Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘தற்கொலை’

மைனி நல்லா இருக்கீகளா?  பார்த்து எம்புட்டு நாளாச்சு பிள்ளைள் எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கோ..  என்னத்த சொல்ல வாக்கப்பட்டு போன இடத்துல கண்ணைக் கசக்கிகிட்டு வரக்கூடாதுன்னு எவ்வளவு தான் பார்த்து பார்த்து கண்ணாலம் முடிச்சாலும்.. வெங்காயம் நறுக்கும் போதாவது கண்ணு கலங்கத்தேன் செய்யுது.. என் வூட்ல அவுக பாடத்தான் சொல்லுதேன்.. தவசுப்புள்ளைய கண்ணாலம் பண்ணா கண்ணு கலங்காம இருக்க முடியுமா..? வருஷம் பத்தாவது அவுகளும் இன்னும் வீடு வீடா போயி சமச்சு கொட்டிகிட்டுதேன இருக்காக. இப்பொகூட முக்குவீட்டு சரசு இல்லை அவுக ரெண்டாவது மகனுக்கு நிச்சியதார்த்தமா அதுக்குதேன் வந்தோம்.  வீட்டுக்கு அஞ்சு புள்ளைக இருந்தா எங்க பொழப்பு ஏதோ ஓடிகிட்டு கிடக்குது.. அவ மவ சடங்கானதுல ஆரம்பிச்சுது, பொறகு மூத்தவன் கிட்டினன் கண்ணாலம், அவ மவ கண்ணாலம், அப்புறம் அவுக தல பேத்தி காது குத்து, மொட்ட போடறதுன்னு வருசத்துக்கு ஒரு விசேஷமாவது வந்துடுதுல்ல..

 

அது சரி உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா அவ மூத்த மருமவ முத்தம்மா இல்ல போன தடவ பிள்ளை காது குத்துக்காக வந்திருதாவல்ல அப்பதேன் மருந்த குடிச்சுப்புட்டாளாம்… யாருக்கும் இத சொல்லவே இல்ல மைனி சொன்னா மானம் போகிடுமில்ல.. மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம்.  நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இப்படின்னு சொன்னாக..வூட்ல அத்தனை பேரு இருந்தும் எல்லாரும் துணியெடுக்க கடைக்கு போயிருந்த நேரம் பார்த்து இப்படி பண்ணிபுடுச்சாம்.  அவ மாமனாரு உடம்பு சரியில்லன்னு வூட்லயே இருந்திருக்காரு.. தண்ணி குடிக்க அடுப்படிக்கு போனா மயங்கி கிடந்திருக்கா… உடனே ஃபோனப் போட்டு அம்புட்டு பேரையும் வரவச்சு காப்பாத்திட்டாக..

ம்ம்..  என்னத்தன்னு சொல்ல.. செவத்த பொண்ணா வேணும்னு நகை நட்டு இல்லாட்டிலும் பரவாயில்லன்னு தேடித் தேடி முடிச்சாக.  சும்மா சொல்லக்கூடாது மருமவன்னா அப்படி வேணும்னு தான் ரெண்டாவது மயனுக்கும் தேடு தேடுன்னு தேடுனாவ.. முகஞ்சுளிக்காம வேல பாப்பாத்தா.. என்னதேன் முகஞ்சுளிக்கலனாலும் இப்படியா வசக்கி எடுப்பாவ.. அதுலயும் அவ மவா இருக்கா பாரு ராட்ச்சசி.. அங்க ராஜ்ஜியமே பிள்ளைகளுதுதான… ஒரு வார்த்த யாராவது சொல்லிட்டா வீலு வீலுன்னு வருவா பாக்கணும்.. அப்பாவும் அம்மாவும் அதுகளுக்கு பயந்துதேன் கெடப்பாக.  இப்படித்தான் சரசு நாத்தானா இருக்கால்ல சுப்பு அவ மவகிட்ட அண்ணாச்சி அதான் கிட்டினன் அப்பா தப்பா நடந்துக்க  முயற்சி செஞ்சு இருக்காரு.  வெளில தெரிஞ்சா நம்ம அண்ணன் மானமில்ல போகும்னு நல்ல விதமா பிள்ளைள் கிட்ட சொல்லி புத்தி சொல்லச் சொல்லலாம்னு வந்திருக்கா அப்பவும் அவ மகா தான் யாரப்பாத்து என்ன் பேச்சு பேசுதன்னு ஒரே கூப்பாடு போட்டு விரட்டி அடிச்சிருக்கா அதுக்கப்புறம் அப்பனை என்னச்சத்தம் போட்டுதுகளோ தெரியல இப்போ ஒழுங்கா இருக்காராம். இத்தனை வயசுக்கு மேலயும் அவருக்கு அப்படி ஒரு புத்தி…

 

முத்தம்மா ஆத்தாதான் கூப்பாடு போட்டு அழுகுதா.. பெரிய குடும்பமா இருந்தாலும் இவுக கிட்டயா மாரடிக்கப்  போறா… மாப்புள்ளைக்கு சேலத்துல மில்லுல வேலையாச்சேன்னு கட்டிக்கொடுத்தேன் ஆனா இங்க வரும்போதெல்லாம் அம்மா வீட்டுக்குகூட அனுப்பாம வசக்கி எடுக்காகன்னு அழுகுதா… நகை பணம்னு எதிர்பார்க்காம இருந்தாவளேன்னு கட்டிக்கொடுத்தேன்.. இப்போ கொளுந்தமாருக எங்க தங்கச்சிக்கு அப்படி செஞ்சோம் இப்படி செஞ்சோம்னு குத்திக் குத்தி பேசுறானுகளாம்.. அப்படி ஏதோ சொல்லிப்புட்டாகன்னுதான் சாகப்பாத்திருக்கான்னு ஒரே அழுக.. அப்படியும் கண்ணாலத்தப்போ இல்லாத பேச்சு இப்பவா மூணு வருசம் கழிச்சு புள்ளப் பெத்தப் பொறகா வரும்… எனக்கு ஒன்னும் புரியல.. அவளும் என்னத்தன்னு செய்வா என்னதான் இவளை நல்லா பாத்துகிட்டாலும் தம்பி தங்கச்சிய பகைக்கக் கூடாதுன்னு இவா அவுகளப்பத்தி என்னத்த சொன்னாலும் ஒன்னும் கண்டுக்கிட மாட்டானாம். இப்படியா பொண்டாட்டி கொறைய கேக்காத ஆம்பளையா வந்து வாய்ப்பான்.  ஆனாலும் கைப்புள்ளைய வுட்டுட்டுப் போவணும்னு நினைக்குற அளவுக்கு அவளுக்கு சோதன வந்திருக்கு பாரு..

இப்பொ என்ன நடந்துச்சோ என்னவோன்னு தெரியல இப்பல்லாம் அவ கூடவேதான் அலையுதானாம்.  போன ஒரு வருஷமா தான் அப்பா அம்மா வூட்டுக்குக்கூட தனியா விடறது இல்லயாம் வந்தா கையோடவே கூட்டிகிட்டு போறானாம்.  எப்படியோத்தா நல்லா இருந்தாகன்னா சரி.  என்னதேன் காலம் மாறினாலும் பொம்பளப்பிள்ளைகளுக்கு வர சோதன மட்டும் மாறவா போகுது… இதுகளா சோதனயதாண்ட பழக்கப் படுத்திகிட்டாத்தான் உண்டு.  சரித்தா நேரமாவுது விசேஷ வூட்ல எல்லாருக்கும் காபி கலக்கணும் தேடுவாக.  அண்ணன் வந்தா கேட்டேன்னு சொல்லு.

Advertisements

Read Full Post »