பல மாதங்கள் தயாரிப்பில் இருந்து, சில மாதங்கள் பெட்டிக்குள் இருந்து இறுதியாக வெளிவந்தது கே.பி. யின் சமீபத்திய தோல்வி. பாலசந்தரின் பழைய படங்களே அவருக்குப் போட்டி என்று பலர் விமர்சனம் எழுதிய பின்னும் பாலுவின் படம் என்பதால் ஒரு முறை ‘பொய்’ பார்க்கலாம் என்று உள்மனம் வற்புறுத்தியதால் பார்த்தேன்.
நான் எழுதத் துவங்குவதற்கு பாலசந்தரின் கதாபாத்திரங்களின் பாதிப்பு பெரிதும் காரணம் என்பது உண்மை என்பதால் ஒரு விதத்தில் குரு சீட உறவு மானசீகமாக இருந்தது.
‘பாலு படங்களில் message இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும். அதை அவர் வீணடிக்கவில்லை. ஆமாம் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ இதுதான் ‘பொய்’ சொல்கிற message. ஆனால் இது மட்டும் தான்எதிர்பார்ப்பா? இது மட்டும் தான் அவருடைய சாதனையா? அப்படி இருந்தால் இது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையில் இருந்து messageஐ தேடிப் பிடித்து ஒட்டி இருக்கிறார்.
ஆமாம் தமிழ்நாட்டில் (அப்பாவோடு) இருக்கும் பிரச்சனைக்காகக் கதை நாயகன் இலங்கை செல்கிறான். அங்கே ‘அப்பா யார்?’ என்ற கேள்விக்கு ஒரு கற்பனை அப்பாவை உருவாக்குகிறான். அது நிழலாய் பாலசந்தரின் உருவில் வந்து அவனை திருத்த முயலுகிறேன் என்று காதலிக்கச் சொல்கிறது. காதலும் கல்யாணமும் பெண்களின் சாதனைக்குத் தடையாக இருக்கும் என்று நம்பி வாழும் ஒரு பெண்ணைக் கண்டு காதலுக்காக நாயாய் பேயாய் அலைகிறான். இடையில் விதி என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் என்ற நிழல் வந்து திருப்பங்கள் கொண்டு வந்து ரோமியோ ஜூலியட் ஸ்டைலில் இருவரும் சின்ன தவறான புரிதலால் உயிர் இழக்கின்றனர். இறுதியில் அவர்கள் எடுத்த அவசரமான முடிவுதான் காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்ற கருத்தோடு படம் முடிகிறது.
கதைக்கரு ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கமான பாலசந்தரின் மசாலாக்கள் இல்லாமல் இல்லை. தமிழுக்காக அவர் கொடுக்கும் முக்கியத்துவம், இசை குறித்த ஏதாவது கருத்துகள், கணவனை சந்தேகப் படுகிற மனைவி, சுனாமியில் பாதித்தவர்களின் வாழ்க்கை போன்றவை மூலமாக சுவாரஸ்யம் கூட்ட முயன்று இருக்கிறார். இவை எல்லாவற்றிற்குமேல், பாலசந்தரின் கதாபாத்திரங்கள் வெற்றி பெற்றதற்கான காரணம், இது வரை வந்த படங்களில் அவை நமது கற்பனைக்குள் நாம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ (ஆனால் இயற்கையாய் நடைமுறை விலங்கை மாட்டிக் கொண்டு திரியும் போது) அதை நிழலாய்க் கொண்டு வந்து காட்டும் பொழுது நம்மை ஈர்த்தது. இங்கும் அப்படி இந்தக் கதைப் பாத்திரங்கள் நடக்க முயன்றுள்ளன. அப்பா பெயரை வள்ளுவனார் என்று உச்சரிக்கத் தெரியாததால் interviewல் சென்று அப்பா பெயர் தெரியாது என்று சொல்வது, திடீரென்று வழியில் ஒருவனிடம் சென்று எனக்கு அவசரமாக ஒரு நண்பர் வேண்டும் என்று சொல்வதும், அப்புறம் அவன் நீங்க எங்கே தங்கி இருக்கீங்க என்று கேட்கும் போது உங்க வீட்லதான் ‘எனக்கு தங்க ஒரு இடம் வேண்டும் அதற்கு தான் ஒரு நண்பர் வேண்டும்’ என்று சொல்வதும் இப்படி நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள், மக்களின் ரசனை மாறிவிட்டது என்பதை குரு அளக்கத் தவறி விட்டார் என்பதை உணர்த்துகிறது.
“ஆமாம் நான் பகிரங்கமா சொல்றேன் ஐ லவ் ஜே.கே.பி.” என்று சிந்து தனது உணர்வுகளோடு தோற்றுவிட்டதை ஒத்துக்கொள்ளும்போது இருக்கிற உயிர் ஷில்பா ‘நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லும்போது இல்லை. ‘உங்களை தயவு செய்து கேட்டுக்கிறேன் என்னை இருபத்துநாலு மணி நேர நர்ஸா இருக்க விடுங்க’ என்று நந்தினி கேட்கும்போது இருக்கிற உறுதி இங்கே ‘என்க்குன்னு ஒரு identity வேணும்னு விரும்புறேன் விடுதலைக் கொடு’ ன்னு ஷில்பா கேட்படில் இல்லை. இவர் கதையை அங்கேயே இன்னும் ஆழமா முடிச்சிருந்தால் கூட ஒரு தாக்கம் ஏற்படுத்தி இருக்கலாம். அதற்கும் அவர் சொல்ல வரும் கருத்து ஒத்துப் போகும். இசை இன்னும் கொஞ்சம் அழகாகப் பண்ணி இருக்கலாம். காட்சி மாற்றங்களில் இருந்து கதாபாத்திரங்கள் வரை பல இடங்களில் இவருக்குத் தூணாக இருந்த அனந்து இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. இவர் படங்களுக்கு அவர் உயிராக இருந்திருக்கிறார் என்பது வெளிப்படை. ‘பொய்’மையும் தோல்வியிடத்த அது சார்ந்த உயிர் இல்லையெனின் என்பது என் படைப்பனுபவத்தில் இந்த குருவிடம் இருந்து கத்துக் கொண்டேன்.






