Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிறுகதை’ Category

 

நான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும்.  அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க.  அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என்னையே பார்த்து கிட்டிருந்தான்.  எனக்கு பத்து வயசு அவனுக்கு ஒரு இருபத்தி அஞ்சு இருக்கும்.  எங்கிருந்தோ வண்டியில வந்து இறங்கினான். அவனுடைய அப்பா அழுது கிட்டே வெளியில வந்து இவனை கட்டிகிட்டார். அவனுடைய வீடு தான் எல்லாமே தல கீழா இருந்தது. யாரோ பொம்மை வீட்டை ஆட்டினா மாதிரி ஆட்டிருப்பாங்கன்னு நினைக்குறேன்.  அவனோட அம்மாவும் தங்கச்சியும் அந்த உடைஞ்ச வீட்டுக்குள்ளதான் தூங்கிகிட்டிருந்தாங்க போல இருக்கு. சின்ன பசங்க யூனிஃபார்ம் போட்டுதான் பார்த்து இருக்கேன். இன்னிக்கு இவன் வீட்டுக்கு பெரிய ஆளுங்க எல்லாம் யூனிஃபார்ம் போட்டு கிட்டு வந்தாங்க.  சில பேரு காக்கில போட்டிருந்தாங்க சில பேரு வெள்ளைல போட்டிருந்தாங்க.  வெள்ளை யூனிஃபார்ம் போட்டிருந்தவங்க தான் அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் ஒரு கட்டில் இல்ல அவரு ஏதோ சொன்னாரே ஆம்…. ஸ்டெச்ர் அதுல வச்சு… ஐ அதுல அப்படி யாராவுது வச்சு தூக்கினா எப்படி இருக்கும்.  ஆனா அவன் மட்டும் ஏன் என்னை அப்படியே மொறைச்சி பார்க்குறான்.  அவன் அழுகல.. நல்ல பையன். கலர் கலரா காரு வந்த்து.. வெள்ளை… நீலம்..

நேத்திக்கு வெள்ளை வேனுல அவனோட அம்மா தங்கச்சிய கூட்டிட்டு போனாங்க இல்லை இன்னிக்கு கருப்பு வேன்ல கூட்டிட்டு வந்தாங்க. எல்லாரும் கூட்டம் கூட்டமா நின்னாங்க.  ஒரே அழுகுற சத்தம்.  சின்ன பசங்க நாம அழுதா எப்படி திட்டுறாங்க. இப்போ இவங்களே அழுகுறாங்க.  ஷேம் ஷேம்.  புதுசா பெரிய மாலையெல்லாம் இருந்தது.. வாசனை கும்முனு இருந்தது. அங்கே பத்தி பொறுத்தி வச்சிருந்தாங்க.  ஒரு நாளைக்கு ஒரு பத்தினு நானெல்லாம் பொறுத்தி இருக்கேன். இவங்க மொத்த பாக்கட்டையும் பொறுத்தினாங்க.  பொகை கும்முனு சினிமால வரா மாதிரி வந்தது. இந்த வாசனையும் நல்லா தான் இருக்குது. சந்தன வாசனை.. அப்புறம் எல்லாம் கலைஞ்சு போய்ட்டாங்க. இன்னிக்கு அவனோட வீட்டுல நல்ல சாப்பாடு போட்டாங்க. அவன் மட்டும் நைட்ல என்னை கூப்பிட்டான். நான் அவன் பக்கம் போனேன். என் கிட்ட எதுவுமே பேசல. கொஞ்ச நேரம் கழிச்சு என்னை அவன்கூடவே இருக்க சொல்லி கூப்பிட்டான்.  எனக்கு வேற வேலை எதுவுமே இல்லை. நானும் சரின்னு ஒத்துகிட்டேன்.

இது தான் பெங்களூரா.. நல்லா இருக்கு.  அவனோட வீட்ல யாருமே இல்லை. நான் மட்டும் தான் அவன் கூட. என்னை எங்கையுமே தனியாவே அனுப்ப மாட்டான்.அவன் கூடவே வச்சு இருப்பான். ஆனா நான் அவன் கூட இருக்கிறது யாருக்குமே தெரியாது. அவனுக்கு என்னை விளையாட வச்சு பார்க்குறதுன்னா அப்படி பிடிக்கும். எப்பையுமே அவனோட லேப்டாப் இல்லைனா கம்ப்யூட்டர்ல வச்சு விளையாட சொல்லுவான். அவன் வேலைக்கு போனா கூட என்னை ஒளிச்சு ஒளிச்சு கூட்டிட்டு பொயிடுவான்.  அவனோட ரூம் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது. அவனோட டேபுள், ஆஃபீஸ் வரன்டா, சோஃபா எல்லாத்து மேலையும் குதிச்சு குதிச்சு விளையாடுவேன் ஆனா யாரும் இல்லாதப்போ தான். யாராவுது பார்த்திட்டா திட்டுவாங்க இல்லை. தினம் ராத்திரி மட்டும் என்னோட மடியில படுத்து தூங்கனும்னு அடம் பிடிப்பான். 25 யிர்ஸ் பாய் ஒரு டென் யிர்ஸ் பாயோட மடியில படுக்கனுமா. நானும் சரின்னு சொல்லுவேன். சில நேரம் என்னை இருக்கி கட்டி பிடிச்சிகிட்டு தூங்குவான்.  அவனுக்கு ஃப்ரென்ட்ஸ் ரொம்ப கம்மி. என் கிட்ட மனசு விட்டு பேசுவான்.  நிறைய ஐஸ் க்ரீம் வாங்கித்தருவான். நான் தான் அவனோட க்லோஸ் ஃப்ரென்டுன்னு சொல்லுவான். அது தான் அவ்வளவு ஐஸ்க்ரீம் வாங்கி தந்தான்.

 

ஒரு நாள் ஒரு பார்க்குக்கு கூட்டிட்டு போனான். ஐ இங்க எவ்வளவு க்ரீன் கலர் செடிங்க. கலர் கலர் பூ கூட. நான் அந்த பார்க்ல சருக்கு மரம் இருந்தது ஏறி ஏறி விளையாடினேன். அவன் இவ்வளவு நாள் என் கூட தான இருந்தான் ஆனா எப்பவுமே அந்த ஃப்ரென்டை பத்தி சொல்லவே இல்லை. அவ தான் சந்தியா. நான் அவளை அவனோட ஆஃபீஸ்ல வச்சு பார்த்திருக்கேன். ஆனா அவளும் இவனோட ஃப்ரென்டுனு சொன்னதே இல்லை. பார்க்குக்கு அவளையும் வர சொல்லி இருக்கான். எனக்கு ஒரே தூக்கமா வருது. ஆனா பார்க்ல நிறைய விளையாட இருக்கு. அவ வந்ததும் என்னை மறை முகமா போக சொல்லி சொன்னான். நான் தூங்கிட்டேன். இது கனவான்னே தெரியல.. பார்க்குல நிறைய மரம் இருந்தது.  இந்த மரம் மட்டும் வித்தியாசமா இருந்தது. ஒரு தேன் கூடு அதுல தேனி இல்லை. நேரா போய் வாயை வச்சு தேன் குடிக்கலாம். குடிக்க குடிக்க தேன் வந்துகிட்டே இருந்தது. தேன் கூட்டுக்கு கீழையே ரெண்டு மாம்பழம் இருந்தது. ரெண்டையுமே சேர்த்து சேர்த்து சாப்பிட சுகமா இருந்தது. கொஞ்ச நேரத்துல எல்லாம் சோனு மழை. நான் ஃபுல்லா நனஞ்சுட்டேன்.  இந்த காட்டுல என்னை விட்டுட்டு தனியா பொய்ட்டான். எனக்கு பயமா இல்லை. மழை வந்ததும் சோர்வா இருந்தது தூங்கிட்டேன். காலைல இருந்து விளையாடினேன் இல்ல. நான் ஆனா ரொம்ப நாளா தூங்கிட்டேன். அவனும் என்னை எழுப்பவே இல்லை.  இப்போல்லாம் வேலைக்கு போகும்போதுகூட என்னைக் கூட்டிட்டு போக மாட்டேங்குறான். பிலடி ஃபூல். அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடச்சுட்டாங்க போல இருக்கு. எனக்கு கோபம் இல்லை. நான் வீட்டுலையே தூங்கிடறேன். இப்போல்லாம் எப்போவாவதுதான் அவன் என்னைக் கட்டிப் புடிச்சு தூங்குறான்.

ஆனா அன்னிக்கு சந்தியா வந்தா.. அவசர அவசரமா இவன் வெளிய போனான். நான் இங்க இருக்கிறது அவளுக்கு தெரியாது இல்லை.  அவ அவனை கட்டிப் புடிச்சு ஓன்னு அழுதா. ரெண்டு பேரும் என்னமோ பெசினாங்க. அப்புறம் இவன் என்னையும் கூட்டிகிட்டு ஊருக்கு போனான். உடைஞ்சு இருந்த வீடு திரும்பி சரியா பொயிடுச்சு போல இருக்கு. அவனோட அப்பா அவனை சத்தம் போட்டாரு. திட்டினாரு. கூடவே சந்தியாவும் வந்து இருக்கா போல இருக்கு. ஆனா போகும்போது என்னை இங்கயே விட்டுட்டு பொயிட்டான். அவனுக்கு என் ஞாபகமே இல்லை. ரெண்டு மாசம் கழிச்சுதான் வந்தான். நான் வழக்கம் போல விளையாடிகிட்டு இருந்தேன். ரோஜாப்பூ மாலை வாசனை. சந்தனம் பத்தி கும்முன்னு இருந்தது. வந்தான். நிறைய பேரு அழுது கிட்டு இருந்தாங்க. இவன் என்னை பார்க்கல.. ஆனா அழுகல.. ம்ம்ன்னு இருந்தான். சத்தம் போட்டா அவுங்க அப்பா தூங்கிகிட்டு இருந்தவரு எழுந்திடுவாறில்ல.  ஆனா அது மத்தவங்களுக்கு தெரியல. நைட்டு எல்லாரும் தூங்கின போது வந்தான். நான் விளையாடிகிட்டு இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு என் மடியில தூங்கனும்னு ஆசை பட்டான். கட்டி புடிச்சு கிட்டான். மடியில படுத்தான். என்னென்னவோ பேசினான். எனக்கு புரியல மடியில போட்டுகிட்ட நான் தட்டி கொடுத்தேன். அவன் பேசுறது நிற்கல. சந்தியா திடீர்னு வந்துட்டா. எங்களை பார்த்ததும் பயந்துட்டா…

 

“டோன்ட் வொரி வென் த சப் கான்ஷியஸ் ஃபெயில் டு மூவ் அலொங்க்

வித் டைம் சச் அப்நார்மாலிட்டீஸ் அக்கர். ஸ்லைட்லி ஸ்கீஸோஃப்ரீனிக். இது எல்லாருக்குமே இருக்கிற வியாதிதான். சிலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். அவ்வளவுதான்.  தான் அதிகமா அனுபவிச்ச அந்த பத்து வயச இப்போ இருக்கக் கூடிய பிசில ரொம்ப மிஸ் பண்றார் உங்க ஹஸ்பன்டு. மேலும் லாஸ் ஆஃப் ஃபேமிலி மெம்பர்ஸ். உங்களோட சப்போர்ட் தான் அவருக்கு ரொம்ப தேவை. இந்த டேப்லட்ஸ் எடுத்துக்க சொல்லுங்க.  அவரை தனியா விட்டா தான் இந்த ஸ்டேட் ஆஃப் மைன்டுக்கு போயிடுவாரு. பத்திரமா பார்த்துக்குங்க”

 

Read Full Post »

அந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். இந்தத் தொலைபேசி எண் அவளுக்கு எப்படி கிடைத்தது?

கல்லூரியின் கடைசி ஆண்டின் கடைசி நாள். நீங்க எல்லாரும் என்ன செஞ்சீங்கன்னு கேட்டா எல்லார் மனசுமே பாரமாத்தான் இருக்கும். இன்றைக்கு அது ரொம்பவே பாரமா இருக்கு.

காலேஜ் படிக்கிற வரைக்கும் எந்த அவளுக்கும் இடம் கொடுக்காமல் லைஃப ரொம்பவே ஜாலியா அது வர போக்குல எடுத்துகிட்டு எவ்வளவு நல்ல பையனா இருந்தேன். அதனால தானே ஃபர்ஸ்ட் இயர் படிச்சிகிட்டு இருந்த அவ வந்து என்னோட கடைசி நாள் அன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணப்ப – ” உனக்கு இப்போ என்ன வயசு.. ஒரு 18 இருக்குமா மனித உடல் காந்தமா செயல் படுற வயசு.. உன்னோட உலகம்…மிஞ்சிப்போனா இந்த காலேஜ், உன் ஃப்ரெண்ட்ஸ், நாலஞ்சு பழைய புக்ஸ் அவ்வளவு தானே.. இன்னும் உலக்த்துல நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. நீ ஒன்னு பண்ணு காலேஜ் முடி அப்புறம் ஒரு வருஷம் எங்கையாவது வேலை பண்ணு. அதுக்கு அப்புறமும் என் மேல லவ்வு இருந்தா சொல்லு நான் ஏத்துக்குறேன்” என்று வெறித்தனமா அட்வைஸ் கொடுத்திட்டு வந்தேன்.

அப்படி இருந்த நான் போன வருஷம் அவ ஃபோன் பண்ணி “வணக்கம் சீனியரே… அஞ்சு வருஷம் எனக்கு பஞ்சா பறந்திடுச்சு. ஆனா இன்னும் என் மனசுல பத்திகிட்ட நெருப்பு அனையல… நான் இன்னும் உங்களை மறக்கல….நீங்க எப்படி? இப்பவாவது நினைப்பீங்களா… இல்லை திரும்பியும் நீ பார்க்கவேண்டிய உலகம் நிறையா இருக்குன்னு கதை சொல்லுவீங்களா? சீனியர்… உலகம் எவ்வளவு பெரிசா வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனா என் உலகம் முழுவதும் நீங்க மட்டும் தான் நிறைஞ்சு இருக்கீங்க.” என்று எதிர் பாராத நேரத்தில் சொல்லும்போது எனக்கென்று ஒரு அவள் கிடைத்து விட்டாள் என்று நினைச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டோம். என் மேல அவ வச்சிருந்த தீராத காதலை யார் மறுக்க முடியும். அந்த காதல் எனக்கு தெரியாமலேயே நான் எங்கையோ போய் செட்டில் ஆயிருக்கக் கூடாதா…

இப்போ அதே காதலைக் காரணம் காட்டியே “உன் மேல இருக்கிற அளவுக்கு என் வீட்டுக்காரங்களையும் நேசிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடு”ன்னு ஃபோன்லையே கேட்டா. சரி அதைத்தான் ஒத்துகிட்டேன். திரும்பி போன் வாரம்  ஃபோன் பண்ணி “என்னை மறந்திடு”னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு வச்சா இந்தக் காதல் அவ்வளவு சுலபமான விஷ்யமா ஆயிடுச்சா என்ன? ஒரு வருஷம் கொஞ்சம் பயமா இருந்தாலும் அங்க இங்கன்னு சுத்தினோம். ஆனா அதிக நேரம் அளவளாவினது, சண்டை போட்டது எல்லாமே இந்த ஃபோன்ல தான். அவ நினைச்ச நேரத்துக்கு ஃபோன் எடுக்கலைன்னா அதுக்குன்னு ஸ்பெஷல் சண்டை. ஒவ்வொரு சண்டையிலும் தான் எங்கள் உறவு ரொம்பவே பலுப்பட்டது. இப்போ மறந்திடுன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டாளே. மறந்தே தீர்க்க வேண்டிய கட்டாயத்துல கொண்டு வந்து விட்டு விட்டாளே.

ஒரு வாரமா அவகிட்ட இருந்து தகவல் இல்லையேன்னு அவளோட காதலை எவ்வளவு கரிச்சு கொட்டினேன்.  அவ மறந்திடுன்னு சொன்னா அதுதான் கடைசி வார்த்தையா.

ஆனா இவளுக்கு எப்படி என் நம்பர் தெரியும். அவள் கூட வேலை பார்க்கிறவள். ஆம் அவள் தான் இன்று காலை ஃபோன் பண்ணி அந்தச் செய்தியைச் சொன்னாள். ஏதோ…  உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பித்திரியில அட்மிட் ஆயிருந்த அம்மாவை பார்க்கப் போய்கிட்டு இருந்த அவளுக்கு போன வாரம் ஆக்ஸிடெண்டாம். ஸ்பாட்லையே….. .

இந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை……………:(

Read Full Post »

மைனி நல்லா இருக்கீகளா?  பார்த்து எம்புட்டு நாளாச்சு பிள்ளைள் எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கோ..  என்னத்த சொல்ல வாக்கப்பட்டு போன இடத்துல கண்ணைக் கசக்கிகிட்டு வரக்கூடாதுன்னு எவ்வளவு தான் பார்த்து பார்த்து கண்ணாலம் முடிச்சாலும்.. வெங்காயம் நறுக்கும் போதாவது கண்ணு கலங்கத்தேன் செய்யுது.. என் வூட்ல அவுக பாடத்தான் சொல்லுதேன்.. தவசுப்புள்ளைய கண்ணாலம் பண்ணா கண்ணு கலங்காம இருக்க முடியுமா..? வருஷம் பத்தாவது அவுகளும் இன்னும் வீடு வீடா போயி சமச்சு கொட்டிகிட்டுதேன இருக்காக. இப்பொகூட முக்குவீட்டு சரசு இல்லை அவுக ரெண்டாவது மகனுக்கு நிச்சியதார்த்தமா அதுக்குதேன் வந்தோம்.  வீட்டுக்கு அஞ்சு புள்ளைக இருந்தா எங்க பொழப்பு ஏதோ ஓடிகிட்டு கிடக்குது.. அவ மவ சடங்கானதுல ஆரம்பிச்சுது, பொறகு மூத்தவன் கிட்டினன் கண்ணாலம், அவ மவ கண்ணாலம், அப்புறம் அவுக தல பேத்தி காது குத்து, மொட்ட போடறதுன்னு வருசத்துக்கு ஒரு விசேஷமாவது வந்துடுதுல்ல..

 

அது சரி உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா அவ மூத்த மருமவ முத்தம்மா இல்ல போன தடவ பிள்ளை காது குத்துக்காக வந்திருதாவல்ல அப்பதேன் மருந்த குடிச்சுப்புட்டாளாம்… யாருக்கும் இத சொல்லவே இல்ல மைனி சொன்னா மானம் போகிடுமில்ல.. மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம்.  நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இப்படின்னு சொன்னாக..வூட்ல அத்தனை பேரு இருந்தும் எல்லாரும் துணியெடுக்க கடைக்கு போயிருந்த நேரம் பார்த்து இப்படி பண்ணிபுடுச்சாம்.  அவ மாமனாரு உடம்பு சரியில்லன்னு வூட்லயே இருந்திருக்காரு.. தண்ணி குடிக்க அடுப்படிக்கு போனா மயங்கி கிடந்திருக்கா… உடனே ஃபோனப் போட்டு அம்புட்டு பேரையும் வரவச்சு காப்பாத்திட்டாக..

ம்ம்..  என்னத்தன்னு சொல்ல.. செவத்த பொண்ணா வேணும்னு நகை நட்டு இல்லாட்டிலும் பரவாயில்லன்னு தேடித் தேடி முடிச்சாக.  சும்மா சொல்லக்கூடாது மருமவன்னா அப்படி வேணும்னு தான் ரெண்டாவது மயனுக்கும் தேடு தேடுன்னு தேடுனாவ.. முகஞ்சுளிக்காம வேல பாப்பாத்தா.. என்னதேன் முகஞ்சுளிக்கலனாலும் இப்படியா வசக்கி எடுப்பாவ.. அதுலயும் அவ மவா இருக்கா பாரு ராட்ச்சசி.. அங்க ராஜ்ஜியமே பிள்ளைகளுதுதான… ஒரு வார்த்த யாராவது சொல்லிட்டா வீலு வீலுன்னு வருவா பாக்கணும்.. அப்பாவும் அம்மாவும் அதுகளுக்கு பயந்துதேன் கெடப்பாக.  இப்படித்தான் சரசு நாத்தானா இருக்கால்ல சுப்பு அவ மவகிட்ட அண்ணாச்சி அதான் கிட்டினன் அப்பா தப்பா நடந்துக்க  முயற்சி செஞ்சு இருக்காரு.  வெளில தெரிஞ்சா நம்ம அண்ணன் மானமில்ல போகும்னு நல்ல விதமா பிள்ளைள் கிட்ட சொல்லி புத்தி சொல்லச் சொல்லலாம்னு வந்திருக்கா அப்பவும் அவ மகா தான் யாரப்பாத்து என்ன் பேச்சு பேசுதன்னு ஒரே கூப்பாடு போட்டு விரட்டி அடிச்சிருக்கா அதுக்கப்புறம் அப்பனை என்னச்சத்தம் போட்டுதுகளோ தெரியல இப்போ ஒழுங்கா இருக்காராம். இத்தனை வயசுக்கு மேலயும் அவருக்கு அப்படி ஒரு புத்தி…

 

முத்தம்மா ஆத்தாதான் கூப்பாடு போட்டு அழுகுதா.. பெரிய குடும்பமா இருந்தாலும் இவுக கிட்டயா மாரடிக்கப்  போறா… மாப்புள்ளைக்கு சேலத்துல மில்லுல வேலையாச்சேன்னு கட்டிக்கொடுத்தேன் ஆனா இங்க வரும்போதெல்லாம் அம்மா வீட்டுக்குகூட அனுப்பாம வசக்கி எடுக்காகன்னு அழுகுதா… நகை பணம்னு எதிர்பார்க்காம இருந்தாவளேன்னு கட்டிக்கொடுத்தேன்.. இப்போ கொளுந்தமாருக எங்க தங்கச்சிக்கு அப்படி செஞ்சோம் இப்படி செஞ்சோம்னு குத்திக் குத்தி பேசுறானுகளாம்.. அப்படி ஏதோ சொல்லிப்புட்டாகன்னுதான் சாகப்பாத்திருக்கான்னு ஒரே அழுக.. அப்படியும் கண்ணாலத்தப்போ இல்லாத பேச்சு இப்பவா மூணு வருசம் கழிச்சு புள்ளப் பெத்தப் பொறகா வரும்… எனக்கு ஒன்னும் புரியல.. அவளும் என்னத்தன்னு செய்வா என்னதான் இவளை நல்லா பாத்துகிட்டாலும் தம்பி தங்கச்சிய பகைக்கக் கூடாதுன்னு இவா அவுகளப்பத்தி என்னத்த சொன்னாலும் ஒன்னும் கண்டுக்கிட மாட்டானாம். இப்படியா பொண்டாட்டி கொறைய கேக்காத ஆம்பளையா வந்து வாய்ப்பான்.  ஆனாலும் கைப்புள்ளைய வுட்டுட்டுப் போவணும்னு நினைக்குற அளவுக்கு அவளுக்கு சோதன வந்திருக்கு பாரு..

இப்பொ என்ன நடந்துச்சோ என்னவோன்னு தெரியல இப்பல்லாம் அவ கூடவேதான் அலையுதானாம்.  போன ஒரு வருஷமா தான் அப்பா அம்மா வூட்டுக்குக்கூட தனியா விடறது இல்லயாம் வந்தா கையோடவே கூட்டிகிட்டு போறானாம்.  எப்படியோத்தா நல்லா இருந்தாகன்னா சரி.  என்னதேன் காலம் மாறினாலும் பொம்பளப்பிள்ளைகளுக்கு வர சோதன மட்டும் மாறவா போகுது… இதுகளா சோதனயதாண்ட பழக்கப் படுத்திகிட்டாத்தான் உண்டு.  சரித்தா நேரமாவுது விசேஷ வூட்ல எல்லாருக்கும் காபி கலக்கணும் தேடுவாக.  அண்ணன் வந்தா கேட்டேன்னு சொல்லு.

Read Full Post »

அம்மாவோட மஞ்சள் புடவை

இன்றைக்கு என் பிறந்த நாள். கண்டிப்பா அம்மா அந்த மஞ்சள் புடவையைத்தான் கட்டுவாங்க. அந்த புடவைதான் எவ்வளவு அழகு. அம்மாவுக்கும் அதைக் கட்டுறதுன்னா ரொம்ப பிடிக்கும். மஞ்சள் கலருல அங்கங்கே சின்னசின்னதா ரோஜாப்பூ போட்டு…. மனசெல்லாம் புதுசா மாறிடும். அதுல இருந்து எனக்கு மஞ்சள்னா ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வெள்ளிக்கிழமைகள்ல காலைல மஞ்சள் தேச்சி குளிச்சிட்டு அந்தப் புடவையை அம்மா கட்டிகிட்டு வந்து சோறு ஊட்டுவாங்களே. அதை சாப்பிட்டுட்டு அப்படியே அவங்க மடியில அந்த மஞ்சள் கலருக்கு நடுவுல தூங்கி எழுந்தா எப்படி இருக்கும். நேற்று தினேஷ் வீட்டுல விளையாடப் போகும்போது கூட அவங்க வீட்டுல இருக்கிற ஸ்க்ரீன் மாதிரி நம்ம வீட்டிலையும் போடனும்னு எவ்வளவு அடம் பண்ணோம். அப்போகூட அந்த மஞ்சள் புடவைமாதிரிதான துணி வாங்கனும்னு ஆசைப் பட்டோம்.

ரெண்டு வருஷம் முன்னாடி அப்பா ஏதோ ஒரு பண்டிகைக்கு வாங்கிட்டு வந்தாங்க. அதுல இருந்து அம்மாவுக்கு அந்தப் புடவைன்னா ரொம்ப பிரியம். அதுக்கு அப்புறம் அப்பா அம்மாவுக்கு புடவை வாங்கி வரவே இல்லை. ஏன் எனக்கு விவரம் தெரிஞ்சு அப்பா வீட்டுக்கு வரவே இல்லை. அப்பா ரொம்ப நாள் வரலைன்னு சொன்னதும் அம்மா தாத்தாவீட்டுக்குப் போனாங்க. அப்போ அவங்க வீட்டு வாசல்ல மஞ்சள் பழமா வந்து இறங்கிச்சு.  நிறைய பசங்க அவங்க வீட்டு வாசல்ல விளையாடிகிட்டு இருந்தாங்க.  என்னையும் விளையாட்டுல சேத்துப்பீங்களான்னு கேட்டேன்.  அப்போதான் அப்பா வந்து சேர்ந்தாரு.  புது சொக்காவெல்லாம் போட்டு இருந்தாரு.  எல்லாரும் பக்கத்துல இருக்கிற மாதா கோயிலுக்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க.  அம்மா உடனே அப்பா கிட்ட ஏதோ சொல்லி அழுதாங்க.  தாத்தா என் பிள்ளைய குறைசொல்றியா நீயின்னு அம்மாவை போட்டு ரோட்டுல நிற்கவச்சு அடிச்சிட்டாரு. அப்புறம் அம்மா எனக்கு தாத்தா பாட்டின்னு சொந்தம் யாருமே இல்லைன்னு நினைச்சிக்க சொன்னாங்க. அன்றைக்கே அம்மா தினேஷோட வீட்டுக்கு அழுதுகிட்டே போனாங்க. அங்க தினேஷோட அம்மாதான் ஆறுதல் சொன்னாங்க. அப்போ தினேஷ் வீட்டுலயே படுக்க வச்சுகிட்டாங்க. அந்த தலகாணி உரைகூட மஞ்சள் கலருல அம்மாவோட புடவை மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் தினேஷோட அப்பா தையல் மிஷின் வாங்கி வந்து கொடுத்தாரு. அதுல அம்மா தைக்கும்போது டக டகா டக டகான்னு ரயில்ல போற மாதிரி சப்தம் கேட்கும்.

நான் ரயில்ல ஒரே ஒரு தடவை போயிருக்கேன். அப்பா எங்களை ஊருக்கு கூட்டிகிட்டு போனாரு. அங்கதான் எங்க தாத்தா வீடு. அப்போ அங்க நானு சுரேஷ் அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ரயில் மாதிரி சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு விளையாடிகிட்டு இருந்தோம். அப்பல்லாம் சுரேஷ் வீட்டுலதான் தங்கினோம். அவங்க அம்மாவை நான் பெரியம்மான்னு கூப்பிடனும்னு சொன்னாங்க. எங்க பெரியம்மா அம்மா அப்பா சுரேஷ் நாங்க எல்லாரும் எங்க தாத்தாவீட்டுக்குப் போனோம். அங்க யாருமே உட்கார்ந்து பேசலை. நின்றுகிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு நடுவுல நாங்க எங்க ரயில விட்டு விளையாடிகிட்டு இருந்தோம். சந்து பொந்துல எல்லாம் ரயிலை விடறது எவ்வளவு நல்லா இருந்தது. திடீர்னு எங்க தாத்தானு சொன்னவரு சுரேஷை பிடிச்சு அடிச்சிட்டாரு. அப்போ நாங்க ஊருக்கு வரவரைக்கும் சுரேஷ் என்கூட விளையாட வரலை. அம்மா தான் என்னை அரவனைச்சு வச்சுகிட்டாங்க. .  அந்த பெரியம்மாவை அப்புறம் நான் பார்த்ததே இல்லை.

அம்மாகிட்ட ஏன் அப்பா வரலைன்னு கேட்டேன். அப்பா ஏதோ வேலை விஷய்மா வெளியூரு போயிருக்காருன்னு சொன்னாங்க. அந்த வருஷம் பேரண்ட்ஸ் டேக்கு கூட அப்பா வரலை.  ஆனா அவரமாதிரியே ஒருத்தரை ஒருநாள் தெருவுல பார்த்தேன்.  அவருகூட பச்சை கலரு புடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு போய்கிட்டு இருந்தாங்க.  அவங்க எல்லாம் ஞாயித்து கிழமை மாதா கோயில் பூஜை முடிச்சிட்டு வந்து கிட்டு இருந்தாங்க.  அம்மாகிட்ட சொன்னப்போ நம்ம அப்பான்னா கண்டிப்பா நம்மளை தேடி வருவாரு. அவரு வேற யாரோன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு ஸ்கூல்ல கலர் பென்ஸில் வாங்கி வர சொன்னாங்க. அம்மா தினேஷ் வீட்டுல விளையாடிட்டு அவனோட கலர் பென்சில் எதாவது இருந்தா வாங்கி வரலாம்னு சொன்னாங்க. தினேஷோட பழைய பென்சிலை எல்லாம் வாயில வச்சு மென்னு துப்பி இருந்தான். தினேஷ் அம்மா அவரு வந்த உடனே வேணும்னா வாங்கி கொடுத்து விடறேன்னு சொன்னாங்க. அப்போதான் அவங்க வீட்டு ஸ்க்ரீன் துணியை பார்த்தேன். மஞ்சள் கலருலயே இருந்தது. அம்மாகிட்ட அதுதான் அந்த புடவைய ஸ்க்ரீனா பண்ணிப்போடுங்கன்னு அடம் பிடிச்சேன். அம்மா எதுவுமே சொல்லல்ல . என்னைத் தூங்க வச்சிட்டாங்க.

காலைல புது ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க. பென்சில் வாங்கி தரவே இல்லை. நான் போக மாட்டேன்னு சொன்னப்ப இன்னிக்கு பொறந்த நாளு யாரும் என்னைத் திட்ட மாட்டாங்கன்னு சொன்னாங்க. டீச்சரும் என்னை திட்டல. ஆனா ஸ்கூலுக்கு ஒரு கலர் பென்சில் டப்பா வந்தது. தினேஷோட அப்பாதான் லேட் ஆயிடுச்சுன்னு கொண்டு வந்து கொடுத்தாராம். அந்த கலர் பென்சில்ல மொதல்ல அம்மாவோட முகம்தான் வரைஞ்சு இருந்தேன். அந்த மஞ்சள் கலர் புடவையோட அம்மாவை நல்ல வரைஞ்சிருந்தேன். டீச்சர் நல்லா இருக்கேன்னு பாராட்டுனாங்க.

சாயங்காலம் அதை அப்படியே அம்மாகிட்ட காட்ட வேகமா வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டிகிடந்தது. அம்மா அம்மான்னு தட்டினேன். வாசலிலே தினேஷோட அப்பாவோட செருப்பு இருந்தது. கதவு இடுக்குல அம்மாவோட புடவை மாதிரி ஒரு துணி மாட்டிகிட்டு இருந்தது. அம்மா நான் கேட்ட மாதிரி ஸ்க்ரீன் தச்சு போட்டாங்க போல இருக்கு. உள்ளே டக டகா டக டகான்னு சத்தம் கேட்குது.  இது தையல் மிஷின் சத்தம் இல்லை. டி.வி.ல ஏதோ சண்டை படம் போல இருக்கு.  யாரோ ஒரு பொண்ணு வேற முனங்கிகிட்டு இருக்கா. ‘அம்மா சீக்கிரம் கதவைத் திறம்மா. நான் வரைஞ்சபடத்தை காட்டனும்.

Read Full Post »

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்

தமிழில் சிறுகதையின் தோற்றம்:

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்

‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’

எனும் டொடரால் அறியலாம்.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கததகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் பழக்கமும் பரவத்தொடங்கியது.

இவற்றைத் தொடர்ந்து தமிழில் சிறுகதை எழுதும் போக்கு வளர்ந்தது. இவ்வளர்ச்சியின் போக்கை நான்கு காலக்கட்டங்களாகப் பிரித்து ஆராய்வது பொருந்தும்.

1. 1850 முதல் 1925 வரை

2. 1926 முதல் 1945 வரை

3. 1946 முதல் 1970 வரை

4. 1970 முதல் இன்று வரை ( இதை மட்டுமே பலவாகப் பிரிப்பர்)

1. 1850 முதல் 1925 வரை :

அச்சுவாகனமேறிய பழைய வாய்மொழிக்கதைகளெல்லாம் அந்நாளில் கட்டுப்பாடில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தபோது பெரும்பாலான கதைகள் பொழுதுபோக்க உகந்தவைகயாயிருந்தும் நல்லன போதிக்கும் வகையில் இல்லை. இந்நிலையில் ஆசிரியர் சதாசிவம்பிள்ளை(1820-1895)  தான் எழுதிய கதைகளைத் தொகுத்து ‘நன்னெறி கதாசங்கிரகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார்.  பல வரலாற்றுக் கதைகளுடன் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதியும் இத்தொகுப்பில் வெளிவந்தது.

ஆசிரியர் சி.வி. சுவாமிநாதய்யர் 1892ல் ‘விவேக சிந்தாமணி’ என்ற சஞ்சிகையைத் தொடங்கினார்.  இதில் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் சிறுகதை எழுத்துப்பயிற்சி மேலும் முன்னேறி 20ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் பலரது கைகளில் சோதனைகளாக வெளிப்பட்டது. ஆனால் எட்கர் ஆலன் போவவயோ, பிராண்டர் மேத்யூஸையோ அல்லடு அவர்கள் கொடுட்த சிறுகதை இலக்கண விளக்கங்களையோ அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.  எனினும் கதை சொல்லும் முறையிலும் கதைப் பொருளிலும் பாத்திரங்களைப் புதுவகையில் படைப்பதிலும் அவர்கள் பல்வேறு பாணியைச் சோதித்துப் பார்த்தார்கள் என்பது தெரிகிறது.

அ. மாதவைய்யாவும், பி. ஆர். ராஜம் ஐயரும் தமது படைப்புகளை விவேக சிந்தாமணியில் தான் முதன்முதலாக எழுதினர்.

விவேகசிந்தாமணி நிறுத்தப் பட்டவுடன் விவேக போதினி(1908) தோன்றியது.  வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். அம்மணி அம்மாள் என்ற பெண் எழுத்தாளர்  சிறுகதைப் பொருளிலும் உத்தியிலும் ஒரு புதுமையைப் புகுத்தினார். சென்னை பச்சயப்பன் கல்லூரித் தமிழாசிரியர் திருமணம் செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

துவக்க காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா (1872 – 1925) குறிப்பிடத்தக்கவர்.  இவரது கதைத் ஹ்டொகுதியான ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானடு. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர். இவர் எழுதிய ‘பஞ்சாமிர்தம்’,  ‘கண்ணன் பெருந்தூது’  போன்ற கதைகள் உருவ வார்ப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 – 1921) வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தகூரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வ. வே. சு. ஐயர் (1881 – 1925) புதுச்சேரியில் தங்கியிருந்த காலட்டில் எழுதிய சிறுகதைகள் டான் அவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று இலக்கியச் சமூகம் ஒருமுகமாகக் கருத காரணமாயிருக்கின்றன.  ‘கம்ப நிலையம்’ என்ற படிப்பகத்தின் மூலம் பல கதைகளை வெளியிட்டார். காபுலிவாலா என்ற தாகூரின் சிறுகததயை மொழிபெயர்த்து காபூல்காரன் என்று வெளியிட்டார்.  குளத்தங்கரை அரச்மரம், மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குறிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

இலக்கிய வரலாற்றுக் கட்டத்தில் இக்காலம் ஒரு முக்கிய எல்லைக்கல். சிறுகதை உருவ அமைதி பெற்றதும் பின்வரும் தலைமுறையின்ர் இலக்கியப் பணியில் பக்குவம் பெற உந்துதல் கொடுத்த ஓர் இயக்கம் உருவாகியதும் இந்த கட்டத்தில் தான். உரைநடடயில் எளிமையும் புதுமையும் சேர்த்தது மட்டுமல்ல பலப்பல வடிவங்களிலும் சோதனனகள் செய்தனர். இவற்றிலெல்லாம் தொடாத பொருளில்லை. அரசியல், சம்யம், இலக்கியம், சமூகம், தேசியம் என அனைத்துப் பொருளிலும் கதைகள் படைத்தனர்.

( தொடரும்……

Read Full Post »

எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம்  ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே  முழுவதுமாக கிடைத்துள்ளது.  அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….

……………………………………………………………………………………………………………………………………………

காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது.  நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது.  அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக வளர்ந்து வந்திருப்பது இன்று நம் ஆராய்ச்சிக்கு முக்கிய கருவாக விளங்குகிறது.

பின்புலமும் கொள்கைகளும்:

19ம் நூற்றாண்டில் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளிலும் சிறுகதைக்கு இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருந்தது.  அதிலும் அமெரிக்காவில் தான் சிறுகதை ஒரு தனி இலக்கிய வடிவம் என்ற கொள்கை பிறந்தது.

சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த அமெரிக்க ஆசிரியர்களுள் Natheniel Hawthorn,  Edger Allan Poe, Brander Mathews ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

Edger Allan Poe கதைகளை விமர்சனம் செய்ய எடுத்துக் கொண்ட ஆய்வு நெறியைச் சிறுகதைப் பற்றிய இலக்கிய கொள்கையாக இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.

அவரது கொள்கைகள்….

” சிறுகதை என்பது அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணி அல்லது இரண்டுமணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுதன்னள்வில் முழுமை பெற்றதாயும், அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாயுமிருக்க வேண்டும்.  வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப் பட்டதாயிருக்க வேண்டும்”

மேலும் சிறுகதையின் இலக்கணத்தைப் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் சிந்தித்த பிராண்டர் மேத்யூஸ்

“சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லடு ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம்” என்று சிறுகதைக்குரிய பண்பை விளக்கினார்.  மேலும் அவர் சிருகதை என்பது ‘சிறிய கதை’ என்ற பொருளில் இல்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல் என்றா.

ரஷ்யாவில் செக்கோவ், துர்கனெவ், கொகோல், மாப்பஸான் ஆகியோரும் சிறுகதை வடிவ உணர்வைக் கொண்டுத் திறம்படக் கதி புனைந்தவர்களாவர்.

மற்ற  நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கர்கள்தான் சிறுகதைக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுப்படில் வெற்றியடைந்தவர்கள்.  அவர்களின் வாழ்க்கையில் நிலவும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாக இந்த வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பிராங்க் ஓ கானர், எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்கள் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த்வர்களாவர்.

இந்தச் சிறு தளத்தைப் புரிந்து கொண்டு இனி தமிழில் அதன் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து பார்ப்போம்……..

Read Full Post »

                அன்று காலை அவசரமாக வேலைக்குக் கிள்மபிக்கொண்டிருந்தான். டெல்லியில் பொங்கல் முடிந்தும் பலருக்குப் பொங்கல் வாங்கித்தரவில்லை என்ற வருத்தம் பல நண்பர்களுக்கு இருந்ததாலும் வேலை அதிகமாக இருந்ததாலும் இந்த முறை அருகில் இருந்த ஒரு தென்னிந்திய சமையல்காரனிடம் சொல்லி பொங்கலை கல்லுரிக்கு இடைவெளி நேரத்தில் கொண்டு வர திட்டமிட்டிருந்தான். அதனால் அதற்கான வேலைகளில் மும்ரமாய் ஈடுபட்டு சங்கருக்கு ஃபோன் செய்து வைக்கும் போதுதான் தந்தையிடம் இருந்து அந்த துக்கமான தகவல் வந்து சேர்ந்தது. உடனே சங்கரிடம் சொல்லி ஏற்பாடுகளை நிறுத்தி இருக்கலாம். ஆனால் பலரை ஊக்கப் படுத்த வேண்டிய ஒளிவிளக்காய் இருக்க வேண்டிய நாம் சாதாரண மானுட சுக துக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது என்று அப்பா அடிக்கடி கூறுவது ஞாபகம் வரவே எந்த வேலையும் நிற்கக் கூடாது என்று கல்லூரிக்குப் புறப்பட்டான்.

               போன வாரம் சென்னைக்கு சென்றிருந்த போது கூட “பாட்டிக்கு உடம்பு சரியில்லை எதுக்கும் பார்த்துவிட்டுபோ” என்று அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. “என் கல்யாணம், அக்கா கலியாணம் எல்லாம் பார்க்காம எப்படியும் போக மாட்டாங்க. பி.எச்டி முடிச்சு இன்னும் சிறப்பான சந்தோஷத்தோட பார்க்கிறது தானே நல்லது”என்று பதில் கூறிவிட்டு திருநெல்வேலி செல்ல சோம்பி திரும்பி விட்டோம்.

                 மெல்ல கல்லுரியை வந்து அடைந்தான்.  அன்று அவன் பி.ஏ. மாணவர்களுக்கு புவியியல் பாடத்தில் சூரிய கிரஹன தோற்றம் குறித்து பாடம் நடத்த வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்ததும் சந்திரசூடனை உற்று பார்த்தான். அவனுடைய தந்தை இறந்ததற்காக மிகவும் வருந்தி இருந்த அவனை நேற்றுதான் கூப்பிட்டு வைத்து “நீ அவரைக் கடைசி வரை பார்க்காமல் போய் விட்டதே என்று எண்ணாதே. இப்போதுதான் அவர் இயற்கையோடு கலந்து நீ கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்ப்பார். இந்த உடல் எண்ணும் சங்கிலியால் கட்டப்ப்ட்டு இத்தனை நாள் உன்னைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார். இனி எங்கும் நிறைந்து இருந்து உன்னையே சுற்றி வருவார். நாமெல்லாம் பெரிய லட்சியத்திற்காக இங்கு வந்திருக்கிறோம். இந்தக் கல்லூரி உன்னை ஒரு சிறப்பானவனாக்கும் என்ற காரணத்தால்  வந்தாய். அப்படி சிறப்பானவன் எந்த ஒரு சோதனையையும் எதிர் கொள்ளத் தாயாராய் இருக்க வேண்டாமா” என்று ஊக்கப் படுத்தினான்.  அதன் பலன் இன்று அவன் முகத்தில் தெளிவாய் மிளிர்வதைக் கண்டான்.  ஆனால் அந்தத் தெளிவு இன்று இவன் முகத்தில் இல்லை.  ஆனால் அது மாணவர்களுடைய நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது என்பதற்காக போலியான புன்னகையைப் பூசிக்கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தான்.

                புன்னகை வேண்டுமானாலும் போலியானதாக் இருக்கலாம். ஆனால் உற்சாகம் மனத்தில் போலியானதாய் எழ எழ உள்ளம் சோர்வடைந்து விடுவது இயற்கைதானே. ஒருவருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கையில் நாம் சொல்லிக் கொடுக்கும் கருத்து அவர்களைச் சென்று அடைய வேண்டும் என்பத்ற்காக பலமுறை மனத்தில் அவன் சொல்லிப் பார்த்த வாக்கியங்கள், கருத்துகள் எந்த நிலையிலும் நீங்காது இருக்கவே அவனால் அவற்றை சிறப்பாக செய்ய முடிந்தது. அதில் பாதி தான் தளர்ந்து விடக் கூடாது என்ற வைராக்கியத்தாலேயே இருந்தது.

                 இடைவெளி நேரம் வந்தவுடன் சங்கரனும் பொங்கல் பொட்டலங்களோடு வந்து சேர்ந்தான். அதை எல்லா விரிவுரையாளர்களுக்கும் பகிர்ந்து வைத்துவிட்டு தானும் சாப்பிட அமர்ந்தான். வயதான மாமியாருக்கு இரெண்டு வேளை சாப்பாடு போட்டு கொடுமைப் படுத்தப் பட்ட அம்மம்மாவை நினைத்துக் கொண்டான். தான் பி.எச் டி முடித்து நிரந்தர வேலையில் அமர்ந்ததும் அவர்களை இங்கேயே அழைத்து வந்து வைத்துக் கொண்டு அவர்கள் நினைத்தார்போல் சந்தோஷமாய் வைத்திருக்க திட்டம் போட்டிருந்தான். இன்று அவர்களுடைய ஈமச் சடங்கு அங்கு நடந்து வருகிறது. “நீ வருவதற்குள் எல்லாம் முடிந்துவிடும் வந்து என்ன செய்யப் போகிறாய்” அப்பா சொன்னது. ஒரு வாய் விழுங்குவதற்குள் படாத பாடு பட்டான். போலியாய் “அமீத் பஹுத் மீடா ஹைனா! யே பி கா லீஜியேகா”என்று தனது பங்கையும் கொடுத்துவிட்டு மீண்டும் வகுப்புக்குச் சென்றான். இம்முறை அவன் மனது முழுவதும் ஊரையே சுற்றி வந்தது.

                பழைய பாடங்களில் இருந்து ஒரு சிலர் சந்தேகம் கேட்டு வந்தனர். “புதுசா நடத்தினதைப் படிக்கச் சொன்னா இன்னும் பழசையே வச்சிருக்கீங்க. இன்னொரு முறை நல்லா நடத்தினதைப் படிங்க முடியலைன்னா திங்கட்கிழமை சொல்கிறேன் சரியா” என்று அனைவருக்கும் நூலகத்தில் வேலைக் கொடுத்துவிட்டு தப்பித்துவிட்டான்.

                 அங்கே சென்று ஒரு காமெடி நாவலைப் படிக்க ஆரம்பித்தான். மனது செல்லவில்லை. தன் கவலையைத் தீர்க்க யாரிடம் போய் சொன்னாலும் வழக்கமான ஆறுதல் மொழிகள் அவனை அறுவறுக்கத்தான் செய்யும். மாலைவரை எப்படியோ தன் உற்சாகக் குறைவை முழுமையாகக் காட்டாமல் வீடு வந்து சேர்ந்தான். வீட்டிலேயும் அவன் மனதை மாற்ற எவ்வளவோ முயன்றான். விருமாண்டி படம் நல்லா இருக்கும்னு சொன்னாங்களே அதைப் போட்டுப் பார்த்து மனதைத் திசைத் திருப்பினால் என்ன என்று அதை எடுத்துப் போட்டுப் பார்த்தான்.  கொஞ்ச நேரத்திற்கெல்லாம் விருமாண்டி மட்டுமல்ல பாட்டி செத்ததற்கு தானும் தாரை தாரையாய் கண்ணீர் வடித்து உட்கார்ந்திருந்தான்.

Read Full Post »

                வகுப்பு முடிந்து அன்று வீடு திரும்பினேன். சுமார் மாலை 4 மணி இருக்கும். எனது நண்பன் அஜித் வெளியே பொய் இருந்தான். அறையில் இருந்த அரை இருளில் பட படவென்று சத்தம் கேட்டது. எலி உள்ளே நுழைந்து விட்டதோ என்று சுற்றி முற்றி பார்த்ததில் ஒரு பட்டாம்பூச்சி சன்னல் வழியே வந்த ஒளி கீற்றை உயிர் மருந்தாக எடுத்து ஜன்னல் அருகே சசலத்துக் கொண்டிருந்தது. நானும் பட்டாம்பூச்சிதானேஎன்று கவனிக்காமல் அதையும் தொந்தரவு செய்யாமல் எனது பாடங்களைஎடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

                சற்று நேரத்திற்கெல்லாம் அஜித் வந்துவிட்டான். இருவரும் அன்று படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்திவிட்டு இரவு உணவு அருந்த  அமர்ந்தோம். அது வரை சத்தமே இல்லாம்ல் இருந்து வந்த பட்டு, நாங்கள் சாப்பிட அமர்ந்ததும் ட்யூப் லைட் அருகே சென்று தனது இருப்பை உணர்த்தியது.

                 “ஏய் நம்ம ரூம்ல ஒரு பட்டு வந்திருக்கு பார்த்தியா?”எங்கோ எனது மனத்தில் ஒளிந்து இருந்த ஆவல் வெளியே வந்தது.

                 “ம்ம்… நான் அதைக் காலையிலேயே பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கு. வெளிப்புற சிறகைவிட அதனுடைய சிறகை விரித்திருக்கும் போது பார். எவ்வளவு அழகான நாசுரல் ஸ்கெட்ச் தெரியுமா?” என்றான்.

              எனக்கு சாப்பாட்டில் மனம் கொள்ளவில்லை. வேகமாக அந்த கடனைக் கழித்து விட்டு. கைகழுவியதும் பட்டுஜி சிறகு விரிக்கப்படுமா என்று காத்திருந்து பார்த்தேன். இறைவன் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள். யார் அந்த ஓவியத்தை வரைந்து இருப்பார்கள் என்று கேட்டேன்.

                “அதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. நாங்கள் சின்ன வயதில் வயல் வரப்பில் நிறைய பட்டுப்பூச்சியோடு விளையாண்டிருக்கோம். அதை நீ தொட்டால் அதனுடைய வண்ணங்கள் உன் கையில் ஒட்டிக் கொள்ளும்”

                   “அப்படியா எனக்கு இது தெரியவே தெரியாதே. சிடியில் எங்கே போய் வயல் வரப்பைத் தேடுவது. பட்டுப் பூச்சியைப் பார்த்தாலும் அதன் அருகே சென்று விளையாடக் கூட நேரம் கிடைக்காது. டான்ஸ் க்லாஸ், ஹிந்தி க்லாஸ், ஹோம்வ்ர்க், இப்படியே எங்கள் குழந்தை பருவம் திருடப் பட்டு விட்டது.”என்று அதிசயமாய் அவன் சொன்ன விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

                திடீர் என்று ஒரு யோசனை வந்தது. “ஏய் என்னோட மொபைல் காமெராவுல இந்தப் பட்டுவைப் படம் பிடித்தால் என்ன?”

          paddu1.JPG

                “போச்சு உன்னோட மொபைல் மானியாவை ஆரம்பிச்சுட்டியா… நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை” என்றான்.

 

               சற்று நேரத்திற்கெல்லாம் என் மொபைல் காமெராவொடு பட்டுவை நெருங்கினேன். சலனமே இல்லாமல் ஏதோ ஒரு யோகத்தில் இருந்தது போல் இருந்தது.  

paddu31.JPG

நான் நெருங்கியதும் படபடவென்று அடித்துக் கொண்டு பரண்மேல் ஏறி அமர்ந்தது. நானும் விடுவதாக இல்லை. “உன்னுடைய முன்னழகை மட்டுமாவது நீ எனக்குக் காட்டி போஸ் கொடுக்க வேண்டும்” என்று சொன்னபடியே பரண்மேல் ஏறி ஒரு ஃபோட்டோ பிடித்தேன். அதில் அஜித கீழே உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதும் வந்தது. அதோடு நிறுத்தவில்லை.

  

                ஆசை யாரைவிட்டது. “உனது இறக்கைகளை விரித்து வைத்தாற்போல் ஒரு போஸ் கொடுடீ.” என்று கெஞ்சாத குறையாகக் கெட்டேன்.

                “ஏய் பட்டு என்ன உன் கர்ல் ஃப்ரெண்டா நீ நினைச்சாமாதிரி நின்னு போஸ் கொடுக்க. இப்பொ எல்லாம் அவங்க கூட நீ நினைச்ச மாதிரியெல்லாம் நிக்க மாட்டாங்க”என்று மறுப்புரை, அஜித்திடம் இருந்துதான்.

                 “நீ என்னைப் பற்றி தப்பா புரிஞ்சுகிட்ட. நம்மளோட ரிக்வெஸ்டை யாராவது மறுப்பாங்களா..?” என்று என் மரியாதைக்கு ஒரு சவாலாக இதை எடுத்துக் கொண்டேன். பின்பு ஒரு வழி தோன்றியது. லைட்டை அனைத்து விட்டால் அந்த மாற்றத்தில் அது படபட வென்று அடிக்கும் அந்த நேரத்தில் மல்டி ஷாட் மோடில் இருந்து பிடிக்கலாம் என்று முடிவு பண்ணேன். லைட்டை அனைத்ததும் எனக்கு கண் தெரியாமல் போய் விட்டது. ஒரு வழியாக பட்டுவைக் கண்டு பிடித்து ஃபோட்டோ பிடிப்படற்குள் அதனுடைய படபடப்பு ஓய்ந்து விட்டது.

                மீண்டும் இதே முறையில் முயற்சி செய்தேன். ஆனால் பயன் இல்லை. கடைசியில் அது இங்கும் அங்குமாக ஆட்டம் காட்டத் துவங்கியது. முக்கால் மணி நேரம் முடிந்தது. “உன்னை நான் தொந்தரவு செய்யவா வரேன் செல்லம். ஒரே ஒரு முறை உன் முழு அழகையும் படம் பிடித்து விட்டேன் என்றால் நான் தூங்கப் போயிடுவேன் இல்லையா..”என்று மெதுவாக ஒரு தீக்குச்சிமூலம் அதன் இறக்கையை பிரிக்க முயன்றேன். இரெண்டு மூன்று முறை முயன்றதில நல்ல ஃபோட்டோ ஒன்று கூட வரவில்லை. ஒன்று மட்டும் சுமாரான உருவத்தில் கிடைத்தது வௌவால் போன்று.

paddu2.JPG

அதுவும் சோர்ந்து போனது. மெல்ல அதை எடுத்து என் மேசையில் இருக்கும் பேனாவின் மேல் அமர்த்தினேன்.

  paddu4.JPG

 “இதற்கு ஓவியம் மட்டும் அல்ல எழுதக் கூட தெரியும் போலிருக்கு என்று தலைப்பு கொண்டு அந்த ஃபோட்டோவை சேமித்து வைக்க முயன்றேன்.” மீண்டும் ஒரு முறை தீக்குச்சி உதவியை நாடினேன். படக்கூடாத இடத்தில் பட்டிருக்கும் போலிருக்கு உடனே அந்த சோர்விலும் பறந்து சென்று அறையில் வைக்கப் பட்டிருந்த சிவலிங்கத்தருகே சென்று மறைந்தது. சிவத்திடம் சென்றவுடன் நானும் காலையில் பார்க்கலாம் என்று தூங்கப் போனேன். ஒன்றரை மணிநேரம் பட்டுகூட உறவாடியது மனத்திற்கு இதமாக இருந்தது. பல நேரங்களில் மனிதர்களைவிட இவை நல்ல சந்தோஷம் தருகின்றன. அதற்குள் அஜித் உறங்க சென்றுவிட்டான்.

               காலையில் எழுந்த உடன் நடந்தவைகளைப் பற்றிக் கூறினேன். இப்போ எங்கே போச்சு என்று விசாரித்தேன். தெரியவில்லை இயற்கையைத் தேடி அறையைவிட்டு சென்றிருக்கும் என்று நினைத்துக் கொண்டு அன்றைய வேலைகளில்  ஈடுபட்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அறையை சுத்தம் செய்யப் போகும்போது அதனுடைய சடலம் கிடைத்தது. ஆடிப் போனேன்.

                 “போச்சு உன்னோட சந்தோஷத்திற்காக ஒரு அப்பாவி உயிரைக் கொன்றுவிட்டியா…. அதோட ஆத்மா அடுத்த ஜென்மத்துல உன்னைப் பழி வாங்காம விடாது”என்று விளையாட்டாகத்தான் அஜித் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ஆனால் அந்த வார்த்தைகள் மட்டும் இன்னும் என்னைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.

Read Full Post »

நந்துகண்ணா ….!

                “ஜாதகம் சாமியெல்லாம் பொய். எங்க எதுத்த மாதிரி தான் சிவன் கோயில் இருக்கு. ஆனால் நான் உழைப்பை மட்டுமே நம்பினேன் இன்றைக்கு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறேன்.  ஒரு நாளைக்காவது கோயிலுக்கு போய் இருக்கேனா” என்று ஜம்பமாய்ப் பேசிவந்த வெங்கட கிருஷ்னன் அன்றைக்கு ரொம்ப பய பக்தியாய் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். வெளியூரில் இருந்து வீடு திரும்பிய நான் வேகமாக அம்மாவிடம் கேட்டேன்.

                “அதுவா… கஷ்டம்னு வந்துட்டா எல்லாரும் அவன் கால்ல தான போய் விழுந்தாகணும். அவருடைய மூத்த தலை பேரன் அது தான் நம்ம யோகேஷ் இல்லை அவனுக்கு தான் ஏதோ தோல் வியாதி மாதிரி வந்திருக்காம். ஆயுர்வேதம், ஹோமியோவெல்லாம் எவ்வளவு தப்பா பேசுவாரு. இன்றைக்கு அலோபதியில அதுக்கு மருந்து இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னு இப்படி மாறிட்டரு மனுஷன். நான் கூட நம்ம ஜோசியரை வர சொல்லி இருக்கேன். இப்போ ஒரு வருஷத்துக்கு மேல கஷ்டப் பட்டுட்டாங்க இல்லையா… அது தான் அவனுக்கு இவரை வச்சு ஜாதகம் எழுதலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். அவரு வந்த உடனே நீதான் கூட்டிட்டுப் போய் பார்த்து விட்டு வா…”என்றார் என் அம்மா.

                 அவன் ஐந்து மாதம் இருக்கும் போது பார்த்து இருக்கேன். முதலில் பார்க்கும் போதே என் மனதில் பட்டது.  அவனுடைய நாக்கு நீலம் பூத்துப் போய் இருந்தது. ஆனால் அவனுக்கு இருதய நோய் இருக்கக் கூடும் என்று கூற எனக்கு பயம். பின்பு அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு ஊருக்குப் போயிட்டேன்.

                மதியம் ஜோசியர் வந்த உடனே அவரை அழைத்துக் கொண்டு செல்லும் போது தான் அவனுடைய உண்மையான பிரச்சனை புரிந்தது. அவனுடைய  இரத்ததிலேயே ஏதோ பிரச்சனை என்று வைத்தியர்கள் சொல்லி விட்டார்களாம். தலையில் இருந்து கட்டி போன்ற ஒன்றில் இருந்து சீழ் வடிந்து கொண்டிருக்க அந்த இரெண்டு வயது குழந்தைக்கு அப்பொழுது வலி எதுவும் இல்லாததால் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த நிலையில் அவனைத் தூக்க, கொஞ்சக் கூட யாரும் மறுப்பார்கள் போலும்.

                 “இன்றில் இருந்து இவனுடைய பேரை யதுநந்தன்னு மாத்தியாச்சு. ஒரு சாமியார் இவனுக்கு நியூம்ராலஜி ப்ரகாரம் பேரு வைக்கலைன்னு மாத்தி விட்டுட்டாரு…” என்று அவருடைய தாத்தா பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாரு. அவனுடைய ஆரூடம் ஆராயப் பட்டிருக்கும் போது மெதுவாக நந்து என் அருகில் வந்து அமர்ந்தான். தனது நுனி விரலால் என் தொடையில் கை வைத்து நான் என்ன செய்கின்றேன் என்று ஆராய்ந்தான். நான் எதுவும் செய்யவில்லை என்ற உடனே மெதுவாகத் தன் கையை என் தொடையில் வைத்தான். நேரமாக நேரமாக தாங்கலாக என் மேல் சாய்ந்த மாதிரி அமர்ந்து கொண்டான். அவனுடைய சித்தப்பா மாதிரி நான் இருக்கிறேன் என்று தோன்றியதால் என்னிடம் சேர்ந்து கொண்டானாம்.

                 ஜோசியரும் ஆழமாக ஆராய்ந்து விட்டு கொஞ்சம் கவலையோடே “எட்டு வயது வரைக்கும் இந்த ப்ரச்சனை இருக்கும் தான் போலிருக்கு. ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பிரச்சனை கூடும் குறையும ஆனால் முழுவதுமாகக் குறையும் வரை கவனமாகவும் பொறுமையாகவும் இருங்கள்” என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

                அதன் பின் நான் ஊருக்கு வந்து விட்டாலும் அவனுடைய நினைவு வராமல் இருப்பதில்லை. தொலைபேசியில் அம்மாவிடம் பேசும்போதெல்லாம் அவனைப் பற்றி பேசுவேன். பாவம் அவனுடைய குழந்தை பருவம் முழுவதும் இப்படியே கழிகிறதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். எதிரே இருந்த அரசாங்க சிவன் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினராகவே அவனுடைய தாத்தா மாறி விட்டாராம்.

                இவன் விளையாடப் போனால் அனைத்து நண்பர்களும் இவனைப் படையப்பா..என்று கிண்டல் செய்கிறார்களாம். “அது ஏம்மா?”என்று ரொம்ப பாவமாக கேட்பானாம். வயது ஏற ஏற அவனுடைய புத்தி கூர்மையும் வளர்ந்தது. அவனுக்காக இறைவனிடம் வேண்டாத நாளில்லை. திருவிளையாடல் புராணத்தில் ஒருவரை ஆட்கொள்ள நினைத்த இறைவன் இப்படித்தான் சோதித்து சேர்த்துக் கொள்ளுவாராம்.

                நான்கு வருடம் கழித்து வீடு திரும்பினேன். அம்மா ஆவலாக அவன் செய்யும் குறும்புகள் பற்றி சொன்னார்கள். “சித்தப்பா என்னை ஒரு ஃபோட்டோ பிடிச்சு உன் கம்ப்யூட்டர்ல வை சித்தப்பா”என்று அவன் தனது சித்தப்பாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தானாம். அம்மா எனது புது மொபைலைப் பார்த்துட்டு இதில் அவனை சாமி பாட்டையெல்லாம் பாடி எடு என்று ஆசையாகக் கேட்டுக் கொண்டார். நானும் அதே ஆவலில் அவனுடைய வீட்டிற்கு ஃபோன் செய்ததில் அவன் தனது அம்மம்மா வீட்டிற்கு போய் இருப்பதாகச் சொன்னார்கள்.

                 சரி இன்னும் பத்து நாட்களில் திரும்பத்தானே போகிறோம் என்று நானும் இந்த முறை திரும்பிவிட்டேன். வீடு வந்த இரெண்டு நாட்களுக்குள் அம்மாவிடம் இருந்து ஃபோன் வந்தது. “தம்பி நந்து திடீர்னு மூச்சு விடக் கஷ்டப் பட்டான்னு ஹாஸ்பிடல் எடுத்து கிட்டு போனாங்க. அவனுடைய இருதையம் பெரிசாயிடுச்சாம். இனி அவன் பிழைச்சாலும் நல்லா வாழ்றது கஷ்டம் தான்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்.” அன்று முழுவதும் மனதே சரியில்லை.

“நாங்க எல்லாம் ஆடி மாசத்துக்கு கூழ் ஊத்தி சாமி கும்பிடறோம் மாமா. நீங்க ஏன் வரலை… உங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகனும், எனக்கு சீக்கிரம் குணம் ஆகனும்னு எல்லாம் சாமி கிட்டே வேண்டிக்கிட்டேன்” இது தான் அவன் இந்த ஆடி மாதம் என்னிடம் பேசியது.

மறுநாள் காலையில் ” தம்பி நீ இனிமேல் அவனைப் பார்க்க முடியாது ராஜா…. அவங்க தாத்தா…. சாமியாவது ஒன்னாவது…. நீதான்டா என் குலதெய்வம் என்று அவன் உடம்பில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்” இந்த செய்தி என்னை நிஜமாகவே ஆட்டி வைத்து விட்டது.

                 நான் கூட சென்று சிவன் முன் அமர்ந்துவிட்டேன். ஜோசியரின் வருத்தத்திற்கு அர்த்தம் புரிந்தது. மெதுவாக அவனுடைய தாத்தாவிடம் இரெண்டு நாள் கழித்து ஃபோன் செய்து பேசினேன்:

“கடவுள் நல்ல விஷயம் தாம்மா பண்ணி இருக்கிறார். நமக்கு தான் வருத்தமா இருக்கு. ஆனா அவன் இருக்கிறது அவனுக்கு தானே கஷ்டம். குழந்தை அஞ்சு வருஷம் இங்கேயே இருந்து எல்லா இடத்துலயும் முத்திரை பதிச்சுட்டு போய்ட்டான். இனி நாம தான் தைரியமா ஆண்டவன் சொல்றதை கேட்டு நடக்கணும்”என்றார்.

               இறைவன் தடுத்தாள்வதில் இவ்வளவு வேதனையா? வாழ்க்கைக்கு அர்த்தம் கண்டு பிடிக்க இவ்வளவு போராட வேண்டுமா…? அதை நினைக்கையில் இன்றும் கண்கள் பனிக்கின்றன.  

Read Full Post »

{தேன்கூடு போட்டிக்கான கதை}

                  சின்ன வயசுல இருந்தே பீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும். அஞ்சாம் க்லாஸ் படிக்கும்போதே அப்பா வாங்கிக்கொடுத்த ஷூவை வச்சிக்கிட்டு,

“மச்சி இதுதாண்டா அப்பா லண்டன்ல இருந்தி வாங்கிட்டு வந்த ஷூ. இந்த ஷூவால மிதி வாங்கினா நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுடா” என்று பள்ளி நண்பர்கள் அனைவரையும் போட்டு மிதிப்பான். பெரிய இடத்து பிள்ளைவேறு, அவனுக்கென்று ஒரு கும்பல். அப்பொழுதே பள்ளி முதல்வர் பெற்றோரிடம் புகார் செய்தால்,

“சின்ன பிள்ளைங்கன்னா அப்படி இப்படி குறும்பு பண்ணத்தான் செய்யணும். என் புள்ளை யாருகிட்டயாவது அடி வாங்கிகிட்டு வந்து அழவா செய்கிறான். அப்படி அழுதாலும் நீயே சமாளிச்சுக்கோன்னு நாங்க தலையிட மாட்டோம். இதைப் போய் பெரிய விஷயமாக்கி என்னைக் கூப்பிட்டு விடுறீங்களே. எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல சிங்கப்பூருக்கு ஃப்ளைட். அவன் கிட்ட அடி வாங்கின பசங்களுக்கு வேணும்னா நான் மெடிகல் ஹெல்ப் பண்றேன் ஃப்ரீயா” என்று அவனிடம் இருந்த விளையாட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் வேறு கொடுத்தாச்சு.

பன்னிரெண்டாம் க்லாஸ் படிக்கும்போது, பயாலஜி ப்ராக்டிகலுக்காக வாங்கி வைத்து இருந்த அனைத்து தவளையும், எலியும் கூட படிக்கும் நண்பர்களின் பையில.. வகுப்பே ஒரு உயிரியல் பூங்காவானது.

வயது வேறு ஏறி விட்டது. “மிஸ் வை டோன்ட் யு டீச் அ ப்ராக்டிகல் டெமோ ஆன் மென்ஸ்டுரல் ஸைக்கில்”

அதற்கும் அவனுடய அப்பா

“பசங்களுக்கு ஒழுக்கத்தைக் கத்துக்கொடுக்க வேண்டியது டீச்சர் பொறுப்பு. நீங்க கத்துக்கொடுத்த லட்சணம் இவ்வளவு தானா. அடுத்த வாரம் ஆஸ்த்ரேலியால இருந்து வந்த உடனே பேசிக்கலாம்.” என்று தனது ஆடுபுலி ஆட்டத்தைத் துவக்கி வைத்து விட்டார்.

 

               பீட்டர் ஆனால் படிப்புலயும் பீட்டர்தான். சும்மாவா பின்ன, மெடிக்கல் என்ட்ரன்ஸ்ல க்லியர் பண்ணி தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு ஸீட் வாங்கிட்டானே.

              ஏற்கனவே பழகின நண்பர்களோட சேர்ந்துகிட்டு ஃப்ர்ஸ்ட் இயர்லேயே அனைவரையும் ராகிங் பண்ணவன், இப்போ செகண்ட் இயர் வேறு. கேட்கவா வேணும்.

 

               “டேய் அந்த யுனிவர்ஸிடி வி.ஸி. மகன் ரொம்ப பீட்டர் விட்றானாம் நைட் ஹாஸ்டலுக்கு கூட்டியாங்கடா அவனுக்கு இன்னிக்கு அனாடமி கத்துக் கொடுப்போம்”

                                         * ********************

                “நீ தான் நிறைய படிச்சவன்னு க்லாஸ்ல ரொம்ப பீட்டரு வுட்றியான். எவ்வளவு தூரம் படிச்சிருக்க”

                 “வேண்டாம் சீனியர். நான் ரொம்ப சின்ன பையன்”

                  “சின்ன பையனா அப்போ நீ என்ன வயசுக்கே வரலயா… மச்சி அவன் பேன்டை அவுருங்கடா அவன் வயசுக்கு வந்துட்டானா இல்லையான்னு கண்டு பிடிப்போம்”

                     “வேண்டாம் சீனியர்”

                     “வேண்டாம்னா என்னடா செய்வ.. அடிச்சிடுவியா? எங்க அடிடா பார்க்கலாம் அடிடா…”  என்று பேசிக்கொண்டு இருக்கையிலேயே கோபம் அதிகமாகி சண்டையாய் மாறப் போனது அடுத்தவர் தடுக்க முயன்றும் முடியல, கைகலப்பில் ஆழமான ஒரு அறை வாங்கி அந்த இடத்துலேயே மயங்கி விட்டான்.

                         “மச்சி உனக்கு எல்லாமே விளையாட்டுதான். பாரு பையன் மயங்கிட்டான்”

                         “சரி சரி மயக்கம் தெளியுறானான்னு பாரு”. எவ்வள்வோ முயன்றும் முடியல.

                          “டேய் என்னடா பண்ண”

                           “அல்பாய்சா…. சரி வுடு சர்ஜிக்கல் கிட்டைஎடுத்து வா… இவனையே வச்சு அனாடமி பண்ணலாம்”

                            “என்னடா பேசுற போலீஸ் கேஸ் ஆகப்போகுது. ஆமாம் நான் இன்னும் மாமா வீட்டுக்குத்தான் போனதில்ல. சரி சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீங்க யாரும் தலையிடாதீங்க.”

                             “மச்சி நேரத்தைப் பார்த்தியா நாம அவனுக்கு அனாடமி கத்துக்கொடுக்கலாம்னு கூட்டியாந்தோம். இப்பொ நாம் கத்துகிட்டு இருக்கோம்.”என்று அந்த நேரத்துலேயும் குறும்பு.

                               கொஞ்ச நாளில் போலீஸ்கிட்டயும் மாட்டியாச்சு.

“பையன் என்ன வேணும்னா கொல்லுவான். எதோ விளையாட்டா தட்டி இருக்கான் அவனுக்கு அல்ப ஆயுசு போய் சேர்ந்துட்டான். சரி சரி அதுக்காக் வாழ வேண்டிய பையனோட வாழ்க்கைய வீணடிச்சுடாத ஜட்ஜு தெரியுதா… அடுத்த மாதம் அமெரிக்கா போய் வருவதற்குள் மேட்டரை முடிச்சிடு புரியுதா… வேணும்னா அவங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டோ மூனோ கொடுத்திடலாம். நான் வேணும்னா மன்னிப்புக் கேட்டுடறேன்… பையனுக்கு எதுவும் ஆகாம நீதான் பார்த்துக்கணும்.”

                  விளையாட்டுப் பிள்ளை விளையாட்டா வெளிய வந்துட்டான். ஆனால் அவன் விளையாட்டுத்தனம் மட்டும் இன்னும் மாறல. இப்போ அரசியல்ல நிக்கணும்னு ஒத்தக் காலுல நிக்கிறானாம். அவங்க அப்பா மினிஸ்டர் கிட்ட பேசிகிட்டு இருந்தாரு.

Read Full Post »

Older Posts »