அட ஆமாங்க ஒரு வாரம் நட்சத்திரமா நான் என்னைப் பற்றி சொல்வதைவிட உங்களுடைய பங்களிப்பை அதிகமாக எதிர்பார்த்தேன் என்பது உண்மை. அது தாங்க முன்னமே எழுதி வச்ச என்னுடைய நல்ல கதைன்னு நான் நினைச்சு பலராலும் வாசிக்கப் படாம விட்ட ஒரு கதையைத் திருப்பிப் போடறேன். ஏற்கனவே படிச்சவங்க இன்னொரு மீள்வாசிப்பு பண்ணிப் பாருங்களேன். இந்தக் கதை பிடிக்கலாம்.
…………………………………………………………………………………………………………………………………………….
சென்னையின் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு அருகே வந்து அம்ர்ந்தாள். நீதி மன்றம் அருகே தான் உள்ளது. ஆனால் அவள் அங்கு இருந்து வரவில்லை. வாழ்க்கையே முடிந்துவிட்ட சோகம் அவள் முகத்தில். அந்த நிமிடத்திற்கு பின் அவள் தேகம் அனைத்தும் அனலாய்க் கொதித்தது. அந்த இடம் ஒன்றும் புதிதன்று. பத்து வருடத்திற்கு முன் அவளுடைய கனவுகளோடு அவளை வரவேற்றது இந்த இடம் தானே. உண்மையில் சொல்லப் போனால் அவளுடைய உயிரே இன்று தான், பத்து வருடம் கழித்துதான் அவளிடம் மீண்டுள்ளது. ஆனால் பயன் என்ன?
ஏழை விவசாயியின் மகள், படிக்காத பட்டிக்காடு, பட்டணத்து மோகம், சிலை போன்ற தேகம், அந்த அழகால் கிடைத்த காதல், இதழமுதையும், இடையமுதையும் கலந்து, கடைந்து ஒரு கனியமுதைப் பெற்றெடுத்து வீடு திரும்பும் இலட்சியம். உயிருள்ள அந்தக் கனவுப் படிமம் அவள் கண் முன் வந்து சென்றது. அவள் அருகே சென்றிருந்த யாரும் அவளுடைய கவனத்தை ஈர்க்கவில்லை.
கிராமத்தில் பாலங்கட்ட வந்த இஞினியர் என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தான். அவன் அணிந்திருந்த உடையும், பெண்களை கவர்ந்து இழுக்கும் வாசமும்… அப்படிப்பட்ட ஒருவனுடைய காதல் படிக்காத பட்டிக்காட்டுப் பெண்ணுக்கு… எல்லாம் அழகு தந்த இலவசம்.
பட்டணத்தில் இறங்கிய அன்றே கல்யாணம், அது முடிந்த உடனேயே மற்றது… அவளது பெண்மையின் ஆழத்தைத் தொட்டு வெட்கப்பட வைத்த கனவு… இன்று அந்தக் கனவை பார்ப்பது போன்று கண்களை மூடிக்கொண்டாள். தன் கைகளால் தனது முகத்தையும் மூடிக்கொண்டாள். மெல்ல அவளது கைகள் கீழே நகர்ந்தன. அவள் வெட்கத்தை அவன் இப்படிதான் களைந்தான். கண் திறந்து பார்க்கக் கூச்சப் பட்டுக் கொண்டிருக்கையில் புதைந்து கிடந்த உண்ர்ச்சியையெல்லாம் உசுப்பி விடும் ஒரு இச்ச்… இன்றும் அதே போன்ற உணர்ச்சி அவள் ஆழ் மனத்தில் உதித்தெழுந்தது. அருகே நிற்பவர்கள் அவளைக் கவனிப்பதைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை.
ஒரு மணி நேரத்திற்கெல்லாம் முதல் முறை ஒரு ஆண் உயிர் அவளை முட்டி நனைத்தது. அயர்வும், வெட்கமும், தோன்ற தனக்குள்ளேயே சிரித்துப் படுத்து இருக்கையில்தான் அந்த அந்தரங்கம் அரங்கேறக் காத்திருந்தது தெரிய வந்தது. அன்று அவளை விட்டுப்போன உயிர் இன்றுதான் திரும்பி வந்தது. ஆனால் பயன் என்ன? மெல்ல மெல்ல தனது கைகளை உண்ர்ச்சிகளற்ற மார்பகங்களூடே எடுத்துச் சென்றாள். காதலுக்குக் கிடைத்த பரிசு அந்த மோகம் என்றிருக்கையில், அந்த மோகமே மூலதனமாய் மாறி வயிற்றை மட்டும் கழுவ போராடிய நடை பிணம் இன்றுதான் உயிர் பெற்றது. ஆனால் பயன் என்ன?
அந்த உயிர் அவளுக்குள்ளே தொலைந்து போன அவளுடைய பெண்மையைத் தேடுகிறது. கல்லான உடம்பிற்குள் ஈரத்தைத் தேடுகிறது. மானம் பறித்துக்கொண்டு போன மனத்தைத் தேடுகிறது. அது எங்கே? இவளுடய மார்பகங்கள் ஒவ்வொரு முறையும் பிழியப்படும்போது அந்த மனம் நொறுங்கி விட்டதா? இல்லை அடிவயிற்றை நிரப்பிய அசிங்கத்தில் கரைந்து போனதா?
எங்கே அந்த மனம்? திடீரென்று கண் விழித்தாள். கண்களில் காளியின் வேகம். சமூகத்தைச் சுட்டெறிக்கும் வெம்மை. அவள் கைவிரல்களும் வேலாய் மாறியது. தனது ரவிக்கைகளைக் கிழித்தாள். புடவை முழுவதையும் களைந்தாள். திடீரென்று அந்த இடமே கலவரமூண்டது. “டாய் கசுமாலங்களா… இந்தா டா… இந்தா… இப்பொ வந்து எடுத்துக்கொ… இந்த சுகத்துக்குத்தானே அப்பாவிகளே ஏமாத்துறே… “
அரை நிர்வாணம் முழு நிர்வாணம் ஆனது. அழகுகள் கூட கலவரத்தில் அர்த்தமற்றுப்போனது.
“வாங்கோ டா வாங்கோ… தைரியம் இருந்தா இனிமே வாங்கோ டா…” அருகில் இருந்த ஆண்கள் சிலர் வெட்கிக் கண் மூடினர். சிலர் அவளுக்கு ஆடை மாற்றச் சென்றனர். சிலர் பரிதாபம் பொங்க பார்த்து நின்றனர். அங்கும் சிலர் தனது காம வெறியைப் பார்வையால் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏய் கிட்ட வாராதே… வயித்தைக் கழுவிக் கொண்டிருந்த அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையைக் கழுவிட்டீங்களே… ”
அதற்குள் ஒருவன் வேகமாய்ச் சென்று அவளை அறைந்தான். அது அவளுக்கு உறைக்கவில்லை.
“என்ன எனக்கு மட்டும் நோயைக் கொடுத்துட்டு நீங்க எல்லாம் நல்லா வாழலாம்னு நினைக்குறீங்களா… விட மாட்டேன். ..வாடா வா…பொறுக்கிப் பசங்களா. துட்டும் கொடுத்து ஃப்ரீயா சுகந்தானடி கொடுக்குறோம்னு சொன்னீங்களே… இப்போ நான் தரேன்டா வாங்கோ… -| என்று தன் நிர்வாணத்தை மறைக்க மாட்டேனென்று பிடிவாதமாய் மல்லுக்கு நின்றாள்.
அப்பொழுதுதான் அவளுடைய வேதனை மற்றவருக்குப் புரிந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் காக்கிச்சட்டையிலும் அவளைச் சூறையாடிய கடமை அங்கு வந்தது.