அம்மாவோட மஞ்சள் புடவை
இன்றைக்கு என் பிறந்த நாள். கண்டிப்பா அம்மா அந்த மஞ்சள் புடவையைத்தான் கட்டுவாங்க. அந்த புடவைதான் எவ்வளவு அழகு. அம்மாவுக்கும் அதைக் கட்டுறதுன்னா ரொம்ப பிடிக்கும். மஞ்சள் கலருல அங்கங்கே சின்னசின்னதா ரோஜாப்பூ போட்டு…. மனசெல்லாம் புதுசா மாறிடும். அதுல இருந்து எனக்கு மஞ்சள்னா ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வெள்ளிக்கிழமைகள்ல காலைல மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு அந்தப் புடவையை அம்மா கட்டிகிட்டு வந்து சோறு ஊட்டுவாங்களே. அதை சாப்பிட்டுட்டு அப்படியே அவங்க மடியில அந்த மஞ்சள் கலருக்கு நடுவுல தூங்கி எழுந்தா எப்படி இருக்கும். நேற்று தினேஷ் வீட்டுல விளையாடப் போகும்போது கூட அவங்க வீட்டுல இருக்கிற ஸ்க்ரீன் மாதிரி நம்ம வீட்டிலையும் போடனும்னு எவ்வளவு அடம் பண்ணோம். அப்போகூட அந்த மஞ்சள் புடவைமாதிரிதான துணி வாங்கனும்னு ஆசைப் பட்டோம்.
ரெண்டு வருஷம் முன்னாடி அப்பா ஏதோ ஒரு பண்டிகைக்கு வாங்கிட்டு வந்தாங்க. அதுல இருந்து அம்மாவுக்கு அந்தப் புடவைன்னா ரொம்ப பிரியம். அதுக்கு அப்புறம் அப்பா அம்மாவுக்கு புடவை வாங்கி வரவே இல்லை. ஏன் எனக்கு விவரம் தெரிஞ்சு அப்பா வீட்டுக்கு வரவே இல்லை. அப்பா ரொம்ப நாள் வரலைன்னு சொன்னதும் அம்மா தாத்தாவீட்டுக்குப் போனாங்க. அப்போ அவங்க வீட்டு வாசல்ல மஞ்சள் பழமா வந்து இறங்கிச்சு. நிறைய பசங்க அவங்க வீட்டு வாசல்ல விளையாடிகிட்டு இருந்தாங்க. என்னையும் விளையாட்டுல சேத்துப்பீங்களான்னு கேட்டேன். அப்போதான் அப்பா வந்து சேர்ந்தாரு. புது சொக்காவெல்லாம் போட்டு இருந்தாரு. எல்லாரும் பக்கத்துல இருக்கிற மாதா கோயிலுக்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க. அம்மா உடனே அப்பா கிட்ட ஏதோ சொல்லி அழுதாங்க. தாத்தா என் பிள்ளைய குறைசொல்றியா நீயின்னு அம்மாவை போட்டு ரோட்டுல நிற்கவச்சு அடிச்சிட்டாரு. அப்புறம் அம்மா எனக்கு தாத்தா பாட்டின்னு சொந்தம் யாருமே இல்லைன்னு நினைச்சிக்க சொன்னாங்க. அன்றைக்கே அம்மா தினேஷோட வீட்டுக்கு அழுதுகிட்டே போனாங்க. அங்க தினேஷோட அம்மாதான் ஆறுதல் சொன்னாங்க. அப்போ தினேஷ் வீட்டுலயே படுக்க வச்சுகிட்டாங்க. அந்த தலகாணி உரைகூட மஞ்சள் கலருல அம்மாவோட புடவை மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் தினேஷோட அப்பா தையல் மிஷின் வாங்கி வந்து கொடுத்தாரு. அதுல அம்மா தைக்கும்போது டக டகா டக டகான்னு ரயில்ல போற மாதிரி சப்தம் கேட்கும்.
நான் ரயில்ல ஒரே ஒரு தடவை போயிருக்கேன். அப்பா எங்களை ஊருக்கு கூட்டிகிட்டு போனாரு. அங்கதான் எங்க தாத்தா வீடு. அப்போ அங்க நானு சுரேஷ் அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ரயில் மாதிரி சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு விளையாடிகிட்டு இருந்தோம். அப்பல்லாம் சுரேஷ் வீட்டுலதான் தங்கினோம். அவங்க அம்மாவை நான் பெரியம்மான்னு கூப்பிடனும்னு சொன்னாங்க. எங்க பெரியம்மா அம்மா அப்பா சுரேஷ் நாங்க எல்லாரும் எங்க தாத்தாவீட்டுக்குப் போனோம். அங்க யாருமே உட்கார்ந்து பேசலை. நின்றுகிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல நாங்க எங்க ரயில விட்டு விளையாடிகிட்டு இருந்தோம். சந்து பொந்துல எல்லாம் ரயிலை விடறது எவ்வளவு நல்லா இருந்தது. திடீர்னு எங்க தாத்தானு சொன்னவரு சுரேஷை பிடிச்சு அடிச்சிட்டாரு. அப்போ நாங்க ஊருக்கு வரவரைக்கும் சுரேஷ் என்கூட விளையாட வரலை. அம்மா தான் என்னை அரவனைச்சு வச்சுகிட்டாங்க. . அந்த பெரியம்மாவை அப்புறம் நான் பார்த்ததே இல்லை.
அம்மாகிட்ட ஏன் அப்பா வரலைன்னு கேட்டேன். அப்பா ஏதோ வேலை விஷய்மா வெளியூரு போயிருக்காருன்னு சொன்னாங்க. அந்த வருஷம் பேரண்ட்ஸ் டேக்கு கூட அப்பா வரலை. ஆனா அவரமாதிரியே ஒருத்தரை ஒருநாள் தெருவுல பார்த்தேன். அவருகூட பச்சை கலரு புடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு போய்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லாம் ஞாயித்து கிழமை மாதா கோயில் பூஜை முடிச்சிட்டு வந்து கிட்டு இருந்தாங்க. அம்மாகிட்ட சொன்னப்போ நம்ம அப்பான்னா கண்டிப்பா நம்மளை தேடி வருவாரு. அவரு வேற யாரோன்னு சொல்லிட்டாங்க.
எனக்கு ஸ்கூல்ல கலர் பென்ஸில் வாங்கி வர சொன்னாங்க. அம்மா தினேஷ் வீட்டுல விளையாடிட்டு அவனோட கலர் பென்சில் எதாவது இருந்தா வாங்கி வரலாம்னு சொன்னாங்க. தினேஷோட பழைய பென்சிலை எல்லாம் வாயில வச்சு மென்னு துப்பி இருந்தான். தினேஷ் அம்மா அவரு வந்த உடனே வேணும்னா வாங்கி கொடுத்து விடறேன்னு சொன்னாங்க. அப்போதான் அவங்க வீட்டு ஸ்க்ரீன் துணியை பார்த்தேன். மஞ்சள் கலருலயே இருந்தது. அம்மாகிட்ட அதுதான் அந்த புடவைய ஸ்க்ரீனா பண்ணிப்போடுங்கன்னு அடம் பிடிச்சேன். அம்மா எதுவுமே சொல்லல்ல . என்னைத் தூங்க வச்சிட்டாங்க.
காலைல புது ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க. பென்சில் வாங்கி தரவே இல்லை. நான் போக மாட்டேன்னு சொன்னப்ப இன்னிக்கு பொறந்த நாளு யாரும் என்னைத் திட்ட மாட்டாங்கன்னு சொன்னாங்க. டீச்சரும் என்னை திட்டல. ஆனா ஸ்கூலுக்கு ஒரு கலர் பென்சில் டப்பா வந்தது. தினேஷோட அப்பாதான் லேட் ஆயிடுச்சுன்னு கொண்டு வந்து கொடுத்தாராம். அந்த கலர் பென்சில்ல மொதல்ல அம்மாவோட முகம்தான் வரைஞ்சு இருந்தேன். அந்த மஞ்சள் கலர் புடவையோட அம்மாவை நல்ல வரைஞ்சிருந்தேன். டீச்சர் நல்லா இருக்கேன்னு பாராட்டுனாங்க.
சாயங்காலம் அதை அப்படியே அம்மாகிட்ட காட்ட வேகமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிகிடந்தது. அம்மா அம்மான்னு தட்டினேன். வாசலிலே தினேஷோட அப்பாவோட செருப்பு இருந்தது. கதவு இடுக்குல அம்மாவோட புடவை மாதிரி ஒரு துணி மாட்டிகிட்டு இருந்தது. அம்மா நான் கேட்ட மாதிரி ஸ்க்ரீன் தச்சு போட்டாங்க போல இருக்கு. உள்ளே டக டகா டக டகான்னு சத்தம் கேட்குது. இது தையல் மிஷின் சத்தம் இல்லை. டி.வி.ல ஏதோ சண்டை படம் போல இருக்கு. யாரோ ஒரு பொண்ணு வேற முனங்கிகிட்டு இருக்கா. ‘அம்மா சீக்கிரம் கதவைத் திறம்மா. நான் வரைஞ்சபடத்தை காட்டனும்‘.







நல்லா இருக்குங்க.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மெருகேத்தியிருக்கலாமோன்னு தோண வைக்குது. சிறுவனின் பார்வையில் கதை சொல்லும் பாணி ஓக்கே. ஆனாலும் முடிவுதான் என்னால சரியா ஏத்துக்க முடியல. ஒருவேளை இதுக்கு நான் இன்னமும் என்னோட ஆணாதிக்க மனப்பான்மைய விடாம இருக்கறது கூட காரணமா இருக்கலாம்.
அடுத்த கதைக்காக வெயிட்டிங்க்
பின்நவீனத்துவ கதை சொல்லுதலில் நல்ல முயற்சி. மேலும் எழுதுங்கள்…வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Very good. Sure i will start from today to read without leaving a day.
Best wishes,
R.Omprakash
Your best friend….