Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வகையிலி’ Category

அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான்.  அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு.  ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு.  குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்

காதல காதல் அறியாமை உய்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை அந்த அரசன் அந்த விருப்பத்துக்குக்கூட தெரியாம நுகர வல்லவன் ஆனால் அவனை பகைவர்கள் அழிக்க வழியே இல்லைன்னு சொல்றாரு.

அவரு குற்றம்னு இந்த அதிகாரத்துல சொல்றது 6 அவை செருக்கு, சினம், காமம், கஞ்சத்தனம், மானம், உவகை…  இதுல கஞ்சத்தனம், மானம், செருக்கு இவற்றோட தீமைகளைப் பற்றி 8வது 9வது குறள்ல விளக்கினவரு கடைசி குறளை இப்படி அமச்சிருக்காரு.  அதாவது கோபம், காமம், உவகை மூன்றும் முற்றிலும் அழிக்க முடியாததால அந்த மூன்றையும் அந்த மூன்றுக்கும் அறியாம நுகர வேண்டுமாம்.  இதை நான் சொல்லல நம்ம  பரிமேல் அழ்கர் சொல்றாரு.  நல்லா இருக்கு இல்லை.

அப்போ சாமியாரா போகனும்னு நினைக்குற ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சா அவ மானம் அவளோட கொள்கை அழியாமல் காக்கப்படணும்னா இப்படித்தான அந்த காதலுக்கே அறியாமல் நுகர வேண்டியதா இருக்கும்.  வைரன் சரியான முறையில வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கிதானே எழுதி இருக்கான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.  இப்போ அந்த பாட்டைக்கேட்கும்போது அந்த பெண்ணுக்குள்ளேயே நம்மால போய்வர முடியும் இல்லையா?

Read Full Post »

இதோ ஆஸ்கார் விருது பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கு எனது நண்பன் அவரது சாதனைகளை வைத்து எழுதிய ஒரு சிறு கவிதை.  உங்கள் பார்வைக்காக. ஆங்கிலத்தில் முன்னுரை இருந்தாலும் கவிதை தமிழில்தான் குழம்பிவிட வேண்டாம்.

எனது மனங்கவர்ந்த தொலைக்காட்சி விளபரங்களைப் பார்க்க

இங்கே க்ளிக்குங்கள்

Read Full Post »

முத்தக்காவின் வற்புறுத்தலின் பேரிலும், ரொம்ப நாளா பதிவு எழுதனும்னு நினைச்ச தலைப்பாகவும் இருக்கவே நாம எல்லாம் சொல்ல மறந்த சில சொற்களை நினைவூட்டி எழுத ஒத்துக்கிட்டேன்.

ஆனா எழுத உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது சொல்லிலக்கணம் அவ்வளவு சுலபம் இல்லை ராசான்னு.  எங்களோட முந்தைய தலைமுறையினர் அவ்வளவு பேரும் மதுரை தாண்டி கோவில்பட்டி. அதுனால அவங்க பயன்படுத்திய பல சொற்கள் தெற்கு வட்டார கிளைமொழிக்கு உட்பட்ட சொற்களாகப் போனதால இப்போ பல சொற்கள் நாங்கள் பயன்படுத்துவதே இல்லை.

ஆனா எங்க ஆச்சி (எங்க ஊருபக்கம் அப்பாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான் அம்மாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான், இப்போ மனோரமா தவிர அங்க எல்லாரும் பாட்டி ஆயிகிட்டு வாராக என்ன செய்ய அதுலயும் நிறைய கிரானீஸ் உருவாகிகிட்டு வாராக.. ம்ம்) பேசினதையெல்லாம் நினைச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

பரண்ல இருக்க அந்த வாளியை எடுத்துதான்னு” எங்க ஆச்சி எங்க மாமாவை நச்சரிச்சது ஞாபகத்துக்கு வந்தது. இப்போ சென்னைல மட்டுமில்ல அங்கயும் அதிகமா லாஃப்ட்டும், பக்கெட்டும் தான் வளர்ந்து வருகுது.

இப்போ எல்லாம் ‘முத்தம் (முற்றம்)‘ வச்சு வீடு கட்ட இட வசதியே பற்றாம போயிடுச்சு அதுல எங்க வார்த்தைய ஞாபகம் வச்சுக்கிறது. சின்னதா ஒரு வாசல் வச்சு ரோட்டுமேல கோலம் போடுகிற கலாச்சாரம் தான பெருகி வருகுது.

எங்க ஆச்சி வீட்டுல ஒரு அழகான கிளி வளர்த்தோம். அது யாரு என்ன பேசினாலும் அப்படியே பேசும். முதல் தடவையா கிளியால அவ்வளவு பேச முடியும்னு தெரிஞ்சிகிட்டேன்.  ஊருக்குப் போகும்போதெல்லாம் எங்க ஆச்சி சொல்லுவாங்க ‘சுவத்துல கெவுளி/கவுளி (பல்லி) கத்துனாகூட இந்த கள்ளபயபுள்ள அது மாதிரியே கத்தும்’ . அதை ஏன் கள்ளப்பயபுள்ளன்னு சொன்னோம்னா அது நாங்க அதுகூட விளையாடலைன்னா எங்க சின்ன சின்ன பென்சிலை களவாண்டுட்டு (திருடிகிட்டு)  போயிடும்.  அப்போயெல்லாம் அந்தக்கிளியை ‘பவுசு(பவிசு-செருக்கு) கொழிச்சு ஆடாத கிளியேன்னு’ எங்க ஆச்சி எவ்வளவு வையும்(வைதல் – திட்டுதல்)எவ்வளவு அறிவு இல்லை ஆனா அது கூண்டுக்குள்ள போகவே போகாது. ஒரு தடவை ஊருக்குப் போனபோது அது இல்லை. ஆச்சியை கேட்டதுக்கு ‘களவானி கிளி… கூண்டுக்குள்ள போக மாட்டேன்னிடுச்சு. ஒருநா ராவுல(இரவுல) ஒரு வெரு (வெருகு – ஆண்பூனை; காட்டுப்பூனை) கவ்விகிட்டுப் போயிடுச்சு’.  அப்போதான் என் வாழ்க்கையிலேயே முதல் தடவையா ஆண்பூனைக்குன்னு தனியா வெருகுன்னு ஒரு வார்த்தை இருக்கிறதையே தெரிஞ்சிகிட்டேன்.

இதையெல்லாம் விட எங்க சித்தப்பாவுக்கு நாகர்கோயிலை சேர்ந்தைவங்களைத்தான் முடித்திருந்தோம். அந்த சித்தியோட மொழியில நாஞ்சில் தமிழ் நடனமாடும். எல்லாரும் அதுல மலையாள வாடை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் தொல் திராவிட மொழியில இருந்த பல தமிழ் சொற்களை நாஞ்சில் தமிழ் பாதுகாத்து வச்சிருக்கு. இப்போ எல்லாம் எங்க சித்தப்பா பிள்ளைங்களே யாரையும் ‘விளி‘க்கிறது இல்லை. கூப்பிடத்தான் செய்றாங்க.  அப்போதான் அவங்க பயன்படுத்துற வசவு(வசை- திட்டுதல்) ஏதாவுது இருக்கான்னு யோசிச்சு பார்த்தப்போ அடிக்கடி சொல்லுகிற ‘பட்டி‘ நினைவுக்கு வந்தது.  அதைப் பற்றி சொற்களஞ்சியத்துல போட்டிருக்கான்னு திருப்பி பார்த்தப்போ பட்டிக்கு பழந்தமிழ்ல இவ்வளவு அர்த்தங்கள் இருந்தது தெரிந்தது. சுவாரஸ்யமா இருக்கவே உங்கள் பார்வைக்கு. பட்டின்னா நமக்கெல்லாம் மன்னிக்கணும் எனக்கெல்லாம் தெரிந்தது நாய், சிற்றூர் மட்டும் தான். களவு, தெப்பம், மகன், விபசாரி, அட்டவணை, தெப்பம், ஆட்டுக்கிடை,பசுக்கொட்டில், விக்கிரமாதித்தனுடைய மந்திரி, பாக்குவெற்றிலைசுருள், பூச்செடிவகை, காவலில்லாதவர், சீலை, இடம் இப்படி இத்தனை அர்த்தத்தை மறந்ததைப் புரிஞ்சுகிட்டேன்.

இந்த காலத்துப் பெண்கள் சீலையையும் மறந்துட்டாங்க, இரவிக்கையையும் மறந்துட்டாங்க. மன்னிக்கணும் அந்த சொற்களைத்தான் சொல்கிறேன். எப்படி ஞாபகம் வச்சுப்பாங்க ஆம்பளைங்க சேரியும் ப்ளவுசும் தான வாங்கி தாராங்க.

அடுப்படிங்கிற வார்த்தையயே நாம எல்லாம் மறந்து தான போயிருக்கோம். மடப்பள்ளி என்கிற வார்த்தையெல்லாம் எங்க ஆச்சி காலத்துலயும் பயன்படுத்தினாங்க. இப்போ எல்லாம் கிச்சன் தானே. அதுக்கு மேல எங்க ஊர் பக்கம் உள்ளி (வெங்காயம்) என்கிற சொல்லின் வழக்கும் குறைந்தே வருகுது.

உள்ளின்னு சொன்னவுடனே எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வருகுது.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

ஊக்கமுடைமைல வரும். நாம் நினைக்க வேண்டியவை எல்லாம் உயர்வானதாக இருக்கணும்னு சொல்லும்போது இப்படி சொல்லுவாரு. உள்ளுதல் அப்படின்னா நினைத்தல், ஆராய்தல் போன்ற பொருள்ல பல இலக்கியத்துல பயன்படுத்தி இருக்காங்க. நினைத்தலுக்கு  இவ்வளவு அழகான ஒரு வார்த்தை தமிழில் இருந்து நாம அதை பயன்படுத்துறது இல்லையேன்னு நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்  போதே ‘திங்க்’ பண்ணதுண்டு.

இந்த இடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொமொரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருக்குறள்ல கல்லாமை அதிகாரத்துல

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்

அப்படின்னு ஒரு குறள் வரும். அதாவுது படிக்காதவன் சொல்லுகிற செய்தி நல்லது மாதிரி தெரிஞ்சாலும் படிச்சவங்க அவங்கள படிச்சவங்க கூட்டத்துல ஏத்துக்க மாட்டாங்களாம். இங்க படிக்காதவங்கன்னு சொல்வது அனுபவத்துலயும் கேள்விலயும் கல்விலயும் அறிவை சேத்துக்காதவங்கன்னு வச்சிகிட்டா நல்லா இருக்கும். நம்ம தலைவரோ தனுஷோ இல்லை.  இதை பரிமேலழகர் சொல்லும்போது அது எதுனாலன்னா அவங்க சொல்வது ‘ஏரல் எழுத்து போல்வதோர் விழுக்காடாம்’. அப்படின்னு சொல்லுவார். அதாவது நத்தை ஊர்ந்து போகும்போது மணல்ல எப்பவாவது அதுங்க போன தடம் எழுத்து மாதிரி தெரியலாம் அதுக்காக அது படிச்சிட்டு எழுதுச்சுன்னு ஏத்துக்கவா முடியும்.  ஏரல் நத்தைக்கான அழகான சொல் இல்லை. மேலும் இப்போ எல்லாமே பர்செண்டேஜ் தான் விழுக்காடு எங்க?

எங்க பக்கத்து வீட்ல…

திருமகனே திருமகனே நீயொரு நாழிகை நில்லாய்

வெண்ணிற புரவியில் வந்தவனே…ன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கு. புரவிங்கிறது கூட குதிரைக்கு அழகான வார்த்தை தான். அந்த வார்த்தையை மறக்காம இருக்க உதவி புரிஞ்ச வைரமுத்துவுக்கும் ஒரு சலாம்.

ஏதோ கடலோரத்தல நத்தை ஊர்ந்து போகிறமாதிரி என் நினைவலைகள்ல ஊர்ந்து போகியிருக்கேன். ஏரல் எழுத்து மாதிரி ஏதாவுது சில சொற்கள் உங்கள் பேச்சு வழக்கிற்கு இல்லைனாலும் எழுத்து வழக்கிலாவது மறக்காம இருக்க  உபயோகப்படும்னு நினைக்கிறேன். ஏதாவுது தப்பு இருந்தா ஏரல் எழுத்து தான்னு மறந்திடாதீங்க. ரைட்டா?

என் நினைவுகளைத் தொடர்ந்து இன்னும் மறந்து போன சொற்களை நினைவு படுத்த நான் அழைப்பது

சென்ஷி

என் பதிவுகளில் பல அறிய உண்மைகளைச் சொன்ன நாக இளங்கோவன்

மேலும் முன்னாள் அயன் ஆண்ட புர வாசி பாலபாரதி

Read Full Post »

ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகின்றேன்….

ஒரு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு இரெண்டு வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் வார்த்தைகளைத்தேட முடியவில்லை.

TRAVELLER, TOURIST இதுதான் அந்த இரெண்டு வார்த்தை.   பயணி, சுற்றுலா பயணி என்று சுலபமாகசொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அதன் முழு ஆன்மாவையும் கொடுக்கின்றதா என்பதுதான் சந்தேகம். Traveller என்பவன் தனது பயணத்தை வழக்கத்துக்கு மாறாக அமைத்து அவன் செல்லும் இடங்களின் கலாச்சார புவியியல் கூறுகளை பதிவு செய்பவன். ஹுவான் சுவான் ஒரு Traveller.  Tourist  என்பவன் தனது இன்பத்திற்காக வெறும் இன்பத்திற்காக மட்டும் சுற்றுபவன்.

இதை எப்படி தமிழில் ஒரே வார்த்தையில் சொல்லுவது ஏதேனும் வழி இருக்கா…

ரவிசங்கர் போன்றோர் தயவு செய்து உதவினால் நன்றாக இருக்கும்.

Read Full Post »

மார்கழி மாதம் முடிந்து வரும் வேளையில் அதோ புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் அந்த அமைதியான கிராமத்தை நோக்கி வேகமாக இரெண்டு வேன் சென்று கொண்டு இருக்கிறது. ஆம் மாங்குடி கிராமம் தான். உலகமயமாக்கல் என்று வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உலகப் பேருந்தை கடைசி நேரத்தில் இடம் பிடிக்கத் தவறிய ஒரு கிராமமாகத்தான் தோன்றியது. இந்த ஊரில் பள்ளிக்கூடம் கூட இருக்கிறதா என்று இரெண்டு மாதங்களுக்கு முன் “அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்” ஆய்வாளர்கள் சந்தேகத்தோடு வெயிலுக்கு ஒதுங்கினர். அதில் ஆரம்பித்தது தான் இந்த சுற்றுலா பயணிகள் போன்ற விருந்தாளிகள் கூட்டம். தினமணி, நக்கீரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற சஞ்சிகைகளின் பசிக்கு உணவாக அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். இந்தப் பதிவு சென்ற மாதமே வெளியிட வேண்டியது. தாமதத்திற்கு கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்.

பஞ்சாயத்து யூனியன் மத்திய பள்ளி அங்கே இயங்கி வரும் விதம்தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. எட்டு வாத்தியார்கள், இருநூற்று ஐம்பது மாணவர்கள் இவ்வள்வுதான் அந்தப்பள்ளிக்குள் இருக்கும் நடமாட்டம்.ஆனால் அவர்களுடையபொறுப்பு எந்த ஒரு கல்வித்துறை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கும் முன்மாதிரியாக அமைகின்றது. இத்தனைக்கும் அந்தப்பள்ளியை நான் நேரில்பார்க்கவில்லை. ஆனால் “இந்திய சமூக அறிவியல் காங்கிரஸ் 2006″ல் அவர்களுடைய சாதனை குறித்து ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதைநேரில்கண்டவன் என்றபெயரில் இந்தப்பதிவை எழுதுகிறேன்.

பள்ளியில் இருக்கும் நூலகம் என்பது அனைவருக்கும் தெரிந்த கோத்ரெஜ் பீரோ தான். அதைக்கூட வாத்தியார் உபயோகித்தால் புத்தகம் பழுதாகிவிடும் என்று பூட்டி பத்திரமாக வைத்திருப்பார். ஆனால் முதல் முறையாக இந்தப் பள்ளியில் தான் குழ்ந்தைகள் அக்கறையாக அனைத்துப்புத்தகங்கள், இதழ்களைப் பொறுப்போடு படித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கவே பொறாமையாக இருந்தது. அனைத்து வகுப்புகளுள்ளும் ஒரு டி.வி., வி.சி.டி. இத்தனைக்கும் ஒரு நகவெட்டிகூட வைக்கப் பட்டிருக்கிறது. யாராவது நகம் வெட்டாமல் இருப்பதைப் பார்த்தால். நண்பர்கள் வெட்டி விட வேண்டுமாம். தபால் பெட்டி வேறு. வாரம் ஒரு முறை ஒரு வகுப்பில் இருந்து மறு வகுப்பிற்கு கடிதம் எழுத வேண்டுமாம். உட்கார்ந்து சொந்தமாக வாக்கியம் அமைத்து எழுதினால் தான் குழந்தைகளின் மொழி வளம் பெறும் என்கிறார் அந்தப் பள்ளியின் முதல்வர் திரு ஜோதிமணி. (கீழே புகைபடத்தில் இருப்பவர்).

img_0107.JPG

பள்ளிகளில் கழிவறை உபயோகித்து பழக்கம் உண்டா. அதுவும் கிராமத்துப் பள்ளிகளில. கண்டிப்பாக உங்களுடைய அனுபவம் மோசமாகத்தான் இருந்திருக்கக் கூடும். ஆனால் கூட்டு முயற்சியில் இவ்வளவு சாதிக்கலாம் என்று நிறுவியிள்ளார். எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்,’காந்திஜிக்கு கழிவறைகள் சுத்தமாக இல்லாததைப் பற்றி குறை சொல்ல நேரம் இருந்ததில்லை ஆனால் சுத்தம் செய்ய எவ்வளவோ நேரம் இருந்தது’ என்று. ஆம் அதை ஒரு நிமிடம் நினைத்து வெட்கிப் போனேன். இதோடு மட்டுமில்லாமல் இன்னும் மரங்களை பேணி வளர்த்தல், பெற்றோர் ஆசிரியரின் உபயோகமான சந்திப்பு, குழந்தைகளின் கையெழுத்தை மேன்படுத்த சிறப்பு graphology வகுப்புகள் என்று எவ்வளவோ நடைமுறையில் இருக்கும் புதுமைகள். இத்தனைக்கும் நம் கதையின் நாயகர் திரு. ஜோதிமணிதான் காரணம். இது நடைபெறுவதே ஒரு அதிசயமாக இருந்தால், அனைத்தும் ஒரு குக்கிராமத்தில்் நிகழ்தல் இன்னும் ஒரு அதிசயம். முடியும் என்று நினைத்தால் வானத்தையும் கடக்கலாம் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம்.

img_0109.JPG

இன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு அங்கே நடப்பனவற்றை கற்றுக் கொண்டு வருகிறார்களாம். மூடுபனி முடியும் காலம் நெருங்கிவிட்டது. டெல்லியில் கூடிய விரைவில் ‘அனைவருக்கும் கல்வி திட்டம்’ நிறுவனத்தில் இவரது சாதனை அரங்கேறப்போகிறது.நமக்கும் இன்னும் ஒருபெருமைதானே!

Read Full Post »

அட நான் சொல்ல வந்தது என்னன்னா..!

காரைக்குடியில் போன வாரம் இந்திய சமூக அறிவியல் மாநாடு அழகப்பா பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதில் கல்வி துறை சம்பந்தமாக ஒரு ஆய்வறிக்கை கொடுக்க நேர்ந்தது அதற்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “வலைப்பூக்கள் நமது கல்விக்கான ஒரு மாற்று சாதனம்”. ஆம் blogs என்பவை கடந்த பத்து ஆண்டுகளில் தான் இப்படி தோன்றி பெருமளவில் வளர்ந்து  வந்துள்ளன. மேலை நாடுகளில் கல்வித்துறையில் இவை இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே பயன்படுத்தப் பட்டு வருகின்றன. உளவியலில் வளரும் குழந்தைகளுக்கு இப்பதிவுகள் தரும் எண்ணற்ற வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சிகள் வெளியாகி உள்ளது.  அப்படி இருக்க இந்தப் பதிவுகள் உலக அரங்கில் செய்து வரும் கணக்கில் அடங்கா சேவையை நாம் மறக்க முடியுமா?

வலைப்பூவின் பின்னணியில் ஒரு வகுப்பு  வடிவமைத்து அரசாங்க பள்ளிகளில் அதை செயல் படுத்தி நமது கல்வித்துறையின் தரத்தைக் கூட்ட எனக்கு ஆசை. அதை நான் படித்த கன்னட சங்க பள்ளியில் (சென்னை மாநகராட்சியில்) கேட்டு இருந்தேன். முதலில் ஒத்துக்கொள்வது போல் இருந்தாலும், பின்பு “கல்விக்கூடங்களில் இன்டர்நெட்டா பசங்க கெட்டுப் போயிடுவாங்க”எனறு காரணம் காட்டி மறுத்துவிட்டனர். முடிவில் அரந்தாங்கியை அடுத்து உள்ள மாங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துப் பள்ளியின் முதல்வர் திரு ஜோதிமணி அவர்கள் அதை ஒரு சோதனை முயற்சியாக அமுல் படுத்த ஒத்துக் கொண்டார். மாநாட்டில் அவரைக் குறித்தும் அவரது பள்ளி குறித்தும் “அனைவருக்கும் கல்வித் திட்டம்” மேற்பார்வைக் குழுவினர் ஒரு ஆய்வறிக்கை செலுத்தினர். அதன் விவரங்கள் வர இருக்கின்றன.

சரி நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்த வலைப்பதிவர்கள் பெரும்பாலும் கணிப்பொறி தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிபவர்களாகவே இருக்கின்றனர். சிறுபான்மையினர் இலக்கிய ஆர்வலர்களாக, இலக்கிய வட்டாரத்தினராக இருந்து வருகின்றன்ர். இந்த நிலையில் இவை அனைத்தும் பொழுது போக்கு சமாச்சாராமாகத் தான் அதிகம் பயின்று வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனது விண்ணப்பம், தமிழ்மணம், தேன்கூடு போன்றவை பொழுது போக்கு அம்ஸங்களில் இருந்து விரிந்து இன்னும் தீண்டப்படாத அடிப்படைக் கல்வித்துறை போன்ற துறைகளில் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். edublog forums   போன்றவை நம்  நாட்டு கல்வியாளர்கள், மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள், ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் போன்றோரையும் இணைக்க முயலலாம். வலையுலகில் இப்படி ஒரு உயிர்ப்புள்ள நனவு வாழ்க்கை இருப்பதே இன்னும் பலருக்குத் தெரியவில்லை. இப்படி அனைவரையும் இதற்குள் இழுத்துப் போட்டால் கட்டாயம் தரம் தொலைந்து போகாது, மாறாக அனைவருமே தரத்தை நோக்கியே போக வேண்டியது இருக்கும் என்பது எனது தாழ்வான கருத்து.

இந்தச் சூழலில் வலைப்பூக்கள் தேவைதான் என்பது எனது வாதம். தங்களுடையது?

Read Full Post »

                 இன்று தமிழ்கத்தில் இருந்து எனது கல்லூரி பேராசிரியை டெல்லிக்கு ஒரு நேர்முகத் தேர்விற்காக வந்திருந்தார். எனக்கு இங்கு வேலை அதிகமாக இருந்ததால் என்னால் அவரை விமான நிலையம் சென்று அழைத்து வர முடியவில்லை. அவருக்கு ஹிந்தி வேறு தெரியாததால் அவருடைய இன்னொரு வடக்கத்திய மாணவரைச் சென்று அழைத்து  வர சொல்லி இருந்தேன். பேராசிரியையது வேலை முடியும் நேரத்திற்கு அவரைச் சென்று சந்திக்கலாம் என்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் யூ.ஜி.ஸி அலுவலகம் சென்றிருந்தேன். அந்த ஹரியானாவைச் சேர்ந்த மாணவரை இன்றுதான் முதன் முறை சந்தித்தேன். வயது 36 இருக்கும். இங்கே ஒரு பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறாராம். தற்சமயம் என் ஆசிரியரின் கீழ் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். என்னைச் சந்தித்தும் மிகுந்த மகிழ்ச்சியோடு இன்று நான் சொல்கிற இடத்தில் ஒரு நல்ல தென்னிந்திய உணவு சாப்பிடலாம் என்று யோசனை சொன்னார். நானும் நமது பேராசிரியரும் சைவம் என்பதால் அருகே “கன்னாட் ப்லேஸி”ல் இருக்கும் சரவண பவனில் சாப்பிட முடிவெடுத்தோம். அவரும் சென்னையில் தான் சாப்பிட்டிருப்பதாகவும், உணவு சுவையாக இருக்கும் என்று மகிழ்ச்சியோடு கிளம்பினார்.

                அங்கு நான் ஒரே ஒரு முறை தான் சம்பளப் பணம் மீந்து போனதால் நண்பர்களோடு சென்றிருக்கிறேன். மிகவும் அதிகமான் விலையில் நமது தமிழ்நாட்டு அளவிற்கு சுவை இல்லாத சாப்பாட்டை ஏன் சாப்பிட வேண்டும் என்று நாங்கள் வீட்டிலேயே சமைத்து விடுவோம். அதனால் எனக்கு வழி கூட மறந்து போனது. ஒரு வழியாக அந்த “கோல் சக்கரை” அவருடைய வண்டியிலேயே சுற்றி வந்து ஓட்டலைக் கண்டுபிடித்தோம்.

               அவர் என்னையும், மேடத்தையும் உள்ளே அமரச் சொல்லிவிட்டு வண்டி நிறுத்த சென்று விட்டார். நாங்கள் உள்ளே சென்று பார்த்தால் அங்கு மூவர் அமர இருக்கையே இல்லை. வந்து சென்ற சர்வரும், 10 நிமிடம் நில்லுங்கள் இருக்கை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னான். எனது பேராசிரியை கூட “கல்யாண வீட்டில் தான் மொய் எழுதிவிட்டு சாப்பிட க்யூவில் நிற்க வேண்டும். டெல்லிக்கு வந்தும் அந்த நிலையா” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

                சற்று நேரத்திற்கெல்லாம் இடம் கிடைக்கவே மூவரும் அவரவ்ர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ரெண்டு அளவுச் சாப்பாடு, ஒரு குட்டிச் சாப்பாடு, மூன்று ஆரஞ்ச் ஜூஸ் முடித்தோம். சாப்பாடு என்ற பெயரில் ஒரு சின்ன கிண்ணத்தில் தான் சாதம், அதை வேறு சாம்பார், ரசம், பருப்பு, காரக்கொழம்பு, தயிர், மோர் என எல்லாவற்றோடும் பங்கிட்டு சாப்பிட   வேண்டுமாம். ஒரு வழியாக வணிகமயமாக்கல் குறித்து வயிறு எறிந்து கொண்டே சாப்பிட முடிந்தது.

                  எல்லாம் முடிந்த பிறகு நான் கை கழுவி விட்டு வருவதற்குள் அந்த ஹரியானா நண்பரே தான் பணம் கட்டுவேன் என்று அடம் பிடித்து ஐந்நூறு ரூபாயைக் கட்டி முடித்தார். அப்பொழுது அருகே இருந்த மினரல் வாட்டர் கேன் செறுகப் பட்டிருந்தக் குழாயைப் பார்த்து என் ஆசிரியை “இந்தத் தண்ணி நன்னா இருக்கு இதையே என் பாட்டிலில் நிரச்சுடறேன்” என்று சென்றார். அதற்குள் நண்பர் “யூ கிவ் இட் மேடம் ஐ வில் ஃபில் ஃபார் யூ”என்று பிடுங்கி நிரப்பிக் கொண்டிருந்தார். அதற்குள் அங்கே இருந்த மேலாளர் அவர் கையைப் பிடித்துக் கொண்டு “திஸ் இஸ் மினரல் வாட்டர். யூ ஷுட் நாட் டேக் இட்” என்று ஏதோ கொலைக் குற்றம் செய்வது போல் கடினமாகப் பேசி விட்டார். எனது மேடத்திற்கு சுள் என்று கோபம் தலைக்கு ஏற “யூ ப்லீஸ் டோன்ட் டேக் எனிபடி டு திஸ் ஓட்டல்”என்று கோபமாகக் கூறிவிட்டு இறங்கி விட்டார். அந்த நண்பர் பாவம் குழந்தை போல் “யூ வெயிட் ஹியர் மேம் ஐ வில் ப்ரிங் த கார்”என்று மிகச் சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.

                ” நான் அந்த மேலாளரிடம், ஏம்பா இல்லை இவ்வளவு காஸ்ட்லியான் ஓட்டல் நடத்துறீங்க இந்தத் தண்ணியில தான் உங்க பிழைப்பே போகப் போகுதா. அப்படியே உனக்கு இதை அனுமதிக்க அதிகாரம் இல்லையென்றாலும், அதை நீ நிதானமாகச் சொல்லலாமே. ஏதோ பிழைப்புக்கு வழி இல்லாம் உன் கிட்ட கை யேந்தி நிற்கிற மாதிரி நடத்துறியே”என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். நான் சொன்ன விஷயம் எதுவும் அவன் காதில் ஏறி இருக்காது. அவன் கோபமாகவே நாங்கள் வெளியேறுவதைப் பார்த்து இருந்தான்.

                 பன்னாட்டுத் தொழில் செய்யும் ஓட்டல்காரர்களே நமது பண்பாட்டை மறக்காமல் நடத்தினீர்கள் என்றால் நமது ஊர் மானம் காப்பாற்றப் படும். வணிகமயமாக்கலில் மானுடம் கொல்லப் பட வேண்டமே ப்லீஸ்……..

Read Full Post »

ஐரோப்பாவின் சிறந்த படைப்பியக்க விருது பெற்ற விளம்ப்ரம் ஒன்றைப் பார்த்தேன். பின்பு தான் தெரிந்தது காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா….

இதோ எனது பதிவுலக நண்பர்களுக்காக…..

கீழே கிளுக்குங்கள்..

http://www.epica-awards.org/assets/epica/2004/winners/film/flv/11071.htm

Read Full Post »

நன்றி ஐயா…..!

தேன்கூடு போட்டிக்கான “நேற்று இது நடந்து இருந்தால்” கதைக்கு 10 ஓட்டுகள் போட்டு 80 கதைகள்ல தொலைந்து போகாம என் மானம் காப்பாற்றிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றி ஐயா…. நன்றி!

இந்த மாதத் தலைப்பு உறவாம்…. போட்டியில ஜெயிச்ச நம்ம நிலா அக்கா தலைப்பு கொடுத்திருக்காங்க….எந்த உறவைப்பத்தி எழுத….எப்படி எழுத ஒரே கொழப்பமா இருக்கு… பார்ப்போம்……

நீங்க யாராவது ஒரு ப்லாட் கொடுங்களேன்…..

Read Full Post »