Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சினிமா’ Category

இதோ ஆஸ்கார் விருது பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கு எனது நண்பன் அவரது சாதனைகளை வைத்து எழுதிய ஒரு சிறு கவிதை.  உங்கள் பார்வைக்காக. ஆங்கிலத்தில் முன்னுரை இருந்தாலும் கவிதை தமிழில்தான் குழம்பிவிட வேண்டாம்.

எனது மனங்கவர்ந்த தொலைக்காட்சி விளபரங்களைப் பார்க்க

இங்கே க்ளிக்குங்கள்

Advertisements

Read Full Post »

ரொமப நாள் கழிச்சு ஒரு படத்தை அது வெளியிடற அன்றைக்கே பார்த்தாச்சு… அதுதான் முதல் ஆளா அதைப் பற்றி எழுதனும்னு எழுதுறேன்… ஆனா படத்தோட கதைய நான் சொல்ல போறது இல்லை.

சரி படத்தைப் பற்றி..

விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா (சேது- தேவதாசிகள் மற்றும் மனநோய் குன்றியவர்கள், நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள், பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்)  இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம் பிச்சைக் காரங்க… ஆமாம் நல்லா இருக்கிறவங்களை முடமாக்கி பிச்சை எடுக்க வச்சு சம்பாதிக்கிறவங்க. படத்தோட பெரிய பலம் என்னன்னா  வர்த்தக ரீதியான பாட்டு, கூத்து, காமத்தைக் கிளறி விடுகிற காட்சிகள் அழகான அரை குறை ஆடை போட்ட நாயகி, காதல் அப்படின்னு எதுவுமே இல்லாமல், எல்லோரும் பேசவே கஷ்டப் படுகிறவங்களோட வாழ்க்கைய அதிகமா முகம் சுளிக்க வைக்காம ஜனரஞ்சகமா எடுத்திருக்கிற விதம் ரொம்ப அருமை.  அதைவிட அகோரிகளின் (கபாலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு இந்து மத வகுப்பினர்) வாழ்க்கையையும் அதில் இருக்கிற எந்த முரண்பாடுகளையும் தொடாமல் அழகாகக் கையாண்டிருக்கிற விதம் அருமை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை கருவாக வைத்து தலைப்பும் வைத்ததாலோ என்னவோ வழக்கம்போல் பாலா படத்தின் முடிவை யூகிக்க முடிகிறது. ‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’ என்ற படத்தின் உயிர் நாடியான வசனம் அருமை. ( இந்த தத்துவத்தில் இரெண்டிற்குமே மரணம் தானான்னு கேள்வி எனக்குள்ளயும் எழும்பியது) ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமும் நிறையவே இருக்கு. மொத்தத்தில் பாலாவின் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியும், பல வருடங்கள் பட்ட கஷ்டமும் நன்றாகவே தெரிகிறது.

நடிப்புன்னு பார்த்தீங்கன்னா ஆர்யாவுக்கு எதிர்பார்த்ததைவிட நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். ஏன் வசனமும் கம்மிதான். அதுதான் பிதாமகன்லேயே பார்த்தோமே. ஆனா என்னை ஆச்சர்ய படவச்ச விஷயம் ஆர்ய போடுகிற பத்ம சிரசானம். ரொம்ப பயிற்சி எடுத்ததாக ஏற்கனவே பத்திரிக்கைல படிச்சேன். அதுக்காகவே நெஞ்சில பதியிற அளவுக்கு அந்த ஆசனத்துல நின்றிருக்கார்.

ஆனா மிகப் பெரிய ஆச்சர்யம் இன்னும் ஒன்னு இருக்கு அதுதான் கதாநாயகி பூஜா. இது வரைக்கும் அதிகம் பேசப்படலை. மேலும் ஆர்யாவைவிட பூஜாவுக்கு வாய்ப்பு அதிகம். ஒரு காட்சியில திருவருட்செல்வர் படத்துல திருநாவுக்கரசரா வந்து கடைசியில சிவனிடம் கெஞ்சுகிற சிவாஜிய ஞாபகப் படுத்தினார்னா பார்த்துக்குங்க. ஆனா இவருகிட்டயும் இவ்வளவு வேலை வாங்க முடியும்னு பாலா நிரூபிச்சிட்டார். என்ன.. ஆணாதிக்கம் கொண்ட திரைஉலகுல பூஜாமாதிரி நடிகைகளுக்கு வாய்ப்பும் வரவேற்பும் எப்படி இருக்கும்னுதான் தெரியல. பேசாமலேயே மொழிபடத்துல கலக்கின ஜோவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான்.  பூஜாவுக்கு பெரிய ஜே… ( பி. கு. : எனக்கு இதுவரைக்கும் அவர்மேல பெரிசா நாட்டம் இருந்ததில்லை)

அடுத்து பாலா தேடிக்கொண்ட முக்கியமான பலம் இளையராஜா. அவரைப் பற்றியோ அவருடைய இசையை பற்றியோ கருத்து சொல்லுகிற அளவுக்கு எனக்கு இசை அனுபவம் குறைவுன்னாலும் படத்தோட உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்னு சொல்கிற அளவுக்கு உரிமை இருக்கு.

ரொம்ப பெரிசா பேசப்பட்ட காசி காட்சிகள். நானும் நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா முதல் அரைமணிநேரத்திற்குள்ள காசி காட்சிகளே முடிஞ்சிடுது. ஆனா அந்த அரைமணி நேரமும் என்னை சீட்டு முனையில உட்கார வச்சு பார்க்க வச்சிட்டாரு பாலா. கதைக்கு தேவையான அளவு காசி வாழ்க்கையின் பரிமானங்களை ஒரு பாட்டிலும் சில காட்சிகளிலும் காட்டிவிட்டார். எரிகிற பிணங்களுக்கு நடுவுல இருந்து தவம் செய்கிற அகோரிகளை காட்டும் இடம் உடம்பெல்லாம் புல்லறித்துவிட்டது.

இயலாமையோடு இருக்கிற சிலர் இந்த படத்துல நிறைய நேரம் வரும்போதும் அவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்களுக்கு ஜெயமோகனுக்கு ஜே.  அவர்கள் கவலைகளையும் மறந்து சிரித்து வாழ்கிற விதங்களையும் பார்த்து நாம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நிறையவே எடுக்க வேண்டியுள்ளது.

பாலா கதை இப்படித்தான்னு தெரிஞ்சும் அவரது காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து திரையரங்குல எல்லாருமே கைதட்டினாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. எல்லாராலும் இதை ரசிக்க முடியுமான்னு எழும்பின கேள்விக்கு முடியும்னு பதில் சொல்லிட்டாங்க.

ஒரு கனமான கதையை எதிர்பார்த்து போனதாலோ என்னமோ தெரியல ஆனா படம் பார்த்துட்டு மனசெல்லாம் ஃப்ரெஷாவும், ஒரு புது வேகமும் வந்திருக்கு சோகம் குறைஞ்சு இருக்கு.

கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு வெளிவந்திருக்கிற படம் எடுக்கப் பட்ட முயற்சி வீண் போகல. இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத சிலருக்கு அவர்களது முடிவு ஏமாற்றம் தான்.

நம்பி பார்க்கலாம்… மீண்டும் கூட இன்னும் ஒன்றி பார்க்க உதவியா இருக்கும்.  ‘நான் கடவுள்’ குழுவுக்கு என் வாழ்த்துகள்.

Read Full Post »

                டெல்லியில் சென்ற மாதம் ஒன்பதாவது ஓசியான் (ஆசிய-அரபு) திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒரு படத்திற்கு 20 ரூபாய் மட்டும் டிக்கட் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் க்ரீன் பார்க், பி.வி.ஆர் திரையரங்குகளில் ஒரு வாரம் 100க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் நண்பர்களோடு நானும் கடைசி நாள்தான் சென்று பார்த்தேன். உலக அளவில் இருந்து பல நல்ல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், இந்தியப் பிரிவிற்கான போட்டியில் பருத்திவீரன் திரையிடப் பட்டது நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய செய்தி.

                அந்தப்படத்தின் சிறப்பாக அனைவரும் தன்னை ஏதுனும் ஒரு நிலையில் இணைத்துப் பார்க்க வைத்த திரைக்கதை பெருமையாகப் பேசப்பட்டது.  அதே நேரத்தில் முக்கியமாக இந்திய பிரிவில் சிறந்த படத்திற்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கொடுக்கப்பட்டது நம் அனைவரையும் மகிழ்விக்க வந்த செய்தி.

                தமிழில் புது இயக்குநர்கள் பலர் ஒரு நல்ல கதையை சிறப்பான உத்திகளோடு படமாக்கும் முயற்சியில், ஈடுபட்டு இருக்கையில் இந்தச் செய்தி தமிழ் சினிமாவின் ஆரோக்கிய்த்திற்கு உதவும் என்றே நம்புகின்றேன்.  அவர்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் சினிமாவின் பெற்றோர்களின் கடன் தானே! அனைவரையும் மகிழ வைத்த பருத்திவீரன் தயாரிப்பு குழுவினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களை நமது நட்சத்திர வாரத்தில் கௌரவிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

Read Full Post »

                காதலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த ஒரே நாகரிகம் நமது தமிழ் நாகரிகமே ஆகும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த இலக்கணத்தின் படியே பெருந்திணை என்ற ஒன்று பொருந்தாக் காமம் பற்றி கூறுவது என்பது எல்லாரும் ஏற்றுக் கொண்ட செய்தி (ஆனால் அதுமிகு காமம் குறித்தது என்பது வ. சுப. மாணிக்கனார் சொல்கிறார்).  அந்த பொருந்தா காமம் குறித்த சமீபத்திய படம் குறித்த ஒரு சின்ன அலசல்.

‘சீனி கம்’ பிரபல விளமபர இயக்குநர் பால்கியின் புதிய இந்தி படம்தான். இளையராஜாவின் பழைய பொன்னுக்கு புது முலாம் பூசி தமிழகத்திற்கு வெளியே உள்ள மக்களை அவருடைய இசை மழையில் நனைக்க வைத்த படம். இளையராஜா மட்டும்தான் இதில் நாயகனா என்றால் இல்லை. அமிதாப், தபுவுக்கென்றே எழுதப் பட்டக் கதையாம், அவர்களை மறக்க முடியுமா?

லண்டனில் ஒரு பெரிய இந்திய உணவகம் வைத்து மிகவும் பெருமையாக வாழ்ந்து வரும் 64 வயது இளைஞன் புத்தா (அமிதாப்). தனது மடையர்களிடம் சுயபுராணத்தையும்  சமியல்காரனுக்குத் தேவையான கட்டுப்பாடையும் பேசிக் கொண்டிருக்கையில் அவருடைய உண்வக்த்தில் இருந்து வெளியே சென்ற ஜாஃப்ரானி புலாவ் இனிப்பாக இருக்கிறதென்று திருப்பி அனுப்பப் படுகிறது. போலி இந்திய உணவகத்தில் இதுவும் ஒன்று என்று பேசப்பட்டுவிட்டதாம். கோபம் கொண்டு அறுவது வயதுக்குறிய பொறுமையோடு புத்தா சென்று வாழ்க்கையில் என்றாவது அடுப்படி பக்கம் சென்று இருந்தால், எங்களுக்கும் ஜாஃப்ரானி புலாவ் செய்யக் கற்றுக் கொடுங்கள் என்று நீமாவிடம் கேட்க பதற்றமுடன் அங்கிருந்து வெளியேறுகிறாள். வீட்டிற்கு வந்தால் (94 வயது இளைஞி அவனுடைய அம்மா)் அவனுக்காக காத்திருக்கிறாள். அவளுக்குத் தேவையானது sex under the city, wwf என்ற தொலைக்காட்சி பொழுதுபோக்குதான்.

மறுநாள் அதே ஜாஃப்ரானி புலாவ் அடுப்படிக்கு வர இவ்வளவு அருமையாக உலகத்திலேயே இதுதான் இருக்க முடியும் இதைப் போய் குறைவிட்டாளே என்று புலம்பித்தீர்க்க இது நீமா இவருக்காக செய்து அனுப்பியது என்று தெரிய வருகிறது. உடன் இளையராஜா ‘சீனி கம் சீனி கம்…’ என்று நமது ‘மன்ற வந்த தென்றலுக்கு ‘ மெட்டி ஷ்ரேயா கோசலைப் பாட விட்டதும் அன்று எப்படி அந்த புலாவ் இனிப்பானது என்ற ஆரய்ச்சி தொடங்கி தனது தவற்றை உணருகிறார்.

சாரி எப்படி சொல்லுவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்போது கதை நாயகி sexy நுழைகிறார். ‘எனக்கு சொல்வதற்கா..? இப்போ எல்லாம் என்னை பார்க்கவே வருவதில்லை ஏன் interest போயிடுச்சா? ‘ துடுக்காக பேசிக்கொண்டே இரத்த புற்றுநோய் கொண்ட அந்த 8 வயது பக்கத்து வீட்டுப் பெண் பேசுகிறாள். ‘சரி வா கவலையை மறக்க குடிப்போம்’ என்று புத்தா அவளைக் கூட்டிக் கொண்டு போய் குடித்துகொண்டே வாழ்க்கையைப் பற்றி கேட்கும்போதுதான் அவளுக்குள் இருக்கும் கவலை தெரிய வருகிறது. ஆம் அந்தச் சின்ன உடம்பில் எவ்வளவு கவலை. அவளுடைய அப்பா அவளை A படம் பார்க்கவே விடறது இல்லையாம். கேட்டால் அவளுக்கு அது புரியாதாம். அதைப் பார்க்கிற வயசு அவளுக்கு வருவதற்குள் அவள் இறந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அதைப் பார்க்கமுடியாமலேயே போய் விடும் இல்லையா. அப்புறம் புத்தா கவலை வேண்டாம் நான் காட்டுகிறேன் என்று சத்தியம் செய்கிறார். அப்புறம் குழந்தைகள் பார்க்கிற மாதிரியான் A படம் வாங்கி வந்து தந்து அவளும் அதைப் பார்த்து கார்டூன் விக்கிறவன் கிட்ட இதைப் போய் வாங்கி வந்தால் இப்படிதான் படம் இருக்கும் என்று அவரைத்திட்டுவது இன்னொரு தனி கதை.

ஒரு முதியவனின் அகம் பாதிக்கப் பட்டு இவர்களது காதல் துவங்குகிறது. 34:64 நல்ல பொருத்தம் தான் மனசு பொருந்தினால். ஆனால் கல்யாண்த்திற்கு தன்னைவிட 6 வயது சிறியவனான தனது மாமனாரிடம் சம்மதம் வாங்குவது பாதிக்கு மேல் வரும் காதல் கதை. 58 வயது முதியவனையும், 64 வயது இளைஞனையும் கச்சிதமாகக் காட்டி இருக்கிறார் பால்கி. மெல்லிய நகைச்சுவை நிரம்பிய காதல் கதையும், கதா பாத்திரங்களும் பால்கியின் புதிய கண்டுபிடிப்பு. வாழ்த்துகள். துல்லியமாக கவனித்தால் பல வாழ்க்கை தத்துவங்கள் மிக சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. ‘முதல் மரியாதை’ காலத்தில் இருந்தே பொருந்தாக்காதல் பேசப் பட்டிருந்தாலும் அந்தக் காதல் அமைய கற்பனையாக ஒரு சோகத்தைத் தினிக்காமல், தேவையில்லாத பயம் நிரம்பாமல் மிக லேசாகக் கதையை எடுத்துச் சென்ற விதம் புதிது. இதன் தாக்கத்தில் ராம்கோபால் வர்மா ்ல் அமிதாபை வைத்தே நிஷ்ப்த் என்று படம் எடுத்து இதற்கு முன்பே வெளியிட்டு இதன் தாக்கம் தான் அது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பால்கிக்கு பெருமை தரக் கூடிய விஷயம் தான். ஒவ்வொரு காட்சியும் வசனமும் விளம்பர இயக்குநர்க்கே உரிய நேர்த்தியோடு செதுக்கியது அருமை. இப்படியெல்லாம் கதை சொல்லி போரடிக்க விரும்பலங்க. அமைதியாக ஆனந்தமாக பொழுதுபோக்க நினைத்து பொழுது போக்கினிங்கன்னா நான் கம்மியாதான் பாராட்டியிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். ஓ.கே.யா

Read Full Post »

இன்று டில்லியில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டு இருக்கும் மதுர் பன்டார்கரின் Traffic Signal படம் பார்த்து வந்தேன். உடன் எனக்கு பால பாரதியின் பதிவுதான் ஞாபகத்திற்கு வந்தது. மும்பயில் ஒரு முறை தங்கி இருக்கும் போது ஒரு தமிழ் சிறுவனின் அவல நிலை குறித்து அவர் ஒரு கதை (அனுபவம்) எழுதி இருந்தார். தியேட்டரில் முழுக்க அந்தப் பையன் தான் கண்ணில் வந்து நின்று கொண்டிருந்தான். ஆம் இந்த படமும் அப்படிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும் வர்க்கத்தை ஒட்டு மொத்தமாகக் காட்டும் ஒரு நடப்பியல் கதை.

சுனாமியில் பெற்றோரை இழந்து மும்பையில் குப்பை பொறுக்கி பணம் சேர்த்து அவர்களைத் தேடும் முயற்சியில் ஒரு பையன், சிக்னலில் பூ விற்றுப் பிழைக்கும் பெண், குழந்தையை வைத்து பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி, இரவில் பெரிய புள்ளிகளை பணமாக்கும் பாலியல் தொழிலாளர்கள் (பெண், ஆண்), சட்டை இல்லாது பைத்தியம் போல் நடிக்கும் ஒரு பிச்சைக்காரன், குஜராத்தில் இருந்து தப்பி வந்து துணி மணி விற்கும் பெண், காலையில் எழுந்ததும் வசவுகளுக்கு அஞ்சாது கார் லோன், வீட்டு லோன் குறித்து ஃபோன் செய்து பிழைக்கும் தொழிலாளிகள், வேசியின் மகன் என்று தெரிந்த பின் தானும் பித்தலாட்டம் செய்து வயிற்றைக் கழுவி முடிவில் போதை மருந்தால் உயிர் இழக்கும் இளைஞன், வயிற்றைக் கழுவ toy boys என்று சொல்லக் கூடிய வசதி படைத்த பெண்களை கவரும் இளைஞன், இவை எல்லாவற்றிற்கும் மேல் இவர்களுடைய வருமானத்தில் தொப்பை வளர்க்கும் பெரிய புள்ளிகள் என்று மும்பை நகர கீழ்தட்டு மக்களின்(பணத்திலும், பண்பாட்டிலும்) ஒட்டு மொத்த வாழ்க்கையை அங்கதச் சுவையோடு சொல்லும் ஒரு அழகான படம். அங்கே கதர் உடுத்தி இவர்களை சீர்திருத்த ஒரு சமூக ஊழியரும் உண்டு. துண்டு துண்டாய் இத்தனைப் பிரச்சனைகளையும் சுவையாகச் சொன்ன மதுர் பன்டார்கருக்கு ஒரு பெரிய ஓ…………….

இத்தனைப் பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டியதோடு நிறுத்தி அனைவருடைய மனதையும் தொட்டு விட்டார். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு என்பது சமூக மாற்றத்தில்தான் வருமே ஒழிய கற்பனையாய் இவர் கண்டு படைப்பை நீளமாகவோ, சுவை குறைந்ததாகவோ மாற்றவில்லை. ஆனால் அப்படி தீர்வு எதுவும் காணாமல் இவர்களுடைய பிரச்சனையை நாம் பணம் பண்ண ஒரு வழியாக மட்டும் மாற்றி வந்தால் இங்கே ஒரு படைப்பாளனின் பங்கு தான் என்ன? அனைவரும் இரெண்டு மணி நேரம் பார்த்து ரசித்து விட்டு ‘நல்ல படம்’ என்று கூறிவிட்டு வெளியே வந்து ஒரு டீக்கடையில் இருந்த அரசாங்க சான்றிதழ் படி 14 வயது நிரம்பிய ஒரு சிறுவனை ஏவி டீ வாங்கிக் குடித்ததுதான் மனதை இன்னும் நெருடியது. நடப்பியல் என்னும் விலங்குகளில் இருந்து நாம் (என்னையும் சேர்த்துதான்) விடுபடுவதுதான் எப்போது?

Read Full Post »

                 பல மாதங்கள் தயாரிப்பில் இருந்து, சில மாதங்கள் பெட்டிக்குள் இருந்து இறுதியாக வெளிவந்தது கே.பி. யின் சமீபத்திய தோல்வி. பாலசந்தரின் பழைய படங்களே அவருக்குப் போட்டி என்று பலர் விமர்சனம் எழுதிய பின்னும் பாலுவின் படம் என்பதால் ஒரு முறை ‘பொய்’ பார்க்கலாம் என்று உள்மனம் வற்புறுத்தியதால் பார்த்தேன்.

                நான் எழுதத் துவங்குவதற்கு பாலசந்தரின் கதாபாத்திரங்களின் பாதிப்பு பெரிதும் காரணம் என்பது உண்மை என்பதால் ஒரு விதத்தில் குரு சீட உறவு மானசீகமாக இருந்தது.

               ‘பாலு படங்களில் message இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும். அதை அவர் வீணடிக்கவில்லை. ஆமாம் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ இதுதான் ‘பொய்’ சொல்கிற message. ஆனால் இது மட்டும் தான்எதிர்பார்ப்பா? இது மட்டும் தான் அவருடைய சாதனையா? அப்படி இருந்தால் இது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையில் இருந்து messageஐ தேடிப் பிடித்து ஒட்டி இருக்கிறார்.

               ஆமாம் தமிழ்நாட்டில் (அப்பாவோடு) இருக்கும் பிரச்சனைக்காகக் கதை நாயகன் இலங்கை செல்கிறான். அங்கே ‘அப்பா யார்?’ என்ற கேள்விக்கு ஒரு கற்பனை அப்பாவை உருவாக்குகிறான். அது நிழலாய் பாலசந்தரின் உருவில் வந்து அவனை திருத்த முயலுகிறேன் என்று காதலிக்கச் சொல்கிறது. காதலும் கல்யாணமும் பெண்களின் சாதனைக்குத் தடையாக இருக்கும் என்று நம்பி வாழும் ஒரு பெண்ணைக் கண்டு காதலுக்காக நாயாய் பேயாய் அலைகிறான். இடையில் விதி என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் என்ற நிழல் வந்து திருப்பங்கள் கொண்டு வந்து ரோமியோ ஜூலியட் ஸ்டைலில் இருவரும் சின்ன தவறான புரிதலால் உயிர் இழக்கின்றனர். இறுதியில் அவர்கள் எடுத்த அவசரமான முடிவுதான் காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்ற கருத்தோடு படம் முடிகிறது.

               கதைக்கரு ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கமான பாலசந்தரின் மசாலாக்கள் இல்லாமல் இல்லை. தமிழுக்காக அவர் கொடுக்கும் முக்கியத்துவம், இசை குறித்த ஏதாவது கருத்துகள், கணவனை சந்தேகப் படுகிற மனைவி, சுனாமியில் பாதித்தவர்களின் வாழ்க்கை போன்றவை மூலமாக சுவாரஸ்யம் கூட்ட முயன்று இருக்கிறார். இவை எல்லாவற்றிற்குமேல், பாலசந்தரின் கதாபாத்திரங்கள் வெற்றி பெற்றதற்கான காரணம், இது வரை வந்த படங்களில் அவை நமது கற்பனைக்குள் நாம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ (ஆனால் இயற்கையாய் நடைமுறை விலங்கை மாட்டிக் கொண்டு திரியும் போது) அதை நிழலாய்க் கொண்டு வந்து காட்டும் பொழுது நம்மை ஈர்த்தது. இங்கும் அப்படி இந்தக் கதைப் பாத்திரங்கள் நடக்க முயன்றுள்ளன. அப்பா பெயரை வள்ளுவனார் என்று உச்சரிக்கத் தெரியாததால் interviewல் சென்று அப்பா பெயர் தெரியாது என்று சொல்வது, திடீரென்று வழியில் ஒருவனிடம் சென்று எனக்கு அவசரமாக ஒரு நண்பர் வேண்டும் என்று சொல்வதும், அப்புறம் அவன் நீங்க எங்கே தங்கி  இருக்கீங்க என்று கேட்கும் போது உங்க வீட்லதான் ‘எனக்கு தங்க  ஒரு இடம் வேண்டும் அதற்கு தான் ஒரு நண்பர் வேண்டும்’ என்று சொல்வதும் இப்படி நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள், மக்களின் ரசனை மாறிவிட்டது என்பதை குரு அளக்கத் தவறி விட்டார் என்பதை உணர்த்துகிறது.

               “ஆமாம் நான் பகிரங்கமா சொல்றேன் ஐ லவ் ஜே.கே.பி.” என்று சிந்து தனது உணர்வுகளோடு தோற்றுவிட்டதை ஒத்துக்கொள்ளும்போது இருக்கிற உயிர் ஷில்பா ‘நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லும்போது இல்லை. ‘உங்களை தயவு செய்து கேட்டுக்கிறேன் என்னை இருபத்துநாலு மணி நேர நர்ஸா இருக்க விடுங்க’ என்று நந்தினி கேட்கும்போது இருக்கிற உறுதி இங்கே ‘என்க்குன்னு ஒரு identity வேணும்னு விரும்புறேன் விடுதலைக் கொடு’ ன்னு ஷில்பா கேட்படில் இல்லை. இவர் கதையை அங்கேயே இன்னும் ஆழமா முடிச்சிருந்தால் கூட ஒரு தாக்கம் ஏற்படுத்தி இருக்கலாம். அதற்கும் அவர் சொல்ல வரும் கருத்து ஒத்துப் போகும். இசை இன்னும் கொஞ்சம் அழகாகப் பண்ணி இருக்கலாம். காட்சி மாற்றங்களில் இருந்து கதாபாத்திரங்கள் வரை பல இடங்களில் இவருக்குத் தூணாக இருந்த அனந்து இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. இவர் படங்களுக்கு அவர் உயிராக இருந்திருக்கிறார் என்பது வெளிப்படை. ‘பொய்’மையும் தோல்வியிடத்த அது சார்ந்த உயிர் இல்லையெனின் என்பது என் படைப்பனுபவத்தில் இந்த குருவிடம் இருந்து கத்துக் கொண்டேன்.

Read Full Post »