Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

ரொமப நாள் கழிச்சு ஒரு படத்தை அது வெளியிடற அன்றைக்கே பார்த்தாச்சு… அதுதான் முதல் ஆளா அதைப் பற்றி எழுதனும்னு எழுதுறேன்… ஆனா படத்தோட கதைய நான் சொல்ல போறது இல்லை.

சரி படத்தைப் பற்றி..

விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா (சேது- தேவதாசிகள் மற்றும் மனநோய் குன்றியவர்கள், நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள், பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்)  இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம் பிச்சைக் காரங்க… ஆமாம் நல்லா இருக்கிறவங்களை முடமாக்கி பிச்சை எடுக்க வச்சு சம்பாதிக்கிறவங்க. படத்தோட பெரிய பலம் என்னன்னா  வர்த்தக ரீதியான பாட்டு, கூத்து, காமத்தைக் கிளறி விடுகிற காட்சிகள் அழகான அரை குறை ஆடை போட்ட நாயகி, காதல் அப்படின்னு எதுவுமே இல்லாமல், எல்லோரும் பேசவே கஷ்டப் படுகிறவங்களோட வாழ்க்கைய அதிகமா முகம் சுளிக்க வைக்காம ஜனரஞ்சகமா எடுத்திருக்கிற விதம் ரொம்ப அருமை.  அதைவிட அகோரிகளின் (கபாலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு இந்து மத வகுப்பினர்) வாழ்க்கையையும் அதில் இருக்கிற எந்த முரண்பாடுகளையும் தொடாமல் அழகாகக் கையாண்டிருக்கிற விதம் அருமை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை கருவாக வைத்து தலைப்பும் வைத்ததாலோ என்னவோ வழக்கம்போல் பாலா படத்தின் முடிவை யூகிக்க முடிகிறது. ‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’ என்ற படத்தின் உயிர் நாடியான வசனம் அருமை. ( இந்த தத்துவத்தில் இரெண்டிற்குமே மரணம் தானான்னு கேள்வி எனக்குள்ளயும் எழும்பியது) ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமும் நிறையவே இருக்கு. மொத்தத்தில் பாலாவின் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியும், பல வருடங்கள் பட்ட கஷ்டமும் நன்றாகவே தெரிகிறது.

நடிப்புன்னு பார்த்தீங்கன்னா ஆர்யாவுக்கு எதிர்பார்த்ததைவிட நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். ஏன் வசனமும் கம்மிதான். அதுதான் பிதாமகன்லேயே பார்த்தோமே. ஆனா என்னை ஆச்சர்ய படவச்ச விஷயம் ஆர்ய போடுகிற பத்ம சிரசானம். ரொம்ப பயிற்சி எடுத்ததாக ஏற்கனவே பத்திரிக்கைல படிச்சேன். அதுக்காகவே நெஞ்சில பதியிற அளவுக்கு அந்த ஆசனத்துல நின்றிருக்கார்.

ஆனா மிகப் பெரிய ஆச்சர்யம் இன்னும் ஒன்னு இருக்கு அதுதான் கதாநாயகி பூஜா. இது வரைக்கும் அதிகம் பேசப்படலை. மேலும் ஆர்யாவைவிட பூஜாவுக்கு வாய்ப்பு அதிகம். ஒரு காட்சியில திருவருட்செல்வர் படத்துல திருநாவுக்கரசரா வந்து கடைசியில சிவனிடம் கெஞ்சுகிற சிவாஜிய ஞாபகப் படுத்தினார்னா பார்த்துக்குங்க. ஆனா இவருகிட்டயும் இவ்வளவு வேலை வாங்க முடியும்னு பாலா நிரூபிச்சிட்டார். என்ன.. ஆணாதிக்கம் கொண்ட திரைஉலகுல பூஜாமாதிரி நடிகைகளுக்கு வாய்ப்பும் வரவேற்பும் எப்படி இருக்கும்னுதான் தெரியல. பேசாமலேயே மொழிபடத்துல கலக்கின ஜோவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான்.  பூஜாவுக்கு பெரிய ஜே… ( பி. கு. : எனக்கு இதுவரைக்கும் அவர்மேல பெரிசா நாட்டம் இருந்ததில்லை)

அடுத்து பாலா தேடிக்கொண்ட முக்கியமான பலம் இளையராஜா. அவரைப் பற்றியோ அவருடைய இசையை பற்றியோ கருத்து சொல்லுகிற அளவுக்கு எனக்கு இசை அனுபவம் குறைவுன்னாலும் படத்தோட உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்னு சொல்கிற அளவுக்கு உரிமை இருக்கு.

ரொம்ப பெரிசா பேசப்பட்ட காசி காட்சிகள். நானும் நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா முதல் அரைமணிநேரத்திற்குள்ள காசி காட்சிகளே முடிஞ்சிடுது. ஆனா அந்த அரைமணி நேரமும் என்னை சீட்டு முனையில உட்கார வச்சு பார்க்க வச்சிட்டாரு பாலா. கதைக்கு தேவையான அளவு காசி வாழ்க்கையின் பரிமானங்களை ஒரு பாட்டிலும் சில காட்சிகளிலும் காட்டிவிட்டார். எரிகிற பிணங்களுக்கு நடுவுல இருந்து தவம் செய்கிற அகோரிகளை காட்டும் இடம் உடம்பெல்லாம் புல்லறித்துவிட்டது.

இயலாமையோடு இருக்கிற சிலர் இந்த படத்துல நிறைய நேரம் வரும்போதும் அவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்களுக்கு ஜெயமோகனுக்கு ஜே.  அவர்கள் கவலைகளையும் மறந்து சிரித்து வாழ்கிற விதங்களையும் பார்த்து நாம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நிறையவே எடுக்க வேண்டியுள்ளது.

பாலா கதை இப்படித்தான்னு தெரிஞ்சும் அவரது காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து திரையரங்குல எல்லாருமே கைதட்டினாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. எல்லாராலும் இதை ரசிக்க முடியுமான்னு எழும்பின கேள்விக்கு முடியும்னு பதில் சொல்லிட்டாங்க.

ஒரு கனமான கதையை எதிர்பார்த்து போனதாலோ என்னமோ தெரியல ஆனா படம் பார்த்துட்டு மனசெல்லாம் ஃப்ரெஷாவும், ஒரு புது வேகமும் வந்திருக்கு சோகம் குறைஞ்சு இருக்கு.

கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு வெளிவந்திருக்கிற படம் எடுக்கப் பட்ட முயற்சி வீண் போகல. இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத சிலருக்கு அவர்களது முடிவு ஏமாற்றம் தான்.

நம்பி பார்க்கலாம்… மீண்டும் கூட இன்னும் ஒன்றி பார்க்க உதவியா இருக்கும்.  ‘நான் கடவுள்’ குழுவுக்கு என் வாழ்த்துகள்.

Advertisements

சொல்ல மறந்த சொற்கள்..

முத்தக்காவின் வற்புறுத்தலின் பேரிலும், ரொம்ப நாளா பதிவு எழுதனும்னு நினைச்ச தலைப்பாகவும் இருக்கவே நாம எல்லாம் சொல்ல மறந்த சில சொற்களை நினைவூட்டி எழுத ஒத்துக்கிட்டேன்.

ஆனா எழுத உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது சொல்லிலக்கணம் அவ்வளவு சுலபம் இல்லை ராசான்னு.  எங்களோட முந்தைய தலைமுறையினர் அவ்வளவு பேரும் மதுரை தாண்டி கோவில்பட்டி. அதுனால அவங்க பயன்படுத்திய பல சொற்கள் தெற்கு வட்டார கிளைமொழிக்கு உட்பட்ட சொற்களாகப் போனதால இப்போ பல சொற்கள் நாங்கள் பயன்படுத்துவதே இல்லை.

ஆனா எங்க ஆச்சி (எங்க ஊருபக்கம் அப்பாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான் அம்மாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான், இப்போ மனோரமா தவிர அங்க எல்லாரும் பாட்டி ஆயிகிட்டு வாராக என்ன செய்ய அதுலயும் நிறைய கிரானீஸ் உருவாகிகிட்டு வாராக.. ம்ம்) பேசினதையெல்லாம் நினைச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

பரண்ல இருக்க அந்த வாளியை எடுத்துதான்னு” எங்க ஆச்சி எங்க மாமாவை நச்சரிச்சது ஞாபகத்துக்கு வந்தது. இப்போ சென்னைல மட்டுமில்ல அங்கயும் அதிகமா லாஃப்ட்டும், பக்கெட்டும் தான் வளர்ந்து வருகுது.

இப்போ எல்லாம் ‘முத்தம் (முற்றம்)‘ வச்சு வீடு கட்ட இட வசதியே பற்றாம போயிடுச்சு அதுல எங்க வார்த்தைய ஞாபகம் வச்சுக்கிறது. சின்னதா ஒரு வாசல் வச்சு ரோட்டுமேல கோலம் போடுகிற கலாச்சாரம் தான பெருகி வருகுது.

எங்க ஆச்சி வீட்டுல ஒரு அழகான கிளி வளர்த்தோம். அது யாரு என்ன பேசினாலும் அப்படியே பேசும். முதல் தடவையா கிளியால அவ்வளவு பேச முடியும்னு தெரிஞ்சிகிட்டேன்.  ஊருக்குப் போகும்போதெல்லாம் எங்க ஆச்சி சொல்லுவாங்க ‘சுவத்துல கெவுளி/கவுளி (பல்லி) கத்துனாகூட இந்த கள்ளபயபுள்ள அது மாதிரியே கத்தும்’ . அதை ஏன் கள்ளப்பயபுள்ளன்னு சொன்னோம்னா அது நாங்க அதுகூட விளையாடலைன்னா எங்க சின்ன சின்ன பென்சிலை களவாண்டுட்டு (திருடிகிட்டு)  போயிடும்.  அப்போயெல்லாம் அந்தக்கிளியை ‘பவுசு(பவிசு-செருக்கு) கொழிச்சு ஆடாத கிளியேன்னு’ எங்க ஆச்சி எவ்வளவு வையும்(வைதல் – திட்டுதல்)எவ்வளவு அறிவு இல்லை ஆனா அது கூண்டுக்குள்ள போகவே போகாது. ஒரு தடவை ஊருக்குப் போனபோது அது இல்லை. ஆச்சியை கேட்டதுக்கு ‘களவானி கிளி… கூண்டுக்குள்ள போக மாட்டேன்னிடுச்சு. ஒருநா ராவுல(இரவுல) ஒரு வெரு (வெருகு – ஆண்பூனை; காட்டுப்பூனை) கவ்விகிட்டுப் போயிடுச்சு’.  அப்போதான் என் வாழ்க்கையிலேயே முதல் தடவையா ஆண்பூனைக்குன்னு தனியா வெருகுன்னு ஒரு வார்த்தை இருக்கிறதையே தெரிஞ்சிகிட்டேன்.

இதையெல்லாம் விட எங்க சித்தப்பாவுக்கு நாகர்கோயிலை சேர்ந்தைவங்களைத்தான் முடித்திருந்தோம். அந்த சித்தியோட மொழியில நாஞ்சில் தமிழ் நடனமாடும். எல்லாரும் அதுல மலையாள வாடை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் தொல் திராவிட மொழியில இருந்த பல தமிழ் சொற்களை நாஞ்சில் தமிழ் பாதுகாத்து வச்சிருக்கு. இப்போ எல்லாம் எங்க சித்தப்பா பிள்ளைங்களே யாரையும் ‘விளி‘க்கிறது இல்லை. கூப்பிடத்தான் செய்றாங்க.  அப்போதான் அவங்க பயன்படுத்துற வசவு(வசை- திட்டுதல்) ஏதாவுது இருக்கான்னு யோசிச்சு பார்த்தப்போ அடிக்கடி சொல்லுகிற ‘பட்டி‘ நினைவுக்கு வந்தது.  அதைப் பற்றி சொற்களஞ்சியத்துல போட்டிருக்கான்னு திருப்பி பார்த்தப்போ பட்டிக்கு பழந்தமிழ்ல இவ்வளவு அர்த்தங்கள் இருந்தது தெரிந்தது. சுவாரஸ்யமா இருக்கவே உங்கள் பார்வைக்கு. பட்டின்னா நமக்கெல்லாம் மன்னிக்கணும் எனக்கெல்லாம் தெரிந்தது நாய், சிற்றூர் மட்டும் தான். களவு, தெப்பம், மகன், விபசாரி, அட்டவணை, தெப்பம், ஆட்டுக்கிடை,பசுக்கொட்டில், விக்கிரமாதித்தனுடைய மந்திரி, பாக்குவெற்றிலைசுருள், பூச்செடிவகை, காவலில்லாதவர், சீலை, இடம் இப்படி இத்தனை அர்த்தத்தை மறந்ததைப் புரிஞ்சுகிட்டேன்.

இந்த காலத்துப் பெண்கள் சீலையையும் மறந்துட்டாங்க, இரவிக்கையையும் மறந்துட்டாங்க. மன்னிக்கணும் அந்த சொற்களைத்தான் சொல்கிறேன். எப்படி ஞாபகம் வச்சுப்பாங்க ஆம்பளைங்க சேரியும் ப்ளவுசும் தான வாங்கி தாராங்க.

அடுப்படிங்கிற வார்த்தையயே நாம எல்லாம் மறந்து தான போயிருக்கோம். மடப்பள்ளி என்கிற வார்த்தையெல்லாம் எங்க ஆச்சி காலத்துலயும் பயன்படுத்தினாங்க. இப்போ எல்லாம் கிச்சன் தானே. அதுக்கு மேல எங்க ஊர் பக்கம் உள்ளி (வெங்காயம்) என்கிற சொல்லின் வழக்கும் குறைந்தே வருகுது.

உள்ளின்னு சொன்னவுடனே எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வருகுது.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

ஊக்கமுடைமைல வரும். நாம் நினைக்க வேண்டியவை எல்லாம் உயர்வானதாக இருக்கணும்னு சொல்லும்போது இப்படி சொல்லுவாரு. உள்ளுதல் அப்படின்னா நினைத்தல், ஆராய்தல் போன்ற பொருள்ல பல இலக்கியத்துல பயன்படுத்தி இருக்காங்க. நினைத்தலுக்கு  இவ்வளவு அழகான ஒரு வார்த்தை தமிழில் இருந்து நாம அதை பயன்படுத்துறது இல்லையேன்னு நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்  போதே ‘திங்க்’ பண்ணதுண்டு.

இந்த இடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொமொரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருக்குறள்ல கல்லாமை அதிகாரத்துல

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்

அப்படின்னு ஒரு குறள் வரும். அதாவுது படிக்காதவன் சொல்லுகிற செய்தி நல்லது மாதிரி தெரிஞ்சாலும் படிச்சவங்க அவங்கள படிச்சவங்க கூட்டத்துல ஏத்துக்க மாட்டாங்களாம். இங்க படிக்காதவங்கன்னு சொல்வது அனுபவத்துலயும் கேள்விலயும் கல்விலயும் அறிவை சேத்துக்காதவங்கன்னு வச்சிகிட்டா நல்லா இருக்கும். நம்ம தலைவரோ தனுஷோ இல்லை.  இதை பரிமேலழகர் சொல்லும்போது அது எதுனாலன்னா அவங்க சொல்வது ‘ஏரல் எழுத்து போல்வதோர் விழுக்காடாம்’. அப்படின்னு சொல்லுவார். அதாவது நத்தை ஊர்ந்து போகும்போது மணல்ல எப்பவாவது அதுங்க போன தடம் எழுத்து மாதிரி தெரியலாம் அதுக்காக அது படிச்சிட்டு எழுதுச்சுன்னு ஏத்துக்கவா முடியும்.  ஏரல் நத்தைக்கான அழகான சொல் இல்லை. மேலும் இப்போ எல்லாமே பர்செண்டேஜ் தான் விழுக்காடு எங்க?

எங்க பக்கத்து வீட்ல…

திருமகனே திருமகனே நீயொரு நாழிகை நில்லாய்

வெண்ணிற புரவியில் வந்தவனே…ன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கு. புரவிங்கிறது கூட குதிரைக்கு அழகான வார்த்தை தான். அந்த வார்த்தையை மறக்காம இருக்க உதவி புரிஞ்ச வைரமுத்துவுக்கும் ஒரு சலாம்.

ஏதோ கடலோரத்தல நத்தை ஊர்ந்து போகிறமாதிரி என் நினைவலைகள்ல ஊர்ந்து போகியிருக்கேன். ஏரல் எழுத்து மாதிரி ஏதாவுது சில சொற்கள் உங்கள் பேச்சு வழக்கிற்கு இல்லைனாலும் எழுத்து வழக்கிலாவது மறக்காம இருக்க  உபயோகப்படும்னு நினைக்கிறேன். ஏதாவுது தப்பு இருந்தா ஏரல் எழுத்து தான்னு மறந்திடாதீங்க. ரைட்டா?

என் நினைவுகளைத் தொடர்ந்து இன்னும் மறந்து போன சொற்களை நினைவு படுத்த நான் அழைப்பது

சென்ஷி

என் பதிவுகளில் பல அறிய உண்மைகளைச் சொன்ன நாக இளங்கோவன்

மேலும் முன்னாள் அயன் ஆண்ட புர வாசி பாலபாரதி

அம்மாவோட மஞ்சள் புடவை

அம்மாவோட மஞ்சள் புடவை

இன்றைக்கு என் பிறந்த நாள். கண்டிப்பா அம்மா அந்த மஞ்சள் புடவையைத்தான் கட்டுவாங்க. அந்த புடவைதான் எவ்வளவு அழகு. அம்மாவுக்கும் அதைக் கட்டுறதுன்னா ரொம்ப பிடிக்கும். மஞ்சள் கலருல அங்கங்கே சின்னசின்னதா ரோஜாப்பூ போட்டு…. மனசெல்லாம் புதுசா மாறிடும். அதுல இருந்து எனக்கு மஞ்சள்னா ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வெள்ளிக்கிழமைகள்ல காலைல மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு அந்தப் புடவையை அம்மா கட்டிகிட்டு வந்து சோறு ஊட்டுவாங்களே. அதை சாப்பிட்டுட்டு அப்படியே அவங்க மடியில அந்த மஞ்சள் கலருக்கு நடுவுல தூங்கி எழுந்தா எப்படி இருக்கும். நேற்று தினேஷ் வீட்டுல விளையாடப் போகும்போது கூட அவங்க வீட்டுல இருக்கிற ஸ்க்ரீன் மாதிரி நம்ம வீட்டிலையும் போடனும்னு எவ்வளவு அடம் பண்ணோம். அப்போகூட அந்த மஞ்சள் புடவைமாதிரிதான துணி வாங்கனும்னு ஆசைப் பட்டோம்.

ரெண்டு வருஷம் முன்னாடி அப்பா ஏதோ ஒரு பண்டிகைக்கு வாங்கிட்டு வந்தாங்க. அதுல இருந்து அம்மாவுக்கு அந்தப் புடவைன்னா ரொம்ப பிரியம். அதுக்கு அப்புறம் அப்பா அம்மாவுக்கு புடவை வாங்கி வரவே இல்லை. ஏன் எனக்கு விவரம் தெரிஞ்சு அப்பா வீட்டுக்கு வரவே இல்லை. அப்பா ரொம்ப நாள் வரலைன்னு சொன்னதும் அம்மா தாத்தாவீட்டுக்குப் போனாங்க. அப்போ அவங்க வீட்டு வாசல்ல மஞ்சள் பழமா வந்து இறங்கிச்சு.  நிறைய பசங்க அவங்க வீட்டு வாசல்ல விளையாடிகிட்டு இருந்தாங்க.  என்னையும் விளையாட்டுல சேத்துப்பீங்களான்னு கேட்டேன்.  அப்போதான் அப்பா வந்து சேர்ந்தாரு.  புது சொக்காவெல்லாம் போட்டு இருந்தாரு.  எல்லாரும் பக்கத்துல இருக்கிற மாதா கோயிலுக்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க.  அம்மா உடனே அப்பா கிட்ட ஏதோ சொல்லி அழுதாங்க.  தாத்தா என் பிள்ளைய குறைசொல்றியா நீயின்னு அம்மாவை போட்டு ரோட்டுல நிற்கவச்சு அடிச்சிட்டாரு. அப்புறம் அம்மா எனக்கு தாத்தா பாட்டின்னு சொந்தம் யாருமே இல்லைன்னு நினைச்சிக்க சொன்னாங்க. அன்றைக்கே அம்மா தினேஷோட வீட்டுக்கு அழுதுகிட்டே போனாங்க. அங்க தினேஷோட அம்மாதான் ஆறுதல் சொன்னாங்க. அப்போ தினேஷ் வீட்டுலயே படுக்க வச்சுகிட்டாங்க. அந்த தலகாணி உரைகூட மஞ்சள் கலருல அம்மாவோட புடவை மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் தினேஷோட அப்பா தையல் மிஷின் வாங்கி வந்து கொடுத்தாரு. அதுல அம்மா தைக்கும்போது டக டகா டக டகான்னு ரயில்ல போற மாதிரி சப்தம் கேட்கும்.

நான் ரயில்ல ஒரே ஒரு தடவை போயிருக்கேன். அப்பா எங்களை ஊருக்கு கூட்டிகிட்டு போனாரு. அங்கதான் எங்க தாத்தா வீடு. அப்போ அங்க நானு சுரேஷ் அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ரயில் மாதிரி சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு விளையாடிகிட்டு இருந்தோம். அப்பல்லாம் சுரேஷ் வீட்டுலதான் தங்கினோம். அவங்க அம்மாவை நான் பெரியம்மான்னு கூப்பிடனும்னு சொன்னாங்க. எங்க பெரியம்மா அம்மா அப்பா சுரேஷ் நாங்க எல்லாரும் எங்க தாத்தாவீட்டுக்குப் போனோம். அங்க யாருமே உட்கார்ந்து பேசலை. நின்றுகிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல நாங்க எங்க ரயில விட்டு விளையாடிகிட்டு இருந்தோம். சந்து பொந்துல எல்லாம் ரயிலை விடறது எவ்வளவு நல்லா இருந்தது. திடீர்னு எங்க தாத்தானு சொன்னவரு சுரேஷை பிடிச்சு அடிச்சிட்டாரு. அப்போ நாங்க ஊருக்கு வரவரைக்கும் சுரேஷ் என்கூட விளையாட வரலை. அம்மா தான் என்னை அரவனைச்சு வச்சுகிட்டாங்க. .  அந்த பெரியம்மாவை அப்புறம் நான் பார்த்ததே இல்லை.

அம்மாகிட்ட ஏன் அப்பா வரலைன்னு கேட்டேன். அப்பா ஏதோ வேலை விஷய்மா வெளியூரு போயிருக்காருன்னு சொன்னாங்க. அந்த வருஷம் பேரண்ட்ஸ் டேக்கு கூட அப்பா வரலை.  ஆனா அவரமாதிரியே ஒருத்தரை ஒருநாள் தெருவுல பார்த்தேன்.  அவருகூட பச்சை கலரு புடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு போய்கிட்டு இருந்தாங்க.  அவங்க எல்லாம் ஞாயித்து கிழமை மாதா கோயில் பூஜை முடிச்சிட்டு வந்து கிட்டு இருந்தாங்க.  அம்மாகிட்ட சொன்னப்போ நம்ம அப்பான்னா கண்டிப்பா நம்மளை தேடி வருவாரு. அவரு வேற யாரோன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு ஸ்கூல்ல கலர் பென்ஸில் வாங்கி வர சொன்னாங்க. அம்மா தினேஷ் வீட்டுல விளையாடிட்டு அவனோட கலர் பென்சில் எதாவது இருந்தா வாங்கி வரலாம்னு சொன்னாங்க. தினேஷோட பழைய பென்சிலை எல்லாம் வாயில வச்சு மென்னு துப்பி இருந்தான். தினேஷ் அம்மா அவரு வந்த உடனே வேணும்னா வாங்கி கொடுத்து விடறேன்னு சொன்னாங்க. அப்போதான் அவங்க வீட்டு ஸ்க்ரீன் துணியை பார்த்தேன். மஞ்சள் கலருலயே இருந்தது. அம்மாகிட்ட அதுதான் அந்த புடவைய ஸ்க்ரீனா பண்ணிப்போடுங்கன்னு அடம் பிடிச்சேன். அம்மா எதுவுமே சொல்லல்ல . என்னைத் தூங்க வச்சிட்டாங்க.

காலைல புது ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க. பென்சில் வாங்கி தரவே இல்லை. நான் போக மாட்டேன்னு சொன்னப்ப இன்னிக்கு பொறந்த நாளு யாரும் என்னைத் திட்ட மாட்டாங்கன்னு சொன்னாங்க. டீச்சரும் என்னை திட்டல. ஆனா ஸ்கூலுக்கு ஒரு கலர் பென்சில் டப்பா வந்தது. தினேஷோட அப்பாதான் லேட் ஆயிடுச்சுன்னு கொண்டு வந்து கொடுத்தாராம். அந்த கலர் பென்சில்ல மொதல்ல அம்மாவோட முகம்தான் வரைஞ்சு இருந்தேன். அந்த மஞ்சள் கலர் புடவையோட அம்மாவை நல்ல வரைஞ்சிருந்தேன். டீச்சர் நல்லா இருக்கேன்னு பாராட்டுனாங்க.

சாயங்காலம் அதை அப்படியே அம்மாகிட்ட காட்ட வேகமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிகிடந்தது. அம்மா அம்மான்னு தட்டினேன். வாசலிலே தினேஷோட அப்பாவோட செருப்பு இருந்தது. கதவு இடுக்குல அம்மாவோட புடவை மாதிரி ஒரு துணி மாட்டிகிட்டு இருந்தது. அம்மா நான் கேட்ட மாதிரி ஸ்க்ரீன் தச்சு போட்டாங்க போல இருக்கு. உள்ளே டக டகா டக டகான்னு சத்தம் கேட்குது.  இது தையல் மிஷின் சத்தம் இல்லை. டி.வி.ல ஏதோ சண்டை படம் போல இருக்கு.  யாரோ ஒரு பொண்ணு வேற முனங்கிகிட்டு இருக்கா. ‘அம்மா சீக்கிரம் கதவைத் திறம்மா. நான் வரைஞ்சபடத்தை காட்டனும்.

ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகின்றேன்….

ஒரு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு இரெண்டு வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் வார்த்தைகளைத்தேட முடியவில்லை.

TRAVELLER, TOURIST இதுதான் அந்த இரெண்டு வார்த்தை.   பயணி, சுற்றுலா பயணி என்று சுலபமாகசொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அதன் முழு ஆன்மாவையும் கொடுக்கின்றதா என்பதுதான் சந்தேகம். Traveller என்பவன் தனது பயணத்தை வழக்கத்துக்கு மாறாக அமைத்து அவன் செல்லும் இடங்களின் கலாச்சார புவியியல் கூறுகளை பதிவு செய்பவன். ஹுவான் சுவான் ஒரு Traveller.  Tourist  என்பவன் தனது இன்பத்திற்காக வெறும் இன்பத்திற்காக மட்டும் சுற்றுபவன்.

இதை எப்படி தமிழில் ஒரே வார்த்தையில் சொல்லுவது ஏதேனும் வழி இருக்கா…

ரவிசங்கர் போன்றோர் தயவு செய்து உதவினால் நன்றாக இருக்கும்.

வணக்கம் நண்பர்களே..!

ரொம்ப நாளைக்கு முன்னாடி யோகாசனம் பற்றிய தொடர் ஒன்று ஆரம்பிச்சோம்.  அதை இப்போ தொடரலாம்னு முடிவு பண்ணி எழுத ஆரம்பிக்குறேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி யோகாசனம் நம்ம மனசையும் உடலையும் சுத்தமா வச்சுக்கத்தான்.  இதுல முதல் பயிற்சி நம்மளோட உடல்ல அங்கங்கே தங்கி சக்தியோட்டத்திற்கு தடையா இருக்கிற வாயுவை எடுக்கிறது.  அதைத்தான் பவன்முக்தாசனம்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இதுல பலநிலை பயிற்சிகள் இருக்குது. இதுல நாம அடையப் போகிற பயன் நம்மளோட உடலில் இருக்கிற அசைவுகளையும், அங்கே தேங்கி இருக்கிற காற்றையும் உணருவதுதான். இதோ பயிற்சி ஆரம்பம்.

1. ஆரம்ப நிலை (பிராரம்பிக் ஸ்திதி):

இதோ கீழே கொடுக்கப் பட்டுள்ளது போல் காலை நன்றாக நீட்டி சற்று சாய்ந்து, முதுகு, கழுத்து, தலை இவற்றை நேராக வைத்து நன்றாக மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள்.

fig-1.jpg

1.(அ)  பாதங்குலி நமன் :

அதே நிலையில் சற்றே தங்கள் பாதங்களின் விரல்களை கீழே கொடுத்திருப்பது போன்று நீட்டி மடக்கவும்.  விரல்கள் பின்னுக்கு வரும்போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.  முன்னால் விரல்களை நீட்டும்போது மூச்சை வெளியே விட வேண்டும்.  அப்படி செய்யும்போது கண்களை மூடியபடி மூச்சுக்காற்றைக் கவனிக்கவும். மேலும் அப்படி விரியும்போது காலில் ஏற்படும் உணர்வுகளைக் கவனிக்கவும்.  இதை 10 முறை செய்த பின் முன்னே சொன்ன ஆரம்ப நிலையில் இரெண்டு மூச்சு அமைதியாக அமர்ந்து கொள்வது நல்லது.

1. ஆ. கூல்ஃப் நமன்:

 மேற்கூறிய அதே பயிற்சியை விரல்களில் இருந்து ஏறி கனுக்காலில் செய்வதுதான். மேலே இரெண்டாவது படத்தில் கொடுத்திருப்பது போன்று செய்ய வேண்டும்.  ஆனால் நம்து கவனம் சற்றே மூச்சு, எண்ணிக்கை மற்றும் பாதம் கனுக்கால் தொடைப்பகுதி சதைகளில் ஏற்படும் மாற்றங்களில் இருக்க வேண்டும்.

fig-2.jpg

1. இ. கூல்ஃப் சக்ரா:

இப்பொழுது பாதங்களை கீழே காட்டியுள்ளது போன்று சுற்ற வேண்டும்.

fig-3.jpg

முதலில் வலது பாதத்தைச் சுற்ற வேண்டும். வலமாக 10முறையும், இடமாக 10 முறையும் சுற்றுக. இதையே இடது பக்க பாதத்திற்கும் செய்க.

இரெண்டாம் நிலையாக இரெண்டு பாதங்களையும் ஒன்றாக வைத்து சுற்றுங்கள்.

மூன்றாம் நிலையாக இரெண்டு பாதங்களையும் பிரித்து வைத்து ஒரே நேரத்தில் சுற்றுங்கள்.

ஒரு சுற்றில் பாதம் மேலே ஏறும்போது மூச்சை உள்ளே இழுங்கள். பாதம் கீழே இறங்கும்போது மூச்சை வெளியே விடுங்கள்.

இன்றைக்கு இத்தனை பயிற்சி போதும். மீண்டும் அடுத்த பதிவில்.

சமீபத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட 123 உடன்பாடு நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை வலைக்குழுவில் நடந்து வரும் இந்த வேளையில் ஏதோ அதைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை இங்கே தர நினைத்து இதோ இந்தப் பதிவை எழுதுகிறேன்.

அமெரிக்கா அவர்கள் நாட்டில் செல்லாத திட்டத்தை இதோ இங்கே “இந்தியக் குப்பையில்” கொட்ட நினைப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் எனக்கு தெரிந்தவை சில –

 1. இந்திய –  அமெரிக்க கூட்டு முயற்சியில் அணு சக்தி உற்பத்தி செய்வது குறித்தான பேச்சு காங்கிரஸ் துவங்கி வைத்தது அல்ல.  அது  1998ன் போது நாம் நடத்திய அணு ஆயுத சோதனைக்குப்பின் வந்த அமெரிக்க தடையை விலக்க ஜஸ்வந்த் சிங்-தால்பூட் நடத்திய பல ஆண்டு விவாதங்களின் விளைவாகும்.  இன்று பா. ஜ. கட்சி இதை எதிர்ப்பது எதிர்கட்சி என்ற மட்டிலுமே தவிர மொத்த உடன்பாட்டை எதிர்க்க வில்லை.

2. தோரியம் கொண்டு அணு சக்தி உற்பத்தி செய்ய யுரேனியமும் தேவை. ஆனால் இந்தியாவில் இருக்கின்ற யுரேனியம் நம்து இன்றைய தேவையை பூர்த்தி செய்யுமே ஒழிய நாளைய தேவைக்கு எப்படியும் வெளிநாட்டு உதவி தேவைப்படும். அதற்கு உலக நாடுகள்,நாம் NPT ஒப்பந்தத்தில் அணு ஆயுதம் இல்லாத நாடு என்ற அளவில் சேர மறுத்ததினால், போட்ட தடையை விலக்க வேண்டும். இன்று 123 உடன்பாட்டின் மூலம் இந்தியாவும் ‘பொறுப்புள்ள அணு ஆயுத நாடு’ என்ற அங்கீகாரம் கிடைப்பதினால் விலகும். அப்பொழுதுதான் யுரேனிய வர்த்தகத்தில் நாம் ஈடுபட முடியும்.  முப்பது வருடங்கள் நமக்குக்கிடைக்காத அங்கீகாரம் உள்நாட்டுக் கட்சிப் பூசல்களினால் செத்துப் போவது நியாயம் தானா?

3. மேலும் இந்தியாவின் மின்சார உற்பத்தி சக்தி வளர்ந்து வரும் வேளையில் நமது தேவைகளும் வலுக்கொண்டு வருகிறது.  சுயசார்பு இத்துறையில் வேண்டுமானால் நிச்சயம் நாம் அணு சக்தி உற்பத்தியை பெருக்க வேண்டும். அதற்கு யுரேனிய வர்த்தகம் தேவை. ஈரானோடு கொண்ட ஒப்பந்தம் இன்று ஈரான் அதிக காசு கேட்பதால் கிடப்பில் இருக்கிறது. மேலும் ரஷ்யாவோடும் எரிவாயு வாங்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.   இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தந்நிறைவு அடைவது மேற்கூறிய எல்லா திட்டங்களும் செயல் பட்டால் ஒழிய சும்மா நிகழாது.  இதில் அணுமின் உற்பத்திப் பெருக்கம் முக்கியமானது.

4.  அமெரிக்கா இந்தத் திட்டத்தின் மூலம் நம்மை அவர்களது கூட்டணியில் இணைக்க முயல்கிறது என்பது வெறும் கட்டுக் கதை.  அவ்வளவு எளிதாக நாம் நமது உரிமையை ஒப்படைக்க முடியாது. மேலும் 123 ஒப்பந்தம் என்பதில்,  நான் முழுவதுமாக படித்த அளவில் நமது உரிமைகளை ஒப்படைக்க எந்த குறிப்புகளும் இல்லை.  இன்று காங்கிரஸ் என்றல்ல எந்தக் கட்சியாயினும் இதில் ஈடுபட்டிருக்கும். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக இதைப் பற்றிய விவாதம் இந்த ஒப்பந்த்தை முடிப்பதில் தான் வரும். அப்படி வரவில்லை என்றால் நிச்சயம் நமது அரசியல் தலைவர்கள் நம் கண்களைக் கட்டி கிணற்றுக்கு கூட்டிச் செல்கிறார்கள் என்பது உறுதி.

5. இந்திய அணு சோதனைத் துறை விஞ்ஞானிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பயப்படுவது இதன் விளைவுகள் குறித்தே. அதுவும் இந்திய அணு சோதனைக் கூட வசதிகள் உலகத் தரம் வாய்ந்ததாக இல்லாத நிலையில் நாம் 14 சோதனைக் கூடங்களை IAEA வின் சோதனைகளுக்கு உட்படுத்தினால் எங்கே நமது அங்கீகாரம் பரிக்கப் படுமோ என்பது குறித்து தான். இதற்கான சான்றுகளும் பல விஞ்ஞானிகளின் பேட்டிகளும் இருக்கின்றது. தேவைப்பட்டால் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும்.

6. மேலும் இந்த 123 ஒப்பந்தம் நம்மோடு மட்டும்ல்ல சீனாவோடும் அமெரிக்கா போட்டுள்ளது.  என்ன சீனா NPT ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதம் கொண்ட நாடாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் அதற்கேற்ற சலுகைகள் அதில் அடங்கும்.  நமக்கு அந்த அங்கீகாரம் இப்பொழுதுதான் கிடைக்கப் போகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம்.  மேலும் இது கிடைத்தால் தான் ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக முடியும் என்பது வேறுபக்கத்தின் உண்மை.  இது கிஸ்ஸிங்கர் நேற்று மிரட்டினார் என்பது சென்ற ஓராண்டு பத்திரிக்கைகள் தரும் செய்திகளை மட்டும் நம்பி கொடுக்கும் பொய் பிரச்சாரம் ஆகும்.  இந்திய வெளியுறவு வரலாற்றை முழுவதுமாகப் படிக்காத சிலரின் வாதங்களின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்பது தான் என் வாதம்.

கட்டாயம் நம் உரிமை பரிபோகுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.  அந்த பயத்தைப் போக்க வேண்டியதுதான் காங்கிரஸ் அரசு செய்ய வேண்டிய காரியம்.  இதற்கு மாற்றுக் கருத்து நிலவிடினும் வாதத்தில் பங்குகொள்ள நான் தயார்.  நீங்கள் தயாரா?

வணக்கம்… வணக்கம்….

வணக்கம் நண்பர்களே!

நல்லா இருக்கீங்களா?

அலுவல்கள் காரணமாக ரொம்ப நாள் லீவு போட வேண்டியதா போயிடுச்சு… இனி மார்ச் வரைக்கும் உங்கள் அனைவரோடும் இணைஞ்சு இருப்பேன். ஓ.கே.யா?  நீங்கள் எல்லாரும் நலமா இருப்பீங்கன்னு நம்புறேன்.

இனி இந்த இடைவெளியில மனசுல தோன்றுன விஷயங்களப் பதியலாம் பகிரலாம் ரைட்டா?