Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பாலா’

ரொமப நாள் கழிச்சு ஒரு படத்தை அது வெளியிடற அன்றைக்கே பார்த்தாச்சு… அதுதான் முதல் ஆளா அதைப் பற்றி எழுதனும்னு எழுதுறேன்… ஆனா படத்தோட கதைய நான் சொல்ல போறது இல்லை.

சரி படத்தைப் பற்றி..

விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா (சேது- தேவதாசிகள் மற்றும் மனநோய் குன்றியவர்கள், நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள், பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்)  இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம் பிச்சைக் காரங்க… ஆமாம் நல்லா இருக்கிறவங்களை முடமாக்கி பிச்சை எடுக்க வச்சு சம்பாதிக்கிறவங்க. படத்தோட பெரிய பலம் என்னன்னா  வர்த்தக ரீதியான பாட்டு, கூத்து, காமத்தைக் கிளறி விடுகிற காட்சிகள் அழகான அரை குறை ஆடை போட்ட நாயகி, காதல் அப்படின்னு எதுவுமே இல்லாமல், எல்லோரும் பேசவே கஷ்டப் படுகிறவங்களோட வாழ்க்கைய அதிகமா முகம் சுளிக்க வைக்காம ஜனரஞ்சகமா எடுத்திருக்கிற விதம் ரொம்ப அருமை.  அதைவிட அகோரிகளின் (கபாலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு இந்து மத வகுப்பினர்) வாழ்க்கையையும் அதில் இருக்கிற எந்த முரண்பாடுகளையும் தொடாமல் அழகாகக் கையாண்டிருக்கிற விதம் அருமை. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை கருவாக வைத்து தலைப்பும் வைத்ததாலோ என்னவோ வழக்கம்போல் பாலா படத்தின் முடிவை யூகிக்க முடிகிறது. ‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’ என்ற படத்தின் உயிர் நாடியான வசனம் அருமை. ( இந்த தத்துவத்தில் இரெண்டிற்குமே மரணம் தானான்னு கேள்வி எனக்குள்ளயும் எழும்பியது) ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமும் நிறையவே இருக்கு. மொத்தத்தில் பாலாவின் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியும், பல வருடங்கள் பட்ட கஷ்டமும் நன்றாகவே தெரிகிறது.

நடிப்புன்னு பார்த்தீங்கன்னா ஆர்யாவுக்கு எதிர்பார்த்ததைவிட நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். ஏன் வசனமும் கம்மிதான். அதுதான் பிதாமகன்லேயே பார்த்தோமே. ஆனா என்னை ஆச்சர்ய படவச்ச விஷயம் ஆர்ய போடுகிற பத்ம சிரசானம். ரொம்ப பயிற்சி எடுத்ததாக ஏற்கனவே பத்திரிக்கைல படிச்சேன். அதுக்காகவே நெஞ்சில பதியிற அளவுக்கு அந்த ஆசனத்துல நின்றிருக்கார்.

ஆனா மிகப் பெரிய ஆச்சர்யம் இன்னும் ஒன்னு இருக்கு அதுதான் கதாநாயகி பூஜா. இது வரைக்கும் அதிகம் பேசப்படலை. மேலும் ஆர்யாவைவிட பூஜாவுக்கு வாய்ப்பு அதிகம். ஒரு காட்சியில திருவருட்செல்வர் படத்துல திருநாவுக்கரசரா வந்து கடைசியில சிவனிடம் கெஞ்சுகிற சிவாஜிய ஞாபகப் படுத்தினார்னா பார்த்துக்குங்க. ஆனா இவருகிட்டயும் இவ்வளவு வேலை வாங்க முடியும்னு பாலா நிரூபிச்சிட்டார். என்ன.. ஆணாதிக்கம் கொண்ட திரைஉலகுல பூஜாமாதிரி நடிகைகளுக்கு வாய்ப்பும் வரவேற்பும் எப்படி இருக்கும்னுதான் தெரியல. பேசாமலேயே மொழிபடத்துல கலக்கின ஜோவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான்.  பூஜாவுக்கு பெரிய ஜே… ( பி. கு. : எனக்கு இதுவரைக்கும் அவர்மேல பெரிசா நாட்டம் இருந்ததில்லை)

அடுத்து பாலா தேடிக்கொண்ட முக்கியமான பலம் இளையராஜா. அவரைப் பற்றியோ அவருடைய இசையை பற்றியோ கருத்து சொல்லுகிற அளவுக்கு எனக்கு இசை அனுபவம் குறைவுன்னாலும் படத்தோட உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்னு சொல்கிற அளவுக்கு உரிமை இருக்கு.

ரொம்ப பெரிசா பேசப்பட்ட காசி காட்சிகள். நானும் நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா முதல் அரைமணிநேரத்திற்குள்ள காசி காட்சிகளே முடிஞ்சிடுது. ஆனா அந்த அரைமணி நேரமும் என்னை சீட்டு முனையில உட்கார வச்சு பார்க்க வச்சிட்டாரு பாலா. கதைக்கு தேவையான அளவு காசி வாழ்க்கையின் பரிமானங்களை ஒரு பாட்டிலும் சில காட்சிகளிலும் காட்டிவிட்டார். எரிகிற பிணங்களுக்கு நடுவுல இருந்து தவம் செய்கிற அகோரிகளை காட்டும் இடம் உடம்பெல்லாம் புல்லறித்துவிட்டது.

இயலாமையோடு இருக்கிற சிலர் இந்த படத்துல நிறைய நேரம் வரும்போதும் அவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்களுக்கு ஜெயமோகனுக்கு ஜே.  அவர்கள் கவலைகளையும் மறந்து சிரித்து வாழ்கிற விதங்களையும் பார்த்து நாம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நிறையவே எடுக்க வேண்டியுள்ளது.

பாலா கதை இப்படித்தான்னு தெரிஞ்சும் அவரது காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து திரையரங்குல எல்லாருமே கைதட்டினாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. எல்லாராலும் இதை ரசிக்க முடியுமான்னு எழும்பின கேள்விக்கு முடியும்னு பதில் சொல்லிட்டாங்க.

ஒரு கனமான கதையை எதிர்பார்த்து போனதாலோ என்னமோ தெரியல ஆனா படம் பார்த்துட்டு மனசெல்லாம் ஃப்ரெஷாவும், ஒரு புது வேகமும் வந்திருக்கு சோகம் குறைஞ்சு இருக்கு.

கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு வெளிவந்திருக்கிற படம் எடுக்கப் பட்ட முயற்சி வீண் போகல. இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத சிலருக்கு அவர்களது முடிவு ஏமாற்றம் தான்.

நம்பி பார்க்கலாம்… மீண்டும் கூட இன்னும் ஒன்றி பார்க்க உதவியா இருக்கும்.  ‘நான் கடவுள்’ குழுவுக்கு என் வாழ்த்துகள்.

Read Full Post »