதியவன்தான். ஆனால் ஒரு வாசகனாக மனதில் பட்டதைக் கொட்டிவிட்டேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களும் படித்துவிட்டு மாற்றுக் கருத்துக் கூறினால் என் கருத்தைப் பரிசீலிக்கக் காத்திருக்கிறேன்.






