நியூ டெல்லி இரயில் நிலையம். பன்னிரண்டாவது ப்லாட்ஃபார்ம் என்ற உடனேயே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ் தான். அன்று நான் திரும்பும்போது ஆறு வருடத்திற்கு முன்பு கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த சமயம் நிகழ்ந்த சம்ப்வம்தான் நினைவிற்கு வந்தது. முதல் முறையாக அரைகுறை மொழியறிவோடு தமிழகம் விட்டு வெளியேறும்போது 18 வயது இளைஞனின் மனதில் இருக்கின்ற ஒரு பாதுகாப்பின்மையும் தான் நினைவிற்கு வந்தது. அந்த கசப்பான நினைவை மனத்தில் அசைபோட்டுக் கொண்டு வண்டிக்குள் ஏறி அமர்ந்தேன்.
இன்று டில்லியில் வசிக்கும் முக்கியத் தமிழ்க்குடிமகன்களுள் நாமும் ஒருவர். ஒரு விதத்தில் டில்லித் தமிழ் மாணவர்களின் பாதுகாவலன் என்று கூட சொல்லுவார்கள். பூமி உருளும் வேகத்தில் மனிதர்கள் மட்டும் அங்குமிங்கும் பந்தாடப் படவில்லை அவர்களுடைய மதிப்பும் மன உணர்வுகளும் தான் எங்கெங்கெல்லாம் தூக்கி எறியப் படுகிறது. அது பயண காலம் அல்லாததால் வண்டியில் கூட்டம் குறைவே. இரவுக்குள் மனதும் எதையோத் தேடியவாறு உறங்கி விட்டது.
காலையில் எழுந்ததும் படிப்பதற்காக கொண்டு வந்திருந்த ந. காமராசுவின் ‘கருப்பு மலர்கள்’ கவிதைத் தொகுதியைக் கையில் எடுத்தேன். சுவடுகள், ஞானக் குளியல் போன்ற கவிதைகளை முடித்தேன். குறியீடு, படிமம் என கவிதை முழுவதும் அந்த காலத்தின் புதிய உத்திகள். நாம் எப்போது இப்படியெல்லாம் எழுதப் போகிறோம் என்ற ஏக்கத்தோடு அடுத்தக் கவிதையை வாசித்தேன். ‘காகிதப் பூக்கள்’ -
தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்
விடுபட்ட திருநங்கைகளைப் பற்றி எவ்வளவு உணர்ந்து எழுதியுள்ளார்!
வண்டி நாக்பூரை அடைந்தது. சாப்பிட இறங்கிச் சென்றபோதுதான் முதல் பயணத்தின் போது அங்கு நடந்த இன்னுமொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒருவன் அந்த குளிர்காலத்தில் கோட் சூட் போட்டிருந்த ஒரு சாய்வாலாவிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க அவன் பதிலுக்கு ‘கியா?’ என்று வினவினான். உடன் அனைவரும் ‘டேய் அவன் குளிருக்கு கோட் மாட்டியிருக்கான். உடனே அவனை இங்க்லீஸ்காரன்னு நினைச்சிடுவியே’ என்று ஓட்டித் தள்ளினோம். இதே நண்பனைத்தான் பின்பு டில்லியில் நாங்கள் இறங்கும்போது ஐந்தாறு திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு பணம் பறிக்க முயன்றனர். அவனைக் காப்பாற்றுவதற்குள் நாங்கள் பட்ட பாடு! கண்ட இடத்தில் கைவைத்து அவனைக் கொஞ்சம் மான பங்கம் வேறு செய்தனர். கல்லூரிகாலம் முடியும்வரை அவனை அதைச் சொல்லி ஓட்டாத நாளில்லை.
சாப்பிட்டுவிட்டு வண்டிக்குள் ஏறும்போதுதான் ஒரு நடுத்தர வயது பிராமணர் ஏறி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். பேச்சுத் துணைக்கு ஆளில்லை என்றதும் என் வாயைக் கிளறினார், தன்னைப் பற்றி உளறினார். நானும் வேறு வழியில்லாமல் உட்கார்ந்திருந்தேன். “இந்த காலத்து மந்திரியெல்லாம் இருக்காளே எங்க மத்தவாளைப் பத்தி யோசிக்கிறா! தன் வேலையானா போதும்னு போயிண்டே இருக்கா.. வெரி கரப்ட் அண்டு இன்சென்சிடிவ் யு நோ..! நாட்டை எங்கே கொண்டு வந்து சேத்துட்டா பாத்தேளா! ” என அடுக்கிக் கொண்டே போனார். நமக்கும் சற்று கோபம் அதிகமாக வரவே -
“ஏன் சார் யாரோ சிலர் செய்த தப்புக்கு எல்லாரையும் குற்றம் சொல்வது எப்படி நியாயம்? சுதந்திரம் வாங்கினப்போ இருந்த நாடு கிடந்த கிடைக்கு இப்போ எவ்வளவு முன்னேறி இருக்கோம். மேலும் மந்திரிகளை நாற்காலியில் அமர வைப்பதே நாமதான். அப்படி இருக்கும்போது பழியை அவர்கள் மேலே போடுவது எந்த விதத்துல நியாயம். டெமாக்ரஸில அரசு நம்முடையது. அப்படி இருக்கும்போது நடக்கிற ஒவ்வொரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாம தானே பொறுப்பெடுத்தாக வேண்டும். ” என்று நமக்குத் தெரிந்த அரசியலை வைத்து அவரை மொக்கை போட்டேன். கொஞ்ச நேரம் அவரும் எதுவுமே பேசாமல் வந்தார்.
திடீரென்று இரண்டு திருநங்கைகள் இரயிலில் வாலிபர்களைத் தேடி பணம் பறித்துக் கொண்டு வந்தனர். ஏற்கனவே ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் கற்றுத் தந்த பாடம் – புத்தகத்திற்குள் முகம் புதைத்து கண்டு கொள்ளாமல் இருந்தேன். வந்தவர்களுள் ஒருவர் தனது மேலாடையை எனக்கு மட்டும் தனது நிர்வாணம் தெரிவது போல் தூக்கி ‘தேக் ….. தேக் … ‘ என்றார். நான் அறுவறுத்து கண்களை மூடிக் கொண்டு ‘ஜா’ என்று கத்தவே ஒருவர் சென்றுவிட்டார். இன்னொருவர் மட்டும் என்னருகே வந்து என் நாடியைப் பிடித்துக் கொண்டு தமிழிலேயே ‘ஏம்பா?‘ என்றார். நான் அதிர்ச்சியுற்று அவரை நிமிர்ந்து பார்க்கையில், தன் உணர்வுகளே தன்னை இந்தச் சமூகத்தில் இருந்து சிறைபடுத்திவிட்ட துக்கமும் ஏக்கமும் கண்ணில் தோன்ற என்னைப் பார்த்தார். இரெண்டு நிமிடம் கழித்து சென்றுவிட்டார்.
“ஏன் சார் யாரோ சிலர் செய்கிற தப்புக்கு எல்லாரையும் குற்றம் சொல்வது எப்படி நியாயம்?” நான் சொன்ன வார்த்தைதான் சுட்டது.






